தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான வாக்குச்சாவடி, வாக்கு எண்ணிக்கை மையம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை விரைவுபடுத்தியுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வழக்கத்தை விட கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, திருச்சி மாவட்டத்தின் 9 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தேர்தல் பணிக்கு அழைப்பு விடுத்து, பயிற்சி வகுப்பிற்கு வராத அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு தேர்தல் பணிக்கு வராத காரணத்திற்கு விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் /தேர்தல் அலுவலர் சிவராசு கடிதம் அனுப்பியுள்ளார். கடிதத்தை ஏற்று தேர்தல் பணிக்கு வந்தால் எந்த நடவடிக்கையும் இருக்காது என்றும் பணிக்கு வரவில்லையென்றால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளதால் அதிர்ச்சியடைந்து,
விளக்க கடிதம் பெற்ற ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் உள்ளோர், உடல் நலக்குறைவானர்கள் என பலரும் தங்க நிலையை எடுத்துக் கூறி தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க கோரியுள்ளனர். மாவட்ட ஆட்சியரின் கடிதத்தால் பதற்றமாகி பலரும் ஒரே நேரத்தில் கூடியதால் அப்பகுதியில் பரபரப்பாக இருந்தது.