இலங்கையில் கடும் உணவுப் பஞ்சம்: அவசரநிலை பிரகடனம்- அன்னியச் செலாவணி நெருக்கடி உச்சம்

இலங்கையில் உணவுப்பஞ்சம், அவசரநிலைப் பிரகடனம்.

இலங்கையில் தனியார் வங்கிகளில் அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்ததால் உணவுப்பொருள் இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டு அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

 • Share this:
  இலங்கையில் தனியார் வங்கிகளில் அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்ததால் உணவுப்பொருள் இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டு அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

  இலங்கையின் பொருளாதார நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், சர்க்கரை, அரிசி மற்றும் இதர அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பதுக்கலைத் தடுக்க, அதிபர் கோத்தபய ராஜபக்சே, அவசரகால விதிமுறைகளைப் பிறப்பித்துள்ளார்.இதற்காக, மூத்த ராணுவ அதிகாரி ஒருவரை, 'அத்தியாவசிய சேவைகளின் தலைமை ஆணையராக' நியமித்துள்ளார்.

  சர்க்கரை, அரிசி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், இந்த நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது.

  மேலும் பால் பவுடர், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், அவற்றைப் பெறுவதற்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

  இது ஒரு புறம் இருக்க கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நாளொன்றுக்கு 200 பேர் வரை மரணமடைகின்றனர். இலங்கைப் பொருளாதாரம், 2020ல் 3.6 சதவீத அளவுக்குச் சரிந்துள்ளது.

  2 வாரங்களுக்கு முன்பாக இலங்கை மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்தது. இலங்கையின் அன்னியச் செலாவணி கையிருப்பு ஜூலை முடிவில் 2.8 பில்லியன் டாலர்களாக இருந்தது. ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 20% மதிப்பு சரிந்தது.

  மோட்டார் வாகனங்களின் எரிபொருள் கட்டுப்பாடு அல்லது ரேஷன் முறை அங்கு அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  கடந்த மார்ச் மாதம் முதல், அன்னிய செலாவணி கையிருப்பைத் தக்க வைத்துக்கொள்வதற்காக, அந்நாடு, வாகனங்கள் இறக்குமதி முதற்கொண்டு, சமையல் எண்ணெய், மஞ்சள் மற்றும் சமையலுக்குத் தேவைப்படும் பல பொருட்களின் இறக்குமதி வரை அனைத்தையும் தடை செய்துள்ளது.

  எரிசக்தித் துறை அமைச்சரான உதயா கம்மன்பிலா, எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு, வாகன ஓட்டிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார்.அதன்மூலம் சேமிக்கப்படும் அன்னிய செலாவணி, அத்தியாவசிய மருந்துகளையும், தடுப்பூசிகளையும் வாங்குவதற்குப் பயன்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Muthukumar
  First published: