தேனியில், 67 வயது முதியவருக்கு, ஒரே நேரத்தில் இரண்டு முறை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அல்லிநகரத்தைச் சேர்ந்த முதியவர், 2-வது தவணை தடுப்பூசி செலுத்துவதற்காக, தேனியில் தனியார் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாமிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு தடுப்பூசி போட்ட பின்னர், காய்ச்சல் மாத்திரை வாங்குவதற்காக காத்திருந்துள்ளார். அப்போது செவிலியர் ஒருவர் மீண்டும் கொரோனா தடுப்பூசி போட முயன்றுள்ளார். தான் ஏற்கெனவே போட்டுவிட்டதாக கூறி தடுக்கும் முன்னரே, முதியவருக்கு 2-வது முறையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்நிலையத்தில் முதியவரின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இதனிடையே ஒரேநேரத்தில் 2 முறை தடுப்பூசி போட்டுக் கொண்டால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை அணுக வேண்டும் எனவும் சாதாரண காய்ச்சலுக்கு வழங்கப்படும் பாராசிட்டமால் மாத்திரைகளை உட்கொண்டாலே பக்க விளைவுகள் ஏற்படாது என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.