64,500 ச.மீ பரப்பு, ரூ.971 கோடி மதிப்பீடு.. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் சிறப்புகள்

புதிய நாடளுமன்றம் மாதிரி படம்

புதியதாக கட்டப்பட உள்ள நாடாளுமன்ற கட்டடடத்தின் சிறப்பம்சங்கள்.

 • Share this:
  93 ஆண்டுகள் பழமையான தற்போதைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு மாற்றாக புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட உள்ளது. கடந்த 1921 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி தற்போதைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 83 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், ஆறு ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து 1927 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி பயன்பாட்டுக்கு வந்தது.

  அப்போதைய கவர்னர் ஜெனரல் இர்வின் பிரபு நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்தார். நாடாளுமன்ற கட்டடம் பயன்பாட்டுக்கு வந்து 93 ஆண்டுகளான நிலையில் நவீன வசதிகளுடன் புதிய நாடாளுமன்றம் கட்டப்படுகிறது.

  64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் 971 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இது அமைகிறது. முக்கோண வடிவில் கட்டப்படும் இந்த கட்டடம், தற்போதைய இரு அவைகளை காட்டிலும் மூன்று மடங்கு பெரியதாக இருக்கும். மக்களவையில் 888 பேரும், மாநிலங்களவையில் 384 பேரும் அமர முடியும். தற்போது மக்களவையில் 543ம், மாநிலங்களவையில் 245 இடங்களும் உள்ள போதும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இடவசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

  நாடாளுமன்ற கூட்டு கூட்டம் நடைபெறும் போது இருக்கைகளின் எண்ணிக்கையை 1,224 ஆக அதிகரிக்க முடியும். நவீன தொலைத்தொடர்பு வசதிகள், நிலநடுக்கத்தை தாங்கும் வகையிலான பாதுகாப்பு அம்சங்களோடு இந்த கட்டடம் உருவாக்கப்படுகிறது.

  புதிய கட்டடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வறைகள், நூலகம், வாகன நிறுத்துமிடம் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கும்.. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் முழுமையான உள்நாட்டு வடிவமைப்பு, கட்டுமானம், அலங்காரம் கொண்டு புதிய கட்டடம் எழுப்பப்பட உள்ளது.

  நாட்டின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் அமையும் இந்த கட்டடத்தில் நாடு முழுதும் உள்ள கைவினை கலைஞர்களின் பங்களிப்பு இடம் பெறும். டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் கட்டுமானப்பணிகளை மேற்கொள்ளவிருக்கும் நிலையில் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரவிருக்கும் 75 வது சுதந்திர தினத்தையொட்டி பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

   
  Published by:Vijay R
  First published: