ஹோம் /நியூஸ் /சற்றுமுன் /

ஆன்லைன் ரம்மி கொடூரம்: தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக மனைவிக்கு அனுப்பிய உருக்கமான ஆடியோ பதிவு..

ஆன்லைன் ரம்மி கொடூரம்: தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக மனைவிக்கு அனுப்பிய உருக்கமான ஆடியோ பதிவு..

ஆன்லைன் ரம்மி கொடூரம்: தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக மனைவிக்கு அனுப்பிய உருக்கமான ஆடியோ பதிவு..

புதுச்சேரியில், ஆன்லைன் சூதாட்டத்தில் 38 லட்சம் ரூபாயை இழந்ததால் பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்த விஜயகுமார், தற்கொலைக்கு முன்பாக, தன் மனைவிக்கு அனுப்பிய ஆடியோக்கள் வெளியாகியுள்ளன. கேட்பவர் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் அந்த ஆடியோவில், ஆன்லைன் ரம்மியைத் தடை செய்யும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :

புதுச்சேரி கோர்க்காடு கிராமம் அருகே உள்ள நத்தமேடு ஏரிக்கரையில் பாதி உடல் எரிந்த நிலையில் ஒரு ஆண் சடலம் கிடந்தது தகவல் அறிந்து மங்கலம் போலீசார், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே கோர்க்காடு கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமாரைக் காணவில்லை என்று தேடி வந்த அவரது குடும்பத்தினர், மீட்கப்பட்ட சடலம் அவருடையதுதான் என அடையாளம் காட்டினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், விஜயகுமார் பெட்ரோல் ஊற்றித்  தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

கோர்க்காடு கிராமத்தைச் சேர்ந்த 39 வயதான விஜயகுமார், தனது மனைவி நல்லம்மாள் என்ற மதுமிதா, 11 வயதில் மகன், 8 வயதில் மகள் ஆகியோருடன் வசித்து வந்தார். அதே பகுதியில், செல்போன் ரீசார்ஜ் மற்றும் செல்போன் விற்பனைக் கடையை நடத்தி வந்துள்ளார்.

தொழிலில் நன்றாக சம்பாதித்து வந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன் அவருக்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளில் ஒன்றான ACE 2 THREE (ஏஸ் டூ த்ரீ) என்ற விளையாட்டு அறிமுகமாகியுள்ளது. ஆரம்பத்தில் சிறிய அளவிலான தொகைகளில் விளையாடிய விஜயகுமார் அதில் ஜெயிக்கவும் செய்தார்.

படிக்க...முதல் கணவர் குழந்தையை கடித்து சித்ரவதை.. இரண்டாவது கணவர் வக்கிரம்.. தாயும் உடந்தை.. சிறுவன் மீட்கப்பட்டது எப்படி?

ஆனால் நாளடைவில், அந்த விளையாட்டுக்கு அடிமையாகி, நண்பர்கள், உறவினர்களிடம் கடன் வாங்கி 38 லட்சம் ரூபாய் அளவுக்கு இழந்துள்ளார். 38 லட்சம் ரூபாயை இழந்த நிலையில் தான், விஜயகுமாருக்கு தனது நிலைமை புரிந்துள்ளது. ஆனால் ரம்மி விளையாடியே தீர வேண்டும் என்ற வெறியும் அவரை ஆட்கொண்டுள்ளது. அதிலிருந்து மீள முடியாமல் தவிதவித்துள்ளார். கடந்த 3 நாட்களாக கடும் மனஉளைச்சலில் ஆழ்ந்த அவர், சனிக்கிழமை இரவு தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.

அப்போதும் கூட அவர் ரம்மி விளையாட்டில் ஆழ்ந்துள்ளார்; அதைப் பார்த்த மனைவி கண்டித்துள்ளார்; தன் சகோதரருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மைத்துனர் வந்து கண்டித்த போது தன்னால் விளையாடாமல் இருக்க முடியவில்லை என்றும் தடுத்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் கூறி விட்டு பைக்கில் வேகமாகப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அதன் பின் என்ன நடந்தது என மைத்துனர் முத்து கூறுகிறார்.

விஜயகுமார் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானதே அவரது மனைவிக்குத் தெரியவில்லை. அதனால் கணவரைக் கண்டித்து மாற்று வழியில் திருப்பவும் அவரது மனைவிக்கு வாய்ப்பிருக்கவில்லை. ஏரிக்கரைக்கு சென்ற விஜயகுமார், அங்கு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக, நீண்ட ஆடியோ பதிவுகளைத் தனது செல்போனில் பதிவு செய்து அவற்றை மனைவிக்கு அனுப்பியுள்ளார். மேலும் தனது வாட்ஸ் ஆப் டிபியில், ஆன்லைன் ரம்மியைத் தடை செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைத்துள்ளார்.

தொழிலில் சிறந்து விளங்கிய விஜயகுமார் ஓடி ஓடி உழைத்து தமிழக அளவில் செல்போன் ரீசார்ஜ் டிஸ்ட்ரிபியூட்டர்களில் முன்னணியில் இருந்துள்ளார். அப்படி இருந்த தான் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகிப் போனதாக, ஆடியோ பதிவில் கதறியுள்ளார்.

ஆன்லைன் ரம்மி விளையாட வேண்டும் என்ற வெறி தன்னை எவ்வாறு அடிமைப்படுத்தியது.போதையாக தன்னை ஆட்கொண்டது என்பதையும் ஆடியாவில் விளக்கியுள்ளார் விஜயகுமார். தற்கொலை செய்ய வேண்டும் என முடிவெடுத்த விஜயகுமார், முதலில் தனது 8 வயது மகளைக் கொலை செய்து விட்டுப் பின்னர் தான் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். பின்னர் அதைத் தவிர்த்து விட்டார். தன் மனைவி மீதான அன்பையும் பாசத்தையும் கதறியபடி அவர் பேசியுள்ள ஆடியோ, கேட்பவர்களின் கண்களைக் கலங்க வைத்துள்ளது.

கடைசியாக ஏஸ் டூ த்ரீ ஆன்லைன் ரம்மி நிறுவனத்திற்கு அவர் அனுப்பியுள்ள ஆடியோவில், கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி தன்னைப் போன்றோரிடம் பணத்தைப் பறித்ததாக குற்றம்சாட்டியுள்ளார். இளைஞர் பலரின் வாழ்க்கையைச் சூறையாடு்ம் அந்த விளையாட்டை நிறுத்தும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

படிக்க...MBBS சீட் வாங்கித்தருவதாக ரூ.57 லட்சம் மோசடி - பாதிரியார், கட்சிப் பிரமுகர்கள் கைது..

தனது மரணத்திற்குப் பின் ஆன்லைன் ரம்மியைத் தடை செய்யக் கோரித் தனது ஆடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தும்படியும் மனைவிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் விஜயகுமார்.

தன் கணவரின் முகத்தைக் கூட பார்க்க முடியாத கொடுந்துயரத்தில் ஆழ்ந்துள்ள நல்லம்மாள், இனி யாரும் 100 ரூபாய்க்காகக் கூட ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இறங்க வேண்டாம் என கதறலுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆன்லைன் ரம்மியால் விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தின் முதல் நிகழ்வல்ல. கடந்த 4 மாதங்களில் மட்டும் 4 இளைஞர்கள் ஆன்லைன் ரம்மிக்கு   தங்கள் வாழ்வைக் காவு கொடுத்துள்ளனர்.

சென்னை டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நிதிஷ்குமார்.  தனியார் டாட்டூ நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்தவர், ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்துள்ளார். கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், தனது பெற்றோருக்கும், காதலிக்கும் உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு, ஜூலை மாதம் 26ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

படிக்க...இணையத்தில் வெளியான பாலியல் வன்கொடுமை காட்சிகள்’ - மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முயன்றதாக கேரள நடிகை கண்ணீர்

திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை அனலை கிராமம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் 26 வயதான ஆனந்த். வாத்தலை காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அடிமையாகி 3 லட்சம் ரூபாய் இழந்தார். கடன் கொடுத்த நண்பர்கள் நெருக்கடி கொடுக்கவே அந்த அழுத்தம் தாங்க முடியாமல் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள மாட்டுக் கொட்டகையில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

படிக்க...லடாக் அருகே சீன வீரரை கைது செய்தது இந்திய ராணுவம்..

சென்னை செங்குன்றம் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் 28 வயதான தினேஷ். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். திருமணத்திற்கு முன்பே ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகியுள்ளார், ஓராண்டுக்கு முன்பு திருமணமாகி மனைவி 4 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், கொரோனா ஊரடங்கில் 8 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். கடன் நெருக்கடி முற்றவே குடும்பத்தினர் சில சொத்துக்களை விற்று கடனை அடைத்துள்ளனர். அப்படியும் கடன் தீராததால் மனஉளைச்சலுக்கு ஆளாகி, செப்டம்பர் 14ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தருமபுரியைச் சேர்ந்த 28 வயதான வெங்கடேஷ், சேலம் மாவட்டம் தலைவாசல் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் படை காவலராக பணிபுரிந்து வந்தார். சக காவலரிடம் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மியில் இழந்துள்ளார். கடன் நெருக்கடி தாங்க முடியாமல் செப்டம்பர் 21ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் படிக்க...Gold Rate | அதிரடியாக குறைந்தது தங்கத்தின் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

ஆன்லைன் ரம்மி, பப்ஜி போன்ற விளையாட்டுகளைக் கட்டுப்படுத்தக் கோரிய  வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. செப்டம்பர் மாதம் நடந்த அந்த விசாரணையில், ரம்மி போன்ற விளையாட்டுகள் இளைஞர்களையும், பப்ஜி போன்ற விளையாட்டுகள் குழந்தைகளையும் சீரழி்ப்பதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்திருந்தனர். ஆன்லைன் ரம்மியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டு எப்படி வடிவமைக்கப்படுகிறது? ஏன் சிறிய தொகையை வென்றவர்கள் பெரிய தொகையை வெல்ல முடியவில்லை? ஆன்லைன் ரம்மியில் தோற்றால், சட்டப்பூர்வமாக வழக்கு தொடுக்க முடியுமா? சட்டரீதியிலான வாய்ப்புகள் உள்ளனவா?

ஆன்லைன் விளையாட்டுகள் எதுவாக இருந்தாலும் அவற்றில் ஒரு எல்லையோடு நின்று விடுவது மனம், உடலுக்கு மட்டுமல்ல குடும்பத்திற்கும் நல்லது என்கின்றனர் மனநல மருத்துவர்கள்

ஆன்லைன் ரம்மியால் பித்துப் பிடித்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு விஜயகுமாரின் வாழ்க்கை ஒரு பாடமாக அமையட்டும். அவரே சொன்னது போல ஆன்லைன் ரம்மிக்கு கடைசி பலியாக அவரே இருக்கட்டும். இனியாவது ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகாமல் விழிப்புணர்வோடு இருப்போம்.

-----------------------------------------------------------------------------------------------

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

First published:

Tags: Addicted to Online Game, Online Game PUBG, Online rummy, Puducherry