79வது ஒருநாள் போட்டியில் சச்சின் எடுத்த முதல் சதம் - கண்ணுக்கு விருந்து

சச்சின் டெண்டுல்கர்

ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதங்களை எடுத்த சச்சின் டெண்டுல்கர் தன் முதல் ஒருநாள் சதம் எடுக்க 79-வது போட்டியில்தான் முடிந்தது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா?

 • Share this:
  சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் என்ற பெயர் சாதாரணமானது அல்ல அதன் உச்சரிப்பில் கோடிக்கணக்கான இந்திய ரசிக உள்ளங்களின் மந்திர அதிர்வு கொண்டது. கிரிக்கெட் ஆட்டத்தில் புதுமைகளைப் புகுத்தி பார்ப்பவர்களை மயக்கி எழுந்திருக்க விடாமல் உட்கார வைக்கும் பேட்டிங் திறமை சச்சினுக்குரியது. 100 சதங்கள் அடிப்பது என்றால் சும்மாவா!

  ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதங்களை எடுத்த சச்சின் டெண்டுல்கர் தன் முதல் ஒருநாள் சதம் எடுக்க 79-வது போட்டியில்தான் முடிந்தது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? அவர் ஆரம்பத்தில் 5ம் நிலையில்தான் இறங்குவார். அந்த நிலையில் அவர் சதம் எடுப்பது கடினம், அரைசதங்கள் எடுத்துள்ளார். முதல் சதம் அடிப்பதற்கு முன்பாக மிடில் ஆர்டரிலிருந்து தொடக்க வீரராக ஒருநாள் கிரிக்கெட்டில் களமிறங்கினார் சச்சின் டெண்டுல்கர்.

  நியூஸிலாந்துக்கு எதிரான அந்த ஒரு நாள் போட்டியில் முதன் முதலில் தொடக்கத்தில் இறங்கிய போது உலகமே மூக்கில் விரல் வைத்தது, அந்த அடி. 49 பந்துகளில் 82 ரன்கள் என்பது சாதாரணமல்ல. நியூசிலாந்தில் அப்போதெல்லாம் டைட்டாக வீசுபவர் கெவின் லார்சென் என்பவர் ஆனால் அன்று சச்சின் டெண்டுல்கர் அவர் வீசும்போது கிரீசிலேயே நிற்கவில்லை. பொதுவாக 10 ஓவர் 25 ரன்கள் 30 ரன்கள்தான் கொடுக்கும் அவர் அன்று 2 ஓவர் 24 ரன்களில் கட் செய்யப்பட்டார், காரணம் டெண்டுல்கரின் உக்கிரம் அப்படி.  143 ரன்கள் இலக்கு 23 ஓவர்களில் முடிந்தே போனது. சச்சின் டெண்டுல்கர் 82 ரன்களில் ஆட்டமிழக்கும் போது ஸ்கோர் 117 ரன்கள். அந்த அடி. இதற்கு முன் சச்சின் டெண்டுல்கரின் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் உலகக்கோப்பையில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக எடுத்த 84 ரன்களே.

  இந்த முதல் தொடக்கப் போட்டிக்குப் பிறகுதான் சச்சின் டெண்டுல்கர் இலங்கையில் சிங்கர் ட்ராபியில் செப்டம்பர் 9ம் தேதி, 1994ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தன் முதல் ஒருநாள் சதத்தை எடுத்தார். 130 பந்துகளில் சச்சின் 110 ரன்கள் விளாசினார். இந்த இன்னிங்சின் போது மெக்ராவையும் அடித்தார், ஆஸ்திரேலியாவின் சிறந்த பவுலரான கிரெய்க் மெக்டர்மட் பந்தை மேலேறி வந்து ஹை பிளிக்கில் அடித்த சிக்சரை மறக்க முடியாது.

  அது ஒரு முத்தரப்பு ஒருநாள் தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. மனோஜ் பிரபாகர், சச்சின் டெண்டுல்கர் முதல் விக்கெட்டுக்காக 87 ரன்களை சேர்த்தனர். பிரபாகர் 20 ரன்களில் முடிய, விக்கெட்டுகள் ஒருமுனையில் தொடர்ச்சியாக விழுந்தன. வினோத் காம்ப்ளி 40 ரன்களைத் தாண்டினார். ஆனால் ஒருமுனையில் சச்சின் டெண்டுல்கர் தூணாக நின்று ஸ்கோரை 246/8 என்று கொண்டு சென்றார்.

  ஆஸ்திரேலியா 215 ரன்களுக்குச் சுருண்டது. மாஸ்டர் பிளாஸ்டர் தன் முதல் ஒருநாள் சதத்தை எடுத்த அந்த நாள் இந்த நாள்தான், மறக்க முடியாத நாள். மறக்க முடியாத இன்னிங்ஸ்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Muthukumar
  First published: