இங்கிலாந்து கிரிக்கெட் கிளப்புகளில் யார்க்ஷயர் கிளப்தான் மிக மிக மோசமான நிறவெறி முன் தீர்மானங்களைக் கொண்டது என்றும் தான் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயன்றதாக அந்த அணிக்கு ஆடிய அஜிம் ரபீக் என்ற ஆஃப் ஸ்பின்னர் நிறவெறி குற்றச்சாட்டை எழுப்ப அது இங்கிலாந்தையே தற்போது உலுக்கி வருகிறது.
இவர் நிறவெறிப் பிரச்சனைகளைக் கிளப்பிய பின்பு மூத்த அதிகாரிகள் கிளப்பிலிருந்து ராஜினாமா செய்வதும், ஸ்பான்சர்கள் வெளியேறுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அஜீம் ரபீக் யார்க் ஷயருக்காக 2008-14 மற்றும் 2016-18-ம் ஆண்டுகளில் ஆடினார். இத்தனைக்கும் அஜிம் ரஃபீக் இங்கிலாந்து யு-15, யு-19 அணிகளுக்கு கேப்டனாக இருந்த பிறகே யார்க் ஷயருக்கு அறிமுகமானார். 17வயதில் யார்க் ஷயருக்கு அவர் அறிமுகமாகிறார். இன்றைய நட்சத்திரங்களான ஜோ ரூட், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் போன்றவர்களுக்கே இவர் கேப்டன்சி செய்துள்ளார்.
இவர் மீதான நிறவெறித் தாக்குதல் அமைப்புசார்ந்த நிறவெறித்தாக்குதல் என்கிறார் அஜீம் ரபீக். 2012-ல் யார்க் ஷயர் அணியை வழிநடத்தும் இளம் கேப்டன் ஆனார் ரபீக். ஆசிய நாட்டு வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் கேப்டனாவது இதுவே முதல்முறை. இவ்வளவு பிரமாதமாக அவர் கரியர் அமைந்தும் 2018-ல் அது அல்பாயுசில் முடிவுக்கு வந்தது. ரபீக் என்ற ஆல்ரவுண்டரின் கனவு தகர்ந்து போகக் காரணம் நிறவெறியே.
2020- ல் இவர் அளித்த நேர் காணல் ஒன்றில் நிறவெறி வசைகளைப் பற்றி அம்பலப்படுத்தினார். மொத்தம் 43 குற்றச்சாட்டுகளை ரபீக் எழுப்பினார். இதனையடுத்து யார்க் ஷயர் கிளப் விசாரணை நடத்தியது. ரஃபீக்கிடம் மன்னிப்பு கேட்டனர், ஆனால் நிறவெறி என்பதற்காக அல்ல, ‘முறையற்ற நடத்தையினால் பாதித்ததற்காக’ என்று கூறியது கிளப்.
என்னை முதலில் முன்னாள் இங்கிலாந்து ஸ்விங் பவுலர் மேத்யூ ஹோகார்ட், ‘“Raffa the Kaffir” என்றார், இது முதலில் எனக்கு நிறவெறி வசை என்று தெரியவில்லை. அதாவது ரஃபீக் என்ற பெயரை கிளப்பில் என்னை அழைக்கும்போது ரஃபா என்றுதான் அழைப்பார்கள். என்னை மட்டுமல்ல அவர் காஃபிர் என்று ஆதில் ரஷீத், அஜ்மல், ராணா நவேத் உல் ஹசன் ஆகியோரையும் அழைத்தார். தினமும் ஒவ்வொரு சமயமும், விடாது நிறவெறி வார்த்தையுடன் தான் நான் அழைக்கப்பட்டேன். நான் முதலில் ஏதோ ஓய்வறை கிண்டல் என்று நினைத்தேன்.
Spectacular courage from Azeem Rafiq giving this testimony.
So so grim pic.twitter.com/njq1ROF2fi
— Oli Dugmore (@OliDugmore) November 16, 2021
ஆனால் எங்களை ஒரு ஓரமாக உட்காரச் சொல்வார். எலிபெண்ட் வாஷர்ஸ் என்றும் இன்னும் புரியாத நிறவெறி வசைகளை அவர் எங்கள் மீது பிரயோகிப்பது வாடிக்கையானது. நான் மீடியாவில் சொன்னவுடன் ஹோகார்ட் என்னை அழைத்து மன்னிப்புக் கேட்டார். அதை நான் மதிக்கிறேன். இன்னொரு இங்கிலாந்து வீரர் கேரி பேலன்ஸ், இவர் என்ன தெரியுமா கூறினார், “அவன் ஒரு பாகிஸ்தானி ஏன் அவனிடம் பேசுகிறாய்” என்று வேறு ஒருவரை கண்டித்தார். இப்படியாக அனைவரும் நிறவெறியுடன் பழகினர், பாகிஸ்தானி என்று என்னை ஏசினர்” என்று கூறி பெரிய புழுதியைக் கிளப்பிவிட்டுள்ளார் ரபீக்.
யார்க் ஷயர் யார் மீதும் இதற்காக ஒழுங்கு நடவடிக்கை கூட எடுக்கவில்லை. இதனையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடும் நடவடிக்கை எடுத்து யார்க் ஷயருக்கு இனி சர்வதேச போட்டிகள் கிடையாது என்று மறுத்துள்ளது.
இந்த நிலையில்தான் செப்டம்பர், 2020-ல் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் ரஃபீக், “யார்க் ஷயர் அணிக்கு ஆடிய போது நான் பலமுறை தற்கொலை செய்து கொள்ள எண்ணம் கொண்டேன், ஒரு கிரிக்கெட் வீரனாக என் குடும்பத்தின் கனவை நான் வாழ்ந்தாலும் உள்ளுக்குள் நான் செத்துக் கொண்டிருந்தேன். கிரிக்கெட் ஆடவே பயமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் வேதனை அதிகரித்தது.
இது தொடர்பாக ரஃபீக் தொடர்ந்த வழக்கு இன்னும் நடந்து வருகிறது. யார்க்ஷயர் கிளப் 2021- ஆகஸ்டில் ஆழமான மன்னிப்புகள் என்று மன்னிப்பு கேட்டது. இங்கிலாந்து ஸ்பின்னர் ஆதில் ரஷீத், ரபீக்கிற்கு தன் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
ஆதில் ரஷீத் யார்க் ஷயருக்கு ஆடுவது பற்றிய தன் அனுபவத்தை இங்கிலாந்து பார்லிமெண்டிலேயே தெரிவித்தார். நிறவெறியால் தன் கரியரையே இழந்தது உட்பட நிறவெறியின் பயங்கரங்களை ரஷீத் புட்டுப் புட்டு வைத்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.