புதுச்சேரி அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ இன்று முதல்வரிடம் மனு அளித்தார். அந்த மனுவில், புதுச்சேரியில் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசின் இட ஒதுக்கீடு பெறுவதற்கு உரிய சட்டங்கள் இல்லாததால் புதுச்சேரியில் இயங்கும் 4 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட 7 தனியார் மருத்துவ கல்லூரிகளும் மனம் போன போக்கில் செயல்பட்டு வருகின்றன.
மத்தியில் திமுக கூட்டணி காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுக்குப்பிறகு நமது மாநிலத்தில் நிகர் நிலை பல்கலைக்கழகங்களில் வழங்கப்பட்டு வந்த 100க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ் இடங்களில் அரசு இட ஒதுக்கீடு முழுமையாக ரத்து செய்யப்பட்டது. அதில் நம் மாநில மாணவர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள 450 எம்.பி.பி.எஸ் இடங்களில் மத்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ) சட்டப்படி 50 சதவீதமான 225 எம்.பி.பி.எஸ் இடங்களை மாநில அரசு இட ஒதுக்கீடாக பெற வேண்டியது. 50 சதவீத இடத்திற்கு உரிய சட்டம் கொண்டுவரப்படாததால் வெறும் 165 இடங்களை மட்டும் புதுச்சேரி அரசு பெற்றது.
எனவே நடைபெற இருக்கும் சட்டமன்ற கூட்டத் தொடரில் புதுச்சேரியில் இயங்கும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீதம் அரசு இட ஒதுக்கீடு பெறுவதற்கு உரிய சட்டத்தை உடனடியாக கொண்டுவர வேண்டும் என அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் அரசு பள்ளி கல்வித்துறை மூலம் ஆண்டு தோறும் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெறுகின்றனர்.
நீட் தேர்விற்குப்பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிள்ளைகளில் திருவள்ளுவர் பள்ளியில் படித்த ஒரே பிள்ளை மட்டுமே மருத்துவ வகுப்பில் சேர இடம் பெற்றார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் அரசு செலவு செய்திருந்தும் அரசு பள்ளியில் படித்த ஒருவருக்கு மட்டுமே மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்திருப்பது என்பது வருத்தமளிக்கக்கூடிய விஷயம் ஆகும்.
இது சம்பந்தமாக பல முறை சட்டமன்றத்தில் அதிமுக சார்பில் அரசு பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள், தனியார் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளோடு தகுதி அடிப்படையில் போட்டிப் போட முடியாத ஒரு சூழ்நிலை இருப்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு அறிவித்து வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தோம்.
ஆனால் அதையும் உங்கள் அரசு செய்யவில்லை. இன்றைய தினம் தமிழகத்தில் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட உயர்கல்வியில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு, அம்மாநில அமைச்சரவையில் முடிவு செய்து அதற்கான அவசர சட்டத்தையும் பிறப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.
அதேபோன்று தமிழகத்தைப் பின்பற்றி நாமும் நம் மாநில ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வியில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசின் இட ஒதுக்கீடாக 50 சதவீதம் பெறவும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுத்து, அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என அன்பழகன் மனுவில் கூறியுள்ளார்.
Also read... ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய அதிக ஆர்வம் காட்டுவது ஏன்? அரசுக்கு நீதிமன்றம் கேள்விஉலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.