சேலம் மாவட்டம் முள்ளாகாடு பகுதியை சேர்ந்த 26 வயதான குணசீலன். இவரது தாய் சிறு வயதிலேயே காலமான நிலையில், தந்தை மற்றொரு திருமணம் செய்து கொண்டார். குணசீலன் தனது தம்பிகளான பசுபதி, கமல் ஆகியோருடன் பாட்டி வீட்டில் வசித்து வந்தார். கல்லூரி படிப்பை பாதியில் விட்ட இவர், குடும்ப சூழல் காரணமாக திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் கூலிவேலைக்கு சென்று வந்தார். இவரது இளைய சகோதரர் பசுபதி மதுரையில் தனியார் ஹோட்டலில் சமையலராக வேலை செய்து வருகிறார். இந்த சூழலில் தான் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையானார் குணசீலன்.
சிறிது சிறிதாக சம்பளப் பணத்தை இழந்து வந்த நிலையில், நண்பர்களிடம் கடன் பெற்று மேலும் பணத்தை இழந்துள்ளார். இவ்வாறு சுமார் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை குணசீலன் இழந்து தவிப்பது தம்பி பசுபதிக்கு தெரியவந்தது. தனது சேமிப்பு முழுவதையும் கொடுத்து கடனை அடைத்த பசுபதி, அதன்பின் குணசீலனுக்கு அறிவுரை வழங்கி மதுரையில் தினசரி 600 ரூபாய் சம்பளத்துக்கு ஹோட்டல் ஒன்றில் சர்வர் வேலை வாங்கிக் கொடுத்தார். அந்த சூழலிலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டை குணசீலன் தொடர்ந்து வந்துள்ளார். அவர் வாங்கிய சம்பளம் மட்டுமல்லாது, நண்பர்கள் சிலரிடமும் கடன் பெற்று விளையாடி வந்துள்ளார். மேலும் மேலும் பணத்தை இழந்த நிலையில், கடந்த சில வாரங்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார் குணசீலன்.
ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல ஹோட்டலுக்கு வேலைக்கு வந்த குணசீலனை திடீரென மதியம் 3 மணிக்கு மேல் காணவில்லை. சாத்தமங்கலத்தில் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்று பசுபதி பார்த்த போது, கொக்கியில் துண்டால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அண்ணாநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து குணசீலனனின் அலைபேசியை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில் குணசீலன் மொத்தமாக சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Online rummy, Suicide