ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக ஆட்சியையும் கட்சியையும் கலைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முயன்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவிட்டதால் "வெற்றி நடைபோடும் தமிழகம்" என்ற பெயரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு, அதிமுகவுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இதன் ஒருபகுதியாக கோவையில் இரண்டு நாள் பிரசாரம் மேற்கொள்கிறார்.
முதல் நாளில், கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து பிசாரத்தை தொடங்கினார். கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராஜவீதியில், முதலமைச்சர் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கிராம சபை கூட்டங்களை நடத்தி திமுக கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது, என கேள்வி எழுப்பினார். அதிமுகவினர் மீது ஸ்டாலின் வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்தி, அரசியல் லாபம் பெற முயல்வதாகவும் சாடினார்.
மேலும், ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக ஆட்சியை கலைக்க, மு.க.ஸ்டாலின் முற்பட்டதாக குற்றம் சாட்டினார். அது ஈடேறாததால் பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும் ஆவேசமாக கூறினார்.
இதனிடையே, பேரூர் ஆதினம் மடம் மற்றும் கோவை பட்டீஸ்வரர் கோவில் சார்பாக, முதலமைச்சருக்கு பூரண கும்பை மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து, செல்வபுரம் பகுதியில் பேசிய முதலமைச்சர், பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதார்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்குவதை ஸ்டாலின் தடுத்ததாக ஒருமையில் குறிப்பிட்டார்.
மேலும், போத்தனூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஜமாத்தார்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர், அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர் பேசிய முதலமைச்சர், தமிழ்நாட்டில் வீடு இல்லாத ஏழைகள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் வீடு கட்டிகொடுக்கப்படும் என்றார். இலவச வீடு திட்டத்திற்கு எத்தனை கோடி செலவானாலும் ஏழைகளுக்கு வீடு கட்டி தருவது உறுதி என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.