தனியார் தோட்டத்தில் இறந்து கிடந்த 8 வயது யானை..யானைகளுக்கு இடையேயான மோதலால் இறந்ததாக தகவல்
கன்னியாகுமரி மாவட்டம் அழகியபாண்டியபுரம் அருகே இறந்து கிடந்த 8 வயது யானையை, வனத்துறையினர் அடக்கம் செய்தனர். அசம்பு காடு பகுதியில் உள்ள தனியார் கிராம்பு தோட்டத்தில் ஆண் யானை உயிரிழந்து கிடப்பதாக, காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கால்நடை மருத்துவர்களுடன் சென்று மேற்கொண்ட உடற்கூறாய்வில், யானைகள் இடையேயான சண்டையில் படுகாயமடைந்து இந்த யானை உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து, யானையின் தந்தத்தை வெட்டி எடுத்த பிறகு, வனப்பகுதியிலேயே அதன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்தியில் தயாராகும் சூர்யாவின் "சூரரைப்போற்று"
சூர்யா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற, சூரரைப்போற்று திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. சூர்யாவின் 2D என்டெர்டெய்ன்மென்ட் மற்றும் விக்ரம் மல்ஹோத்ராவின் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, இப்படத்தை தயாரிக்க உள்ளன. தமிழில் சூரரைப்போற்று திரைபடத்தை இயக்கிய, சுதா கொங்கரா இந்தியிலும் இயக்குனராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அதேசமயம், நடிகர்கள் தொடர்பான எந்த விவரமும் வெளியாகவில்லை. ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக கொண்ட, சூரரைப்போற்று திரைப்படம் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியானது. சூர்யா உள்ளிட்டோரின் அசாத்திய நடிப்பால், ரசிகர்கள் மத்தியிலும் விமர்சன ரீதியிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
உத்தராகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் பலத்த மழை பெய்து வருவதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அடை மழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற புத்தமதத் தலமான தர்மசாலாவில் காட்டாற்று வெள்ளம் புகுந்தது. குடியிருப்புகளுக்குள் அசுர வேகத்தில் புகுந்த வெள்ள நீர், சாலையில் இருந்த வாகனங்களை வாரிச் சுருட்டி தன்னுடன் இழுத்துச் சென்றது. ஏராளமான வீடுகளும் சேதமடைந்துள்ளன,
மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்தவரை மடக்கி பிடித்த காவலர்
மயிலாடுதுறை அருகே மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்த நபரை, துரத்திச் சென்று மடக்கிப் பிடித்த காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கடலி கிராமத்தச் சேர்ந்த மங்களம் என்ற மூதாட்டி, சாலையில் நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மூதாட்டியின் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த காவலர்சுரேஷ், வேகமாக சென்று கொள்ளையர்களின் இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளார்.
எனினும் கொள்ளையர்கள் வாகனத்தில் தப்பிச்செல்ல, அவர்களை 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு துரத்தி சென்றார், பின்பு வாகனத்தை விட்டுவிட்டு வயலில் இறங்கி ஓடிய கொள்ளையர்களில் ஒருவனை, அவ்வழியாக வந்த தலைமை காவலர் அன்பழகனின் உதவியுடன் சுரேஷ் மடக்கிப் பிடித்தார். தங்கச் சங்கிலியுடன் தப்பிச் சென்றவரை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தை மித்ராவுக்கு குவியும் உதவி
அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தை மித்ராவுக்கு மருந்து வாங்க தேவையான 16 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்- பிரியதர்ஷினியின் 2 வயது மகள் மித்ரா. இவர், SMA எனப்படும் spinal muscular atrophy அரிய வகை மரபணு நோயால் பிறப்பிலேயே பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோய்க்கு நிரந்தர தீர்வளிக்கும் Zolgensma எனும் Novartis நிறுவனத்தின் மருந்து இந்தியாவில் கிடைப்பதில்லை. இதை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்து தான் பெற வேண்டும். இந்த மருந்தின் விலை மட்டுமே ரூ 16 கோடியாகும். குழந்தை மித்ராவுக்கு நிதி திரட்டும் விதமாக பலரும் நிதியுதவி அளித்ததன் பலனாக தற்போது 16 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. இந்த மருந்துக்கான ஆறு கோடி ரூபாய் வரியை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். பெங்களூரூவில் உள்ள BAPTIST மருத்துவமனை மூலம் மருந்து வாங்கி குழந்தை மித்ராவுக்கு செலுத்தப்படும். இந்த மருந்தை ஒரு முறை செலுத்தினாலே போதுமானது.
ராஜஸ்தானில் மின்னல் தாக்கி 18 பேர் உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் ஆம்பர் கோட்டையில் மின்னல் தாக்கியதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது. கொட்டும் மழைக்கு இடையிலும் ஆம்பர் கோட்டையின் கண்காணிப்பு கோபுரத்தில் நின்று செல்ஃபி எடுக்க சிலர் சென்றனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல்கட்ட விசாரணையில் கண்காணிப்பு கோபுரத்தின் மீது 27 பேர் இருந்தது தெரியவந்துள்ளது. இதேபோல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 28 பேரின் குடும்பங்களுக்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். இதேபோல் உத்தரபிரதேசத்திலும் 10 பேர் மின்னலுக்கு பலியாகியுள்ளனர்.