கடலூரில் கொட்டும் கனமழை... ஆயிரம்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியது

வெள்ளத்தில் மூழ்கிய விளைநிலம்

கடலூர் மாவட்டத்தில் 5வது நாளாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால், விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.

 • Share this:
  கடலூர் மாவட்டத்தில் கொட்டி வரும் கனமழையால், தென்பெண்ணை, வெள்ளாறு, கெடிலம் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில், வீராணம் ஏரியும் முழு கொள்ளளவை எட்டியது. குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள பெருமாள் ஏரியும் நிரம்பியதால், அங்கு விநாடிக்கு 17 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் பெருமாள் ஏரியை சுற்றியுள்ள கீழ்பூவானிகுப்பம், மேட்டுப்பாளையம், சிறுபாளையூர், கொண்டியமல்லூர் உள்ளிட்ட 15 கிராமங்களில் வெள்ளநீர் புகுந்துள்ளது.

  இதனால் கிராமத்தில் உள்ள மக்கள், அந்ததந்த பகுதியில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். இவ்வாறு கடலூர் மாவட்டம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட முகாம்களில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, கடலூர் - சிதம்பரம் சாலையில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

  சிதம்பரத்தில் சோழன் போக்குவரத்து பணிமனை, தாலுகா காவல் நிலையம் உள்ளிட்ட 50க்கு மேற்பட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. வடலூர் - சேத்தியாத்தோப்பு சாலையின் இருபுறமும், இருநூறுக்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளக்காடாய் காட்சி அளிக்கின்றன. இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

  கடலூர் ஆலப்பாக்கம் அடுத்த பெத்தான்குப்பம் கிராமத்தை சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அப்பகுதியே தனித்தீவு போல காட்சியளிக்கிறது. இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், பாதிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு வழங்கியதோடு, முகாம்களையும் தயார் செய்துள்ளனர். மேலும், அங்கேயே அவர்களுக்கு உணவு சமைத்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vijay R
  First published: