கும்பகோணம் அடுத்த நாச்சியார் கோவிலைச் சேர்ந்தவர் 87 வயதான முதியவர் கோபாலன். ஓய்வுபெற்ற ஆசிரியரான கோபாலன், அங்குள்ள உத்திராதி மடத்தின் பவர் ஏஜென்ட் ஆக இருந்தார். செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் தனது வீட்டு வாசலில் அவர் அமர்ந்திருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிச் சாய்த்து விட்டு தப்பியோடினர். சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில், உயிரிழந்தார்.
நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த, பா.ஜக முன்னாள் நிர்வாகியான சரவணன் என்பவர் பிடிபட்டார்.
அவர் அளித்த வாக்குமூலத்தில் கொலைக்கான காரணம் அம்பலமானது. உத்திராதி மடத்தின் அருகில் மடத்தின் நிலத்தில் 12 கடைகள் இருந்தன. மடத்தை விரிவாக்கம் செய்வதற்காக கோபாலன், கடைகளை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.
இதற்காக மாவட்ட நீதிமன்றம் முதல் சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்று வழக்காடி மடத்திற்கு சாதகமாக தீர்ப்பினைப் பெற்றார். அனைத்துக் கடைக்காரர்களும் காலிசெய்த நிலையில், சரவணன் மட்டும் தனது தையல் கடையைக் காலி செய்ய மறுத்தார்.
ஆனால் நீதிமன்றத் தீர்ப்பைக் காட்டி கோபாலன் காலி செய்ய நெருக்கடி கொடுத்ததால் ஆத்திரமடைந்தார். அதனால் கோபாலனைப் பழிவாங்க அவரை வெட்டிப் படுகொலை செய்ததாக வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
இதையடுத்து சரவணன் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.