ஹோம் /நியூஸ் /JUST NOW /

கொரோனா பாதித்த மாநிலங்களுக்கு உதவ மத்திய அரசு தயாராக இல்லை: நாராயணசாமி குற்றச்சாட்டு

கொரோனா பாதித்த மாநிலங்களுக்கு உதவ மத்திய அரசு தயாராக இல்லை: நாராயணசாமி குற்றச்சாட்டு

நாரயணசாமி

நாரயணசாமி

கொரோனாபாதித்த மாநிலங்களுக்கு உதவ மத்திய அரசு தயாராக இல்லை என்று நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

கொரோனாபாதித்த மாநிலங்களுக்கு உதவ மத்திய அரசு தயாராக இல்லை என்று நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ தகவலில், “இன்று உலக அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்திலும் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்களால் வியாபாரம் பெருகும். இப்போது எல்லையை மூடிவிட்டதால் மற்ற மாநிலங்களில் இருந்து இங்கு வருவோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

இதனால் வியாபாரம் குறைந்துள்ளது. தமிழகத்தை விட மதுக்களின் விலையை அதிகமாக உயர்த்தியதால் மதுக்கடைகளின் வியாபாரமும் குறைந்துவிட்டது. நாம் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும், வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும், அரசுக்கு வருமானத்தை கொண்டுவர வேண்டும் என திட்டங்களை போட்டால் அதனை தடுத்து நிறுத்துகிற வேலையை துணைஆளுநர் கிரண்பேடி பார்த்து கொண்டு இருக்கிறார்.

வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்கள் மதுக்கடைக்கு வந்தால் கொரோனா வரும் என ஆளுநர் கூறுகிறார்.

நாம் ஏற்கனவே எல்லையை மூடி உள்ளோம். அண்டை மாவட்டங்களில் இருந்து வருபவர்களை தடுத்து நிறுத்தியுள்ளோம். அப்படி இருந்தாலும் கூட ஆளுநரின் தகாத செயலால் நம்முடைய வருமானம் பெரிய அளவில் குறைந்துள்ளது. மத்திய அரசுக்கும் கடிதம் எழுதினோம் என முதல்வர் கூறியுள்ளார்.

மார்ச் மாதத்தில் இருந்து இன்று வரை மத்திய அரசு  ஊரடங்கு உத்தரவை நிறைவேற்ற சொன்னார்கள். நாம் செய்தோம். அதனால் வருமானம் குறைந்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு ஊதியம் போட வேண்டும். பென்சன்தாரர்களுக்கு பென்ஷன் கொடுக்க வேண்டும். மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும். சாலை போடுவது போன்ற பல திட்டங்களுக்கு நிதியை ஒதுக்குவதற்கு நிதி ஆதாரம் இல்லாமல் செய்ய முடியாது.ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கினால் கூட அதனை திருப்பி கட்ட வேண்டிய நிலையில் உள்ளது.

ஆகவே, நாம் சிறிதளவு விலையை குறைத்தால் வியாபாரம் பெருகும். அரசுக்கு வருவாய் வரும் என்று சென்னோம். அதற்கு செவிசாய்க்காமல் ஆளுநரின் தவறான முடிவால் இன்று புதுச்சேரியின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வருமானங்கள் அரசுக்கு வராதநிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் ரிசர்வ் வங்கியின் கடன் பெறுவதற்கான நடவடிக்கையை எடுக்க உள்ளோம். குறிப்பாக மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிற்சாலைகளுக்கு கடனை தவணை முறையில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும். சிறுகுறு, நடுத்தர தொழில்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலங்களின் வருவாய் பாதிக்கின்ற காரணத்தால் இழப்பீடு செய்ய வேண்டும்.

விவசாயிகளின் விலைபொருட்களுக்கு விலை உயர்த்தி கொடுக்க வேண்டும். விவசாயிகள் வங்கியில் கடன் பெறுவதற்கான ஏதுவான சூழலை உருவாக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு நிதியுதவிக்கு மாநிலங்களுக்கு உதவ வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தோம்.

ஆனால் மத்திய அரசு ஒரு நபருக்கு தலா 5 கிலோ அரிசி 3 மாதத்துக்கு கொடுப்பதாக ஒரே ஒரு திட்டத்தை அறிவித்ததை தவிர மாநிலங்களுக்கு வேறு எந்த உதவியையும் செய்யவில்லை. புதுச்சேரி மாநிலத்தை பொருத்தவரை கிடைக்க வேண்டிய பாக்கியையும் கொடுக்கவில்லை.

இதனால் புதுச்சேரி மாநிலம் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதற்கு உதவ வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு இருக்கிறது. ஆனால் மத்திய அரசு மாநிலங்களுக்கு உதவ தயாராக இல்லை. இது மிகப்பெரிய வருத்தத்தை தருகிறது” என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் நீட் குறித்து பேசிய அவர், “ நீட் தேர்வு வந்தபிறகு மருத்துவ படிப்பில் 50 சதவீத இடங்களை எடுத்துக் கொண்டு மீதியுள்ள 50 சதவீத இடத்தை மத்திய அரசுக்கு கொடுக்கிறோம். மாநில அரசை பொறுத்தவரை இடஒதுக்கீடு கடைபிடிக்கிறோம். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டவர்கள், மழைவாழ் மக்களுக்கு மாநில அரசின் சார்பாக இடஒதுக்கீடு வழங்குகிறோம்.

ஆனால் மத்திய அரசானது இடஒதுக்கீடு முறையை கடைபிடிக்கவில்லை. ஏற்கனவே, உச்சநீதிமன்றம் கல்வி நிறுவனங்களிலும், வேலைகளிலும் இடஒதுக்கீட்டை மத்திய அரசு முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மத்திய அரசுக்கு நாம் ஒதுக்கிய 50 சதவீத இடங்களில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மலைவாழ் மக்களுக்கு ஒரு இடமும் கூட கொடுக்கவில்லை. இது உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாகவும், உதாசீனப்படுத்துவதாகவும் உள்ளது. இது அந்த மக்களுக்கு இழைக்கப்படுகின்ற மிகப்பெரிய அநீதியாகும்” இவ்வாறு முதல்வர் நாராயணசாமி  கூறினார்.

மேலும் படிக்க...

காவிரியிலிருந்து 40 டிஎம்சி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஆணையம் உத்தரவு


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Published by:Vaijayanthi S
First published:

Tags: Narayana samy, Puducherry, Puthucherry cm