மக்களின் மனம் மாசுபட்டுள்ளது, ஓட்டுக்குப் பணம் வாங்காதீர்கள்: நீதிபதி கிருபாகரன் வேண்டுகோள்

நீதிபதி கிருபாகரன்.

தேர்தலில் மக்கள் ஓட்டு போட பணம் வாங்குகின்றனர். அரசியல்வாதிகள் பணம் கொடுத்தால் பணம் எங்கிருந்து வருகிறது என்பதை மக்கள் கேள்வி கேட்பதில்லை.

 • Share this:
  அரசியல்வாதிகள் பணம் கொடுத்தால் அது எங்கிருந்து வருகிறது என்பதை மக்கள் யோசிப்பதில்லை, மக்கள் மனம் மாசுபட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  திருப்பூரில் இயங்கி வரும் வெற்றி என்ற அமைப்பின், ‘வனத்துக்குள் திருப்பூர்’ திட்டத்தின் 7ம் ஆண்டு துவக்க விழா மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வறிக்கை வெளியீடு ஆகியவை நேற்று நடந்தன.

  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆய்வறிக்கையை வெளியிட்டு பேசிய நீதிபதி கிருபாகரன், இந்தத் திட்டத்தின் கீழ் திருப்பூரில் 6 ஆண்டுகளில் 10.50 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது பெரிய சாதனையாகும். ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு தொழிற்சாலை போன்றது. கரியமிலவாயுவை உறிஞ்சி நாம் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜனை மரங்கள் வழங்குகின்றன.

  மக்களையும் உயிரினங்களையும் வாழவைக்கும் மரங்கள் தெய்வங்களுக்கு ஒப்பானவை. ஒவ்வொருவரும் மரம் வளர்க்க வேண்டும். மரம் வளர்ப்பவர்களும் தெய்வத்துக்குச் சமமானவர்களே.

  தேர்தலில் மக்கள் ஓட்டு போட பணம் வாங்குகின்றனர். அரசியல்வாதிகள் பணம் கொடுத்தால் பணம் எங்கிருந்து வருகிறது என்பதை மக்கள் கேள்வி கேட்பதில்லை. ஏனெனில் மக்களின் மனது மாசுப்பட்டுள்ளது. ஓட்டுபோட பணம் கொடுத்தால் மறுத்து விடுங்கள். அப்போதுதான் சமூகத்தைப் பீடித்துள்ள பிணி நீங்கும். வாக்குக்கு பணம் கொடுப்பதும் வாங்குவதும் பெரிய மாசுபாடாக வளர்ந்து வருகிறது.

  மக்கள் நேர்மையாக இருக்க வேண்டும், மக்கள் நேர்மையாக இருந்தால்தான் அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஊழல் செய்ய பயப்படுவார்கள், என்றார்.

  சமீபத்தில் நடிகர் சரத்குமார் கூட, ‘ஓட்டுக்குப்பணம் கொடுத்தால் அதை அரசியல்வாதியின் முகத்தில் விட்டெறியுங்கள்’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. மார்ச் 12ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ளது.

  எனவே கூட்டணி, தொகுதிப் பங்கீடு என்று அரசியல் கட்சிகள் பிஸியாகி விட்டன. வட இந்திய அரசியல் தலைவர்கள் தமிழகம் நோக்கி படையெடுத்து வருகின்றன. வாக்குறுதிகளும் ஜோடனை பேச்சுகளும் ஏற்கெனவே தொடங்கியாகி விட்டது குறிப்பிடத்தக்கது.
  Published by:Muthukumar
  First published: