கலைச்சேவை செய்து சம்பாதித்த பணத்தைக் கொண்டு மக்களுக்கு சேவை செய்யவே நானும், கமலும் அரசியலுக்கு வந்துள்ளோம் - சரத்குமார்

கலைச்சேவை செய்து சம்பாதித்த பணத்தைக் கொண்டு மக்களுக்கு சேவை செய்யவே நானும், கமலும் அரசியலுக்கு வந்துள்ளோம் - சரத்குமார்

சரத்குமார் மற்றும் மகேந்திரன்

ஓட்டு வாங்குவதற்காக சாதி தலைவர்களை உருவாக்கி மக்களை பிரித்தது இந்த திராவிட இயக்கங்கள்தான் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கமலும் ,நானும் கலை சேவை செய்து சொந்தமாக சம்பாதித்த பணத்தை கொண்டு மக்களுக்கு சேவை செய்யவே அரசியலுக்கு வந்திருக்கின்றோம் என சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் கோவையில் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார்.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் கமலஹாசனுக்கு ஆதரவாகவும், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மகேந்திரனுக்கு ஆதரவாகவும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று உடையம்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய சரத்குமார், மக்களின் வாழ்வாதாரத்தை ஆட்சியில் இருந்த அரசியல் கட்சிகள் உயர்த்துவது இல்லை எனவும் அவர்களுக்கு அரசியல் வியாபாரம் என தெரிவித்தார்.

நானும் கமலும் கலை சேவை செய்து சொந்தமாக சம்பாதித்த பணத்தை கொண்டு மக்களுக்கு சேவை செய்யவே வந்திருக்கின்றோம் என தெரிவித்த அவர், கல்வியாளர் பாரி வேந்தர், ம.நீ.ம தலைவர் கமல் , நான் அனைவரும் இணைந்து இந்த தேர்தலை சந்திக்கின்றோம் என தெரிவித்தார். 25 ஆண்டு காலம் அரசியல் அனுபவம் எனக்கு இருக்கின்றது எனவும், அப்போது தொலைக்காட்சி, ஊடகங்கள் ஆகியவை நிறைய இல்லாததால் என்னுடைய சேவைகள், போராட்டங்கள் மக்களுக்கு சரியாக சென்றடைவில்லை என சரத்குமார் தெரிவித்தார்.

எனது அரசியல் பயணம் நீண்ட நெடிய பயணம், திமுக, அதிமுக வில் இருந்துள்ளேன் என கூறிய சரத்குமார் நான் பேப்பர் போட்டு, சைக்கிள் கடையில் வேலை பார்த்து, பத்திரிகையாளராக வேலை பார்த்து, நடிகனாகி இந்த நிலைக்கு வந்திருக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

ஜெயலலிதா கொடுத்த மரியாதை காரணமாகவே 10 ஆண்டு காலம் அதிமுகவுடன் இருந்தேன் என கூறிய அவர், இப்போ இருப்பவர்கள் நிறைய வசதியாகிவிட்டார்கள் எனவும் தெரிவித்தார். ஓட்டு வாங்குவதற்காக சாதி தலைவர்களை உருவாக்கி மக்களை பிரித்தது இந்த திராவிட இயக்கங்கள்தான் என கூறிய அவர், எங்கள் கூட்டணி முயற்சி ஒரு விதைதான், இது விருட்சிகமாக உயரும் எனவும் தெரிவித்தார்.

Also read... அறப்போர் இயக்கத்திற்கு எதிராக அமைச்சர் வேலுமணி தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்...!

பா.ஜ.க வானதி சீனிவாசன் கமலஹாசனுக்கு என்ன அனுபவம் இருக்கின்றது என கேட்கின்றார், நான் எம்.எல்.ஏ ஆன போது அனுபவமில்லை, ஆனால் நான் சிறப்பாக பணியாற்றினேன், அதுபோலதான் கமலும் என கூறிய சரத்குமார், சுதந்திரம் அடைந்து 70 ஆண்டு காலத்திற்கு மேலாகியும் இன்னமும் சாக்கடை வீட்டிற்கு முன்பாக ஓடுகின்றது, கோவையில் இன்னும் சரியான சாக்கடை வசதி இல்லை எனவும் தெரிவித்தார்.

காசு வாங்கிட்டு ஓட்டு போட்டால் வருங்கால தலைமுறை ஏமாந்து போகும் என கூறிய அவர், திமுக தேர்தல் அறிக்கையில், காவல் துறையினர் பணியின் போது உயிரிழந்தால் ஒரு கோடி நிவாரணம் என அறிவித்து இருப்பது வரவேற்கதக்கது. ஆனால் ஸ்டாலினின் மகன் காவல் துறையை மிரட்டுகின்றார், இவர்கள் வந்தால் நாடு என்னாகும் என கேள்வி எழுப்பினார். எனக்கும் முதல்வர் ஆசை இருக்கும். அதற்கான காலம் வரும் போது பார்த்துக்கலாம் என கூறிய சரத்குமார், இரு கட்சிகளையும் அகற்ற வேண்டியதுதான் இப்போது முக்கியம் என பிரச்சரத்தின் போது சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: