ரயில்கள், ரயில் நிலையங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம்!

ரயில் நிலையங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம்

பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் எச்சில் துப்புவோருக்கும் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

  • Share this:
ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஒரு புறம் கொரோனா வைரஸ் பரவல் அபரிமிதமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் 2000 ஐ நெருங்கிவிட்டது.

கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய அளவில் முகக் கவசம் அணிவதும், சமூக இடைவெளியை பராமரிப்பது மட்டுமே நம்மிடையே கொரோனாவை எதிர்க்கும் ஆயுதமாக இருக்கிறது. இருப்பினும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் குறையத் தொடங்கிய பின்னர் மாஸ்க் அணிவதையும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதையும் தவறி விட்டோம். இதன் விளைவு தற்போது இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை கொடிய வேகத்தில் பரவி வருகிறது.

இந்நிலையில் மக்களிடையே முகக் கவசம் அணிவதை கட்டாயப்படுத்தும் விதமாக பல்வேறு மாநில அரசுகளும் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் இருப்போருக்கு அபராதத் தொகை விதித்து வருகிறது.

இந்நிலையில் இந்திய ரயில்வே ஒரு அறிவிப்பாணையை இன்று வெளியிட்டுள்ளது. அதில் ரயில்கள் மற்றும் ரயில்வே நிலையங்களில் முகக் கவசம் அணியாமல் இருப்போருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் எச்சில் துப்புவோருக்கும் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

இதனிடையே கொரோனா விதிமுறைகளை தீவிரப்படுத்தும் வகையில் ரயில்வே பாதுகாப்புப் படையினரையும் களமிறக்கியுள்ள ரயில்வே வாரியம், பொதுமக்கள், ரயில் பயணிகள் அனைவரும் விதிமுறைகளை கடைப்பிடிக்கிறார்களா?, கூட்டம் கூடாமல் தவிர்ப்பது, முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது ஆகியவற்றையும் கண்காணித்து வருகிறது.

தற்போதைய நிலையில் தினந்தோறும் 5,387 புறநகர் ரயில்கள், 1490 சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

கொரோனாவுக்கு முந்தைய நிலையில் தற்போது (ஏப்ரல் 2021) 70% ரயில் போக்குவரத்து இயக்கப்படுவதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
Published by:Arun
First published: