பிரபல தெலுங்கு சின்னத்திரை நடிகை ஸ்ரவாணி தற்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் அசோக் ரெட்டியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
தெலுங்கு சின்னத்திரை உலகின் பிரபல நடிகை 26 வயதான ஸ்ரவாணி; 8 ஆண்டுகளாக சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். சமீபமாக மனசு மமதா, மௌனராகம் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர். கடந்த 8ம் தேதி இரவு 10 மணியளவில் ஹைதராபாத் நகரில் தனது வீட்டின் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கில், ஸ்ரவாணியின் காதலர் தேவராஜ் ரெட்டி, இன்னொரு நண்பர் சாய் கிருஷ்ணா ரெட்டி ஆகியோர் முதலில் கைது செய்யப்பட்டனர். ஸ்ரவாணி சென்று வந்த இடங்களை சிசிடிவியில் போலீசார் ஆய்வு செய்தபோது, தற்கொலைக்கு முதல் நாள், சாய் கிருஷ்ணா ரெட்டி, ஸ்ரவாணியைத் தாக்கும் காட்சி பதிவாகியிருந்தது.
தற்கொலைக்கு முன்பாக, தேவராஜிடம் ஸ்ரவாணி பேசிய ஆடியோவில், சாய் கிருஷ்ணாவும், அசோக் ரெட்டியும் தன்னைத் துன்புறுத்தியதைப் பற்றி கூறியுள்ளார். அதன் அடிப்படையில், விசாரணைக்கு ஆஜராகும்படி அசோக் ரெட்டிக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.
இந்த நிலையில், புதன்கிழமை அன்று அசோக் ரெட்டியைப் போலீசார் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், 2017ம் ஆண்டு அசோக் ரெட்டி முதன் முதலாக ஸ்ரவாணிக்கு அறிமுகமானது தெரியவந்தது. அப்போது அவர் தயாரித்த ப்ரேமதோ கார்த்திக் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தை ஸ்ரவாணிக்குக் கொடுத்துள்ளார். முதலில் அசோக் ரெட்டியிடமும் பின்னர் சாய் கிருஷ்ணா ரெட்டியிடமும் ஸ்ரவாணி நெருக்கமாகப் பழகியுள்ளார்.
பின்னர் அவர்களிடம் இருந்து விலகி, 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தேவராஜ் ரெட்டியைக் காதலிக்கத் தொடங்கியுள்ளார். அந்தக் காதலை அறிந்த அசோக் ரெட்டியும், சாய் கிருஷ்ணாவும் தேவராஜிடம் இருந்து விலகும்படி ஸ்ரவாணிக்கு பலவிதமாக தொந்தரவுகள் கொடுத்து வந்துள்ளனர்; ஒரு கட்டத்தில் அவரை அடித்து துன்புறுத்தியும் உள்ளனர் என்கின்றனர் போலீசார்.
இந்த நிலையில், ஸ்ரவாணிக்கு அசோக் ரெட்டியுடனும், சாய் கிருஷ்ணாவுடனும் ஏற்கனவே பழக்கம் இருந்ததை அறிந்த தேவராஜ் ரெட்டியும் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார்; அவரிடம் இருந்து விலகத் தொடங்கியுள்ளார். 3 ஆண்களும் ஒரு கட்டத்தில் நடிகை ஸ்ரவாணியை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியுள்ளனர்.
ஆனால் இன்னொரு நபருடன் அவருக்கிருந்த பழைய தொடர்பைக் காட்டி அவரை துன்புறுத்தியுள்ளனர் என்கின்றனர் போலீசார். அசோக் ரெட்டியிடம் தீவிரமான விசாரணை நடத்திய பின்பே, ஸ்ரவாணிக்கு நடந்த கொடுமைகள் அம்பலமாகும் என்கின்றனர் போலீசார்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050