ஆக்சிஜன் வசதியை போர்க்கால அடிப்படையில் அதிகரிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

எடப்பாடி பழனிசாமி

கொரோனா பரவலில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது வேதனை அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

 • Share this:
  கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில், ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை போர்க்கால அடிப்படையில் அதிகரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

  சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக மற்றும் பாமக எம்எல்ஏ-க்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் கார்மேகத்துடன் ஆலோசனை நடத்தினார். மேலும், சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்று முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பரவலில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்தார். போர்க்கால நடவடிக்கை எடுத்து இரண்டாம் அலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியிறுத்தினார்.

  அதிமுக ஆட்சியின்போது, காய்ச்சல் முகாம்களை அதிக அளவில் நடத்தி, தொடர்பில் இருப்பவர்களை கண்டறிந்து சிகிச்சை அளித்ததாகவும், அதேபோல, தற்போதும் மாநகரம், நகரம், கிராமம் என அனைத்துப் பகுதிகளிலும் வீடு வீடாக கண்காணிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார். கொரோனா பரிசோதனையை 3 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். பரிசோதனை முடிவுகளை 24 மணிநேரத்துக்குள் கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

  இதனிடையே தமிழகத்தில் தொடர்ந்து 4-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளது. ‘தமிழகத்தில் நேற்று  ஒரே நாளில் 1,62,284 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 34,285 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 19,11,496 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 28,745 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

  இதுவரையில், 15,83,504 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 468 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 21,340 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 4,041 பேருக்கும், கோயம்புத்தூரில் 3,632 பேருக்கும், செங்கல்பட்டில் 1,870 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  Published by:Vijay R
  First published: