புதுச்சேரியில் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணமாக 23,000 மீனவர்களுக்கு தலா 5,500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு இந்த எண்ணிக்கை 19,500 ஆக குறைக்கப்பட்டது.
இந்த ஆண்டு மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க துணைநிலை ஆளுநருக்கு கோப்பு அனுப்பப்பட்டது. அப்போது முதியோர் பென்ஷன் பெறுவோருக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கக் கூடாது எனக்கூறி கிரண்பேடி கோப்பினை திருப்பி அனுப்பினார்.
மேலும் மீனவ கிராமங்களில் முதியோர் பென்ஷன் மற்றும் மீன்பிடி தடைக்கால நிவாரணம் பெறுவோர் எண்ணிக்கை, அவர்கள் தற்போது உயிருடன் இருக்கிறார்களா என ஆய்வு நடத்த வேண்டும். பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்து கணக்கு மற்றும் கருவூல துறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்காததை கண்டித்து புதுச்சேரியில் உள்ள 18 மீனவ கிராமத்தினர் இன்று காலை குடும்பத்துடன் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்திருந்தனர்.
Also read... சீனாவின் அணுகுமுறை மோசமடைந்துவிட்டது - அனுராக் ஸ்ரீவஸ்தவா
இந்நிலையில், மீன்பிடி தடைக்கால நிவாரணம் தொடர்பாக கடலோர பகுதி சட்டமன்ற உறுப்பினர்களுடன் மீன்வளத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் சட்டசபை வளாகத்தில் ஆலோசனை நடத்தினார்.
இது தொடர்பாக ஆளுநரை சந்திக்க கடிதம் அனுப்பப்பட்டது. இதனை ஏற்க மறுத்த கிரண்பேடி துறையின் செயலர் உரிய விளக்கம் அளிப்பார் என பதில் கடிதம் அனுப்பினார். இந்த நிலையில் நேற்று மாலை மீன்வளத்துறை செயலர் பூர்வா கார்க், கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் புதுச்சேரி மீனவர்களுக்கு தடை கால நிவாரணம் வழங்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார் என கூறியுள்ளார்.
மேலும் இதற்காக ஏற்கனவே பட்ஜெட்டில் 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக அரசு செய்தி குறிப்பில் கூறியுள்ளார். தடை கால நிவாரணத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதால் இன்று காலை நடத்த இருந்த போராட்டத்தை திரும்ப பெறுவதாக மீனவ பஞ்சாயத்துக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.