வரலாறு காணாத பனிப்புயலால் உறைந்து போன தண்ணீர் குழாய்கள்..!! குடிநீருக்காக தவித்து வரும் டெக்சாஸ் மக்கள்!!

டெக்சாஸ்

பனிப்பொழிவு குடியிருப்புகளில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை பலர் தங்களது வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். சில வீடுகளில் அனைத்து பொருட்களும் உறைந்து காணப்பட்டன.

  • Share this:
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் வரலாறு காணாத அளவு மிக கடுமையான பனிப்புயல் தாக்கியதால் டெக்சாஸ், லூசியானா, கென்டக்கி, மிசோரி உள்ளிட்ட மாகாணங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. மேலும் குறைந்தது 40 பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த வாரம் முழுக்க கடுமையான பனிப்பொழிவு இருக்கும் என்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் பனிப்புயல் நிலவுவதால், டெக்சாஸ் மாகாணத்தில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக கிட்டத்தட்ட 30 லட்சம் வீடுகளும் வணிக நிறுவனங்களும் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றன.

மேலும், பனிப்பொழிவு குடியிருப்புகளில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை பலர் தங்களது வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். சில வீடுகளில் அனைத்து பொருட்களும் உறைந்து காணப்பட்டன. சில வீடுகளில் சீலிங் பேன் கூட பனிப்படிந்து உறைந்து காணப்படுகிறது.

டெக்சாஸ்


மேற்கு டெக்ஸாஸில் உள்ள காற்றாலைகள் அனைத்தும் கடும் குளிரால் முழுமையாக முடங்கியுள்ளன. மின் விநியோக அமைப்புகள் பழுதடைந்து கொண்டே இருப்பதால் துறைசார் அதிகாரிகள் மீது மக்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். மேலும், முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைந்த வெப்பநிலை நிலவுவதால் தண்ணீர் விநியோகம் செய்யப்படும் குழாய்களும் உறைந்துள்ளன.

அதேபோல நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் மின்சாரம் இல்லாததும் நீர் பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளது. இதனால் மில்லியன் கணக்கான மக்கள் மின்சாரம் மற்றும் சுத்தமான குடிநீர் இல்லாமல் பல நாட்களாக அவதியுற்று வந்த நிலையில் அவர்களுக்கு வாகனங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மக்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று கேன்களில் தண்ணீர் பிடித்து செல்கின்றனர். மேலும், 165,000 பேர் இன்னும் மின்சாரம் இல்லாமல் இருப்பதாகவும், கிட்டத்தட்ட 264,000 பேர் செயல்படாத நீர் அமைப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் டெக்சாஸ் மாநில ஆளுநர் கிரெக் அபோட் கடந்த வெள்ளிக்கிழமையன்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையில் இருக்கும் சூழலில், பனிப்புயல் காரணத்தாலும், கடும் குளிர்நிலையாலும் கொரோனா தடுப்பூசி போடும் மையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: