Home /News /local-18 /

விழுப்புரம்:  சிறுவன் மர்ம மரணம் -  அடையாளம் தெரிந்தால் தெரிவிக்க போலீஸ் வேண்டுகோள்

விழுப்புரம்:  சிறுவன் மர்ம மரணம் -  அடையாளம் தெரிந்தால் தெரிவிக்க போலீஸ் வேண்டுகோள்

விழுப்புரம்:  சிறுவன் மர்ம மரணம்-  அடையாளம் தெரிந்தவர்கள் போலீஸை அணுகலாம்

விழுப்புரம்:  சிறுவன் மர்ம மரணம்-  அடையாளம் தெரிந்தவர்கள் போலீஸை அணுகலாம்

விழுப்புரம் நகரப் பகுதியான மேல தெருவில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் சலவைக் கடையில் 5 வயது மதிக்கதக்க சிறுவனின் சடலம் கிடந்தது.

    விழுப்புரத்தில் 5 வயது சிறுவன், சலவை வண்டியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம், காவல்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது. சிசிடிவி பதிவுகள் இருந்தும் யாரென்று தெரியாமல் விசாரணையில் ஈடுபட்டுவருகிறார்கள்.

    இதனால், இதுகுறித்து தகவல் தெரிந்தால் போலீஸை அணுகி தகவல் கொடுக்கலாம் என்று செல் நம்பர்களும் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

    விழுப்புரம் நகரப் பகுதியான மேல தெருவில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் சலவைக் கடையில் 5 வயது மதிக்கதக்க சிறுவனின் சடலம் கிடந்தது. இதையடுத்து மேற்கு காவல் நிலைய போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றினர். முண்டியம்பாக்கத்திலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனின் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள் இரண்டு நாட்களுக்கு மேலாக உணவின்றி இருந்ததால் சிறுவன் இறந்ததுள்ளதாக தெரிவித்தனர். ஆனால், அச்சிறுவன் யார் என்பது தெரியவில்லை.

    இதனையடுத்து, இறந்த சிறுவன் குறித்து தகவலறிந்து பெற்றோர்கள் யாரேனும் உடலை பெற வருவார்கள் என எதிர்பார்த்த நிலையில், இதுவரை யாரும் உடலை கோராமல் உள்ளனர். இந்நிலையில், விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்ததில் இரண்டு நபர்கள் இறந்த சிறுவனை தோளில் தூக்கி போட்டு கொண்டு நடந்து வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து, சிறுவனை தூக்கி வந்த இரண்டு நபர்கள் யார் என்பது குறித்து சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரனை செய்து வருகின்றனர். சிறுவன் இறந்து கிடந்த வழக்கில் 4 தனிப்படை போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.



    இரவு முழுவதும் சிறுவனின் உடலை எங்கு போடுவது என்று தெரியாமல், சுற்றி வந்து மேல் தெருவில் உள்ள சலவை வண்டியில் சிறுவனின் உடலைப் போட்டு, மீண்டும் புதிய பேருந்து நிலையம் வந்து சென்றது குறித்து அன்றைய தினத்தில் விழுப்புரம் பேருந்து நிலையத்திற்கு வந்து சென்ற பேருந்துகளின் ஓட்டுனர்கள் நடத்துனர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு தனிபடை போலீசார் நரபலிக்காக சிறுவன் கொல்லப்பட்டானா, அல்லது வெளி மாநிலத்தில் இருந்து பிச்சை எடுக்க வைத்து சம்பாதிக்க கடத்தப்பட்டானா? சிறுவன் இருநாட்களாக உணவின்றி இருந்ததால் இறந்தானா என பல்வேறு கோணத்தில் விசாரனை செய்து வருகின்றனர்.

    சிறுவன் உடலை விழுப்புரம் நகர பகுதி முழுவதும் தோளில் சுமந்தபடி சென்ற இருவரும் சிறுவனை தள்ளுவண்டியில் போட்டுவிட்டு, திரும்ப புதிய பேருந்துநிலையம் வரை சாலையில் நடந்து வந்தபோது கண்ணீருடன் இருவரும் நடந்து செல்வதால் சிறுவன் இறந்த சம்பவத்தில் போலீசாருக்கு குழப்பம் ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் அருகிலுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் பகுதியை சார்ந்தவரகளாக இருவரும் இருக்க கூடுமா அல்லது வடமாநிலத்தைச் சார்ந்தவர்களாக இருக்க கூடுமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில், சிசிடிவி காட்சிகளில் உள்ள இருவர் குறித்து தகவல் தெரிந்தால் விழுப்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சிறுவன் இறந்து கிடந்த வழக்கில், அரசு சார்பில் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் இயங்காததால் கடைகளில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டு போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.

    இந்த வழக்கில் சிறுவன் எதற்காக இறந்தான்? பெற்றோர்கள் யாரும் உடலை கோரவில்லை? சிசிடிவி காட்சி பதிவுகள் இருந்தும் சிறுவனை தூக்கி வந்தவரக்ளை போலீசாரால் பிடிக்க முடியவில்லை ஏன்? என்பது காவல் துறையினருக்கு இவ்வழக்கு சவாலாக இருந்து வருகிறது.

    இதுகுறித்த, விழுப்புரம் மாவட்ட காவல்துறையோ, கடந்த 14.12.21 ம் தேதி இரவு விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் டவுனில் சுமார் நான்கு வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தையின் பிரேதம் கண்டெடுக்கப்பட்டது இதுவரையில் அந்த குழந்தையை யாரும் உரிமை கோரவில்லை. தீவிர முயற்சி செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இரண்டு நபர்கள் அந்த குழந்தையை விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து நடந்து சம்பவ இடத்திற்கு எடுத்துச் சென்று வைத்து விட்டு மீண்டும் விழுப்புரம் பேருந்து நிலையத்திற்கு திரும்பி விடுகிறார்கள். குழந்தையின் புகைப்படம் மற்றும் குழந்தையை எடுத்து வந்தவர்களின் புகைப்படம் ஆகியவற்றை இணைத்து அனைத்து குழுவிற்கும் அனுப்பி வைக்கிறோம். அடையாளம் கண்டு தகவல் தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். தொடர்பு கொள்ள வேண்டிய எண் -9498151875,9865490880 மற்றும் 9498153663 தனிப்படை உதவி காவல் ஆய்வாளர், 0414-6222172- மாவட்ட தனிப்பிரிவு காவல் அலுவலக எண்களுக்கு தொடர்புகொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Suresh V
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி