கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றம் - தேனி மாவட்ட மக்கள் அசத்தல் 

தேனி மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் ஆர்வம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தேனி மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் ஆர்வம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

 • Share this:
   மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் தொய்வு ஏற்பட்டு இருபத்தி ஏழாவது இடத்தில் இருந்த தேனி மாவட்டம், தற்போது தரவரிசை பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.

  தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்றிற்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு தேனி மாவட்ட மக்களுக்கு அதிகளவில் ஏற்பட்டுள்ளது எனலாம். தேனி மாவட்ட மக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி  செலுத்தி கொள்கின்றனர் . கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனி மாவட்டம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில்  மாவட்டம் முழுவதும் 410 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தேனி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 95 இடங்களில் தடுப்பூசிமுகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் 95 முகாம்களுக்கு 23 ஆயிரத்து 800 தடுப்பூசி மாவட்ட நிர்வாகம் சார்பில் பகிர்ந்தளிக்கப்பட்டது.

  இதுவரை தேனி மாவட்டத்தில் மொத்தம் 6 லட்சத்து 31 ஆயிரத்து எண்பத்தி எட்டு பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி முதல் தவணை தடுப்பூசி 4 லட்சத்து 78 ஆயிரத்து 882 பேருக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 206 பேருக்கும் செலுத்தப்பட்டு உள்ளது.

  இதேபோன்று தேனி மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் ஆர்வம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தேனி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்துவதற்கான விழிப்புணர்வை தூண்டும் வகையிலும் பல பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் ஊக்கம் அளித்தும்,அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்து 317 கர்ப்பிணிகளுக்கும், 6278 பாலூட்டும் தாய்மார்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

  மாற்றுத்திறனாளிகள் :-

  இதேபோன்று தேனி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சுமார் 12 ஆயிரம் பேர் உள்ளனர். கடந்த மாதம் மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் தொய்வு ஏற்பட்டு வந்தது. கடந்த ஜூன் மாதம் 16 ஆம் தேதி நிலவரப்படி மாவட்டத்தில் 776 மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருந்தது. அப்போது தமிழக அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தியதில் தேனி மாவட்டம் இருபத்தி ஏழாவது இடத்தில் இருந்தது. இதனால் தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

  தேனி மாவட்டம் 3வது இடம் :-

  இதனையடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. அந்த பணிகள் தற்போதும் மும்முரமாக நடந்து வருகிறது. இதுவரை 9 ஆயிரத்து 419 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தியதில் தேனி மாவட்டம் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்து உள்ளது.

  ஊக்கமளிக்கும் விதமாக உள்ளது :-

  இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன்
  கூறுகையில்," கொரோனா பெரும் தொற்றிற்கு தேனி மாவட்ட மக்கள் அனைவரும் தயங்காமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு. அதற்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறோம். மாவட்டத்தில் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் 2 டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொள்ள வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான தடுப்பூசி செலுத்தும் விகிதம் குறைவாக இருந்தபோது அதனை துரிதப்படுத்த முயற்சி செய்தோம். தற்போது வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசியை வழங்கி வருகிறோம். இதனால் தேனி மாவட்டம் தரவரிசையில் முன்னேறியது மகிழ்ச்சி அளிக்கிறது. இது அரசு துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது" என்றார்

  செய்தியாளர்: சுதர்ஸன்
  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Ramprasath H
  First published: