திருச்சி திருவானைக்காவலில் மதுக்கடையில் மது வாங்கும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிய மற்றொரு வாலிபரையும் அவரது நண்பர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி திருவானைக்காவல் டிரங் ரோட்டில் மதுபானக் கூடங்களுடன் இணைந்த இரண்டு டாஸ்மாக் கடைகள் ஒரே இடத்தில் இயங்கி வருகின்றன. நேற்றிரவு, 8.30 மணியளவில், திருவானைக்காவல் மேலக் கொண்டயம் பேட்டையை சேர்ந்த ராஜேஷ்கண்ணன் (22) என்ற வாலிபர் மது வாங்க சென்றுள்ளார்.
அவர் வரிசையில் நின்றபோது, அங்கு ஏற்கனவே நின்றிருந்த, திருவானைக்காவல் திம்மராய சமுத்திரத்தை சேர்ந்த வசந்த் என்ற வாலிபருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த வசந்த், அவர் இடுப்பில் மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளால் ராஜேஷ் கண்ணனை வெட்டியுள்ளார்.
மேலும், தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் ஏறிய வசந்த், வீச்சரிவாளை சுழற்றியபடியே அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
கையில் வெட்டுப்பட்ட ராஜேஷ் கண்ணன் கொடுத்த புகாரையடுத்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, வசந்த் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர். இதுகுறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரபரப்பான சாலையில் இளைஞர் ஒருவர் வீச்சரிவாளை சுற்றிக்கொண்டு பைக்கில் செல்லும் காட்சி அந்த கடையில் இருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கடைக்குள் இளைஞர்கள் வந்து செல்லும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகளைக் கொண்டு, மூன்று வாலிபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.