Home /News /live-updates /

கிலோ கணக்கில் தங்கம், கோடிகளில் ரொக்கம்... கே.பி.அன்பழகன் வீட்டில் நடைபெற்ற ரெய்டில் சிக்கியது என்ன?

கிலோ கணக்கில் தங்கம், கோடிகளில் ரொக்கம்... கே.பி.அன்பழகன் வீட்டில் நடைபெற்ற ரெய்டில் சிக்கியது என்ன?

கே.பி.அன்பழகன்

கே.பி.அன்பழகன்

அதிமுக முன்னாள் அமைச்சர்களில் 6வது நபராக கே.பி. அன் பழகன் வீடு உள்ளிட்ட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அதிரடி சோதனையில் கோடிக்கணக்கில் ரொக்கம், ஆபரணங்கள், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியான நிலையில், முன்னாள் அமைச்சர் அதனை மறுத்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, தங்கமணி ஆகியோர் வீடுகளில் அண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சோதனை நடைபெற்றது. இந்நிலையில், முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வியாழக்கிழமை காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தினர்

  தமிழகத்தில் சென்னை, சேலம், தர்மபுரி ஆகிய இடங்களிலும், தெலுங்கானா மாநிலத்திலும் இந்த சோதனை நடைபெற்றது பாப்பிரெட்டிபட்டி அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமிக்கு சொந்தமாக இலக்கியம்பட்டியில் உள்ள வீட்டில் சோதனை நடைபெற்றது. அவரது அண்ணன் அன்பழகனின் வீடு மற்றும் ஹார்ட்வேர் கடையிலும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்

  இதேபோல் சேலத்திலும், அன்பழகன் தொடர்புடைய கனிமவளத்துறை அதிகாரி ஜெயபால் என்பவரின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஜெயபால் பணியாற்றியபோது, முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு உதவியதாக கூறப்படுகிறது. தர்மபுரியில் மட்டும் நாற்பத்தி ஓரு இடங்களில் சோதனை நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  முன்னாள் அமைச்சர் மீது மட்டுமல்லாது அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்தபோது தனது உறவினர்கள் பெயரில் கணக்கில் வராமல் சொத்துக்களை குவித்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.

  Must Read : மாணவி லாவண்யாவை மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தவில்லை - தஞ்சாவூர் எஸ்.பி விளக்கம்

  2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வேட்புமனுத்தாக்கலின் போது, தனது சொத்து மதிப்பு 1.60 கோடி எனக் குறிப்பிட்டிருந்தார். 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் 23,03 கோடி என தனது சொத்து மதிப்பை குறிப்பிட்டிருந்தார் இந்த இடைப்பட்ட காலத்தில் 21 கோடியே 43 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்துள்ளது தெரியவந்துள்ளது.

  இந்த காலகட்டத்தில் சுமார் 13 கோடியே 32 லட்சத்து 92 ஆயிரத்து 231 ரூபாய் அளவிற்கு, குடும்ப செலவு, தேர்தல் செலவு, வருமான வரி செலுத்துதல், கடன் செலுத்துதல், காப்பீட்டுத் தொகை செலுத்துதல் என்ற அடிப்படையில் செலவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது சொத்துக்களின் மதிப்பையும், சேமிப்புகளையும், செலவினங்களையும் ஒப்பிட்டு பார்க்கும்போது 11 கோடியே 32 லட்சத்து 95 ஆயிரத்து 755 ரூபாய் கணக்கில் வராமல் சொத்துக்களாக குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.

  மேலும் முன்னாள் அமைச்சருக்கு பாக்கியலட்சுமி தியேட்டர்ஸ் நிறுவனத்தில் 50 சதவீத பங்குகளும், எஸ் எம் ப்ளூ மெட்டல்ஸ் என்ற நிறுவனத்தில் 50 சதவீத பங்குகளும் இருப்பதாக தெரியவந்துள்ளது. மகன் சசிமோகன் பெயரில் AMPS என்ற நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும், மகன் சந்திரமோகன் பெயரில் அன்பு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயங்கி வருவதாகவும், மனைவி மல்லிகா பெயரில் பாக்கியலட்சுமி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது

  மேலும் சரஸ்வதி பழனியப்பன் கல்வி அறக்கட்டளை ஒன்றையும் கேபி அன்பழகன் மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது. தனது மருமகன் ரவிசங்கர் பெயரில் தர்மபுரி காரிமங்கலம் பகுதியில் கல்பனஹல்லி கிராமத்தில் கல்குவாரி வைத்துள்ளது தெரியவந்துள்ளது. நெருங்கிய தொழில் நண்பரான அணுக்ராஜ் என்பவர் உடன் எஸ்.எம் ப்ளு மெடல் நிறுவனத்தை முன்னாள் அமைச்சர் குடும்பத்தினர் நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

  Read More : கள் இறக்கி விற்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவு - சீமான்

  சென்னை கோபாலபுரத்தில் தனது சகோதரி மகள் தீபா மற்றும் அவரது கணவர் சிவக்குமார் மூலம் கணேஷ் கிரானைட் என்ற நிறுவனத்தை முன்னாள் அமைச்சர் நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதேபோன்று தெலங்கானாவில் உள்ள வைஷ்ணவி கிரானைட் தொழிற்சாலை நிறுவனத்தில் 80 சதவீத பங்குகளை கேபி அன்பழகனின் சகோதரியின் மருமகன் சிவகுமார் வைத்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

  சோதனை முடிவில் 2 கோடியே 88 லட்சம் பணம், 6.6 கிலோ தங்கம், 13.85 கிலோ வெள்ளி மற்றும் முக்கிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவத்தனர். இவற்றில் கணக்கில் வராத 2 கோடியே 65 லட்சம் ரூபாய் பணம் மற்றும் பெட்டக சாவி, வழக்கிற்கு சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

  மேலும் கே.பி. அன்பழகன் வீட்டின் அருகில் வசிக்கும் அவரது உறவினரான பத்மாவதி என்பவரது வீட்டில் இருந்து 2 பைகள் நிறைய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் எடுத்துச் சென்றனர். இந்த வழக்கு தொடர்பான புலன் விசாரணை தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
  Published by:Vijay R
  First published:

  Tags: ADMK, K.P.Anbazhakan

  அடுத்த செய்தி