தரமற்ற ஆக்சிஜன் சிலிண்டர்களை பயன்படுத்துவதும் கரும்பூஞ்சை தொற்றை ஏற்படுத்தும் - தொற்று நோய் நிபுணர்

மாதிரிப்படம்.

கொரோனா நோயில் இருந்து மீண்டவர்களை, கரும்பூஞ்சை தொற்று தாக்குவதாக பொதுப்படையாக கூறப்பட்டாலும், அதற்கு பின்னால் இருக்கும் மருத்துவ ரீதியிலான உண்மைகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.

 • Share this:
  கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பில் முதல் அலை ஏற்பட்ட போது, பிளாஸ்மா சிகிச்சை சிறந்த பலனை அளிப்பதாக ஆரம்ப கட்டத்தில் கூறப்பட்டது. கேரளாவில் பிரபலமடைந்த பிளாஸ்மா சிகிச்சையை தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களும் பின்பற்றின. இதற்கு ICMR ஒப்புதல் அளித்திருந்தது.

  கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், பிளாஸ்மா வங்கிகளும் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்டன. ஆனால், ஒரு சில மாதங்களிலேயே பிளாஸ்மா சிகிச்சையால் கொரோனா நோயாளிகளுக்கு எந்தப் பலனும் இல்லை என ICMR கை விரித்து விட்டது.

  இந்த வரிசையில் தற்போது, கரும்பூஞ்சை பாதிப்பிற்கு ஸ்டிராய்டு மருந்துகள் தான் காரணம் என்ற வாதமும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தியாவில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கும் தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்டவர்களுக்கும் கரும்பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

  கொரோனா தொற்றாளர்களுக்கு அதிகளவில் கரும்பூஞ்சை பாதிப்பு ஏற்படுவதற்கு காரணம் அதிக அளவிலான ஸ்டீராய்டு மருந்துகளின் பயன்பாடு என்று கூறப்பட்டது. ஆனால் கள அனுபவம் அது உண்மையல்ல என கூறுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

  முடக்கு வாதம், கழுத்து தண்டு வடம், மூளை நரம்பில் ஏற்படும் பிரச்னைகள் என பல்வேறு நோய்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு கொரோனா நோயாளிகளுக்கு கொடுப்பதை விட 15 மடங்கு அதிக ஸ்டீராய்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவர்களில் கருப்பு பூஞ்சை பாதிப்பு மிக அரிதாகவே ஏற்படுகிறது. எனவே ஸ்டீராய்டு பயன்பாடு காரணமாக கருப்பு பூஞ்சை ஏற்படவில்லை என கூறுகிறார் மூளை நரம்பு அறுவை சிகிச்சை மருத்துவர் ராஜா விக்னேஷ்.

  முதல் கொரோனா அலையின் போது வெகு சில தொற்றாளர்களுக்கு மட்டுமே ஆக்சிஜன் தேவை ஏற்பட்டது. ஆனால், இந்த இரண்டாம் அலையில் தொற்றாளர்கள் பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் பயன்பாடு அதிகரித்துள்ளது. அந்த வகையில் பார்க்கும் போது நாடு முழுவதும் பயன்பாட்டில் இல்லாத சிலிண்டர்களை திடீரென பயன்பாட்டிற்கு கொண்டு வந்து ஆக்சிஜன் சப்ளை செய்துள்ளதும் கரும்பூஞ்சை தொற்றுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

  பல நாட்களாக பயன்பாட்டில் இல்லாத ஆக்சிஜன் சிலிண்டரில் ஆக்சிஜன் நிரப்பி பயன்படுத்தும் போது அதில் ஏற்கனவே வளர்ந்திருக்கும் பூஞ்சை, நோயாளியின் மூக்கில் நேரடியாக சென்று கரும்பூஞ்சை தொற்றை ஏற்படுத்த வாய்ப்புள்ளது எனக் கூறுகிறார் தொற்று நோய் நிபுணர் சுப்பிரமணியன் சுவாமிநாதன்.

  கொரோனா நோய் சம்பந்தமான புரிதலே இன்னும் 100% இல்லாத நிலையில், அதன் தொடர்ச்சியாக ஏற்படும் கருப்பு பூஞ்சை தொற்றை புரிந்து கொள்வது மேலும் சவாலானதாக உள்ளது. எனவே தொடர்ந்து முகக் கவசம் அணிந்து கொரோனா பாதிப்புக்கு ஆளாகாமல் இருப்பதே பெருந்தொற்று காலத்தில் உயிர் தப்பிக்க சிறந்த வழி என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
  Published by:Vijay R
  First published: