மதுரை அழகர்கோவில் திருக்கல்யாண வைபவத்தை இணையதளம் வாயிலாகவே காணுமாறு பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இதன் மூலம், இந்தாண்டும் சித்திரை திருவிழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி இருக்காதோ என்கிற சந்தேகம் பக்தர்களிடம் எழுந்துள்ளது.
மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் திருக்கல்யாண திருவிழா நாளை (மார்ச் 28) காலை 11 மணி அளவில் கோவில் வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் நேரில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால், இந்தாண்டு வீட்டிலிருந்தே இணையதளம் வாயிலாக திருக்கல்யாண வைபவத்தை காணுமாறு கோவில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
www.tnhrce.gov.in , www.alagarkovil.org ஆகிய இணையதளங்கள் மற்றும் யூ டியூப் மூலம் பக்தர்கள் வீட்டிலிருந்தே தரிசனம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை எழுந்து வருவதன் காரணமாகவே இந்த நடவடிக்கையை நிர்வாகம் மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. இதே போல, வரும் ஏப்ரல் 15 முதல் 30 வரை நடைபெற உள்ள சித்திரை திருவிழாவிற்கும் பக்தர்கள் நேரில் வருவதை தவிர்க்கும் நடவடிக்கையை கோவில் நிர்வாகங்கள் மேற்கொள்ளுமோ என்கிற சந்தேகம் எழுந்ததுள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா பெருந்தோற்று பாதிப்பின் காரணமாக, வரலாற்றில் முதன்முறையாக சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது. பக்தர்கள் இல்லாமல் கோவில் வளாகங்களிலேயே திருவிழா வைபவங்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.