திரையரங்குகளை திருவிழா கோலம் பூண செய்ய களமிறங்கும் ரஜினி, அஜித்!

ரஜினி அஜித்

அஜித் ரஜினி திரைப்படங்கள் திரையில் மோதினால் திரையரங்குகளுக்கு கூட்டம் படையெடுக்கும் என நம்பிக்கையோடு திரையரங்கு உரிமையாளர்கள் நவம்பர் மாதத்தை எதிர்நோக்கி காத்துள்ளனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  திரையரங்குகளுக்கு ரசிகர்கள் மீண்டும் வருவார்களா என மிகப்பெரும் கேள்வியுடன் திரையரங்கு உரிமையாளர்கள் காத்துக்கொண்டு இருக்க திரையரங்குகளை மீண்டும் திருவிழா கோலம் பூண செய்ய ரஜினிகாந்தும், அஜித்தும் ஒரே நாளில் களம் இறங்க முடிவு செய்துள்ளனர்.

  வாரம்தோறும் வெள்ளிக்கிழமையானால் திரையரங்குகளில் நிரம்பி வழிந்த கூட்டம், தங்கள் அபிமான நடிகர்கள் திரைப்படங்கள் வெளியாகும் போது திரையரங்குகளில் இரவெல்லாம் காத்திருந்து அதிகாலை கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள், இந்த காட்சிகள் எல்லாம் அரங்கேறி ஏறத்தாழ ஓரண்டு ஆண்டு ஆகின்றது. இதனால் மீண்டும் திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருவார்களா என்ற கேள்வியுடன் திரையரங்க உரிமையாளர்கள் காத்திருக்கின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கொரோனா முதல் அலை ஓய்ந்த போது திரையரங்குகளுக்கு ரசிகர்கள் மீண்டும் வர மாஸ்டர் திரைப்படம் முக்கிய காரணமாக அமைந்தது. திரையரங்குகள் ஏறத்தாழ ஆறு மாதங்கள் மூடியிருந்த போதும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என்ற செய்தி ரசிகர்களையும் திரையரங்க உரிமையாளர்களையும் உயிர்ப்புடன் வைத்திருந்தது. இதன் காரணமாக திரையரங்குகளை மீண்டும் திறந்த பின்னர் விஜய் திரைப்படத்தை காண ரசிகர்கள் திரையரங்கை நோக்கி படை எடுத்தனர். ஆனால் அப்படி ஒரு சூழல் தமிழ் சினிமாவில் தற்பொழுது இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

  விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள லாபம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான தலைவி ஆகிய ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இதனை அடுத்து தொடர்ந்து பல திரைப்படங்கள் வெளியாகும் என அறிவிப்பு வெளி வந்தாலும் ரசிகர்கள் தற்போது ஆவலாக எதிர்நோக்கியுள்ளது ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த மற்றும் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை ஆகிய திரைப்படங்களை.

  Also read... திரையரங்குகளில் வெளியாக இருக்கும் தமிழ்ப் படங்கள்...!

  இந்த இரண்டு திரைப்படங்களும் எதிர்வரும் தீபாவளி தினத்தில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுவதால் திரையரங்கு உரிமையாளர்கள் மேலும் உற்சாகம் அடைந்துள்ளனர். 2019ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் அஜித் நடிப்பில் உருவான விசுவாசம் மற்றும் ரஜினி நடிப்பில் உருவான பேட்ட ஆகிய திரைப்படங்கள் நேருக்கு நேர் சந்தித்தன.

  பெரும்பாலும் ரஜினிகாந்த் திரைப்படங்கள் வெளியாகும் நாளில் வேறு திரைப்படங்கள் வெளியாகாது என்ற சூழல் நிலவி வந்த நிலையில் அதனை மாற்றி பேட்ட விசுவாசம் ஆகிய திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இரண்டு திரைப்படங்களுமே திரையரங்கு உரிமையாளர்களுக்கு நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுத்தன.

  மேலும் தமிழக அளவில் ரஜினியின் பேட்ட திரைப்படத்தை விட அஜித்தின் விசுவாசம் திரைப்படம் அதிக வசூல் ஈட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இதனால் இந்த முறை வலிமை திரைப்படத்தை காட்டிலும் அண்ணாத்த திரைப்படத்தை பெரும் வெற்றி அடையச் செய்ய வேண்டும் என ரஜினி ரசிகர்களும், மீண்டும் ஒரு முறை ரஜினி திரைப்படத்தை தாண்டி தமிழகத்தில் வசூல் சாதனை படைக்க வேண்டும் என அஜித் ரசிகர்களும் வலிமை - அண்ணாத்த மோதலை ஆவலுடன் எதிர்நோக்கி காத்துள்ளனர்.

  கடந்த முறை விசுவாசம் திரைப்படத்தை இயக்கிய சிவா தற்போது ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தை இயக்கி உள்ளார், இதனால் வலிமையை காட்டிலும் அண்ணாத்த திரைப்படம் அதிக குடும்ப ரசிகர்களை ஈர்க்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் காரணங்களால் மீண்டும் அஜித் ரஜினி திரைப்படங்கள் திரையில் மோதினால் திரையரங்குகளுக்கு கூட்டம் படையெடுக்கும் என நம்பிக்கையோடு திரையரங்கு உரிமையாளர்கள் நவம்பர் மாதத்தை எதிர்நோக்கி காத்துள்ளனர்.
  Published by:Vinothini Aandisamy
  First published: