மம்தா பானர்ஜியின் அமைச்சரவையிலிருந்து மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா - மன ரீதியில் காயமடைந்திருந்ததாக கண்ணீர் பேட்டி

2018ம் ஆண்டே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய இருந்தேன், ஆனால் மம்தா தான் தொடர்ந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

  • Share this:
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் இருந்து மேலும் ஒரு அமைச்சர் இன்று ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம் இந்த மாதத்தில் மட்டும் இரண்டு அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து விலகியுள்ளனர்.

சில மாதங்களில் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள மேற்கு வங்கத்தில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. 2019 நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸுக்கு ஏற்பட்ட சரிவையடுத்து அக்கட்சியில் இருந்து 40க்கும் மேற்பட்ட தலைவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். மேற்குவங்க மாநிலத்தில் 2019 தேர்தலில் பாஜக அசுர வளர்ச்சியை பெற்றதே இதற்கு காரணமாக அமைந்தது.

இதனையடுத்து இந்த முறை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என தீவிர முனைப்புடன் பாஜக செயல்பட்டு வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அமைச்சர் சுவேந்து அதிகாரியும் பாஜகவில் இணைந்தார். இவர் அக்கட்சியின் முக்கிய தலைவராக இருந்தவர்.

ரஜீப் பானர்ஜி


இந்நிலையில் தான் வனத்துறை அமைச்சராக இருந்த ரஜீப் பானர்ஜி இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆளுநரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டு திரும்பிய ரஜீப், செய்தியாளர்களை சந்தித்த போது ஒரு கட்டத்தில் கண்ணீர் விட்டு அழுதார்.

“இது போன்ற ஒரு நாள் வரும், இது போன்ற கடினமான முடிவை மேற்கொள்வேன் என கனவிலும் நினைக்கவில்லை. 2018-ல் எனது நீர்ப்பாசன துறையை என்னிடம் இருந்து பறித்துவிட்டு வனத்துறை அளிக்கப்பட்டிருப்பதாக கட்சி அலுவலகத்தில் இருந்த போது டிவியை பார்த்து தான் தெரிந்துகொண்டேம். (இதனை தெரிவித்த போது செய்தியாளர்கள் முன்னிலையில் ரஜீப் கண்ணீருடன் பேசினார்) அப்போதே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய இருந்தேன், ஆனால் மமதா தான் தொடர்ந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

துறை மாற்றம் செய்வது என்பது ஒரு பிரச்னையல்ல, ஆனால் நான் நடத்தப்பட்ட விதம் எனக்கு கஷ்டத்தை தந்தது. எனக்கு வாய்ப்பளித்த மமதா பானர்ஜிக்கு நன்றி. வங்காள மக்களுக்கான எனது உழைப்பு தொடரும் என தெரிவித்தார்.

ரஜீப் பானர்ஜி


ரஜீப்பின் ராஜினாமாவையடுத்து மேற்குவங்க அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்த 3வது நபரானார். முன்னதாக சுவேந்து அதிகாரியும், இந்த மாத தொடக்கத்தில் லக்‌ஷ்மி ரத்தன் சுக்லாவும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர். கொல்கத்தாவின் மேயராக 2 முறை இருந்த சோவன் சாட்டர்ஜியும் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமானார்.

இதனிடையே ஹவுராவில் வரும் 31ம் தேதி அமித்ஷா பரப்புரைக்காக வர இருப்பதால் அப்போது ரஜீப் பாஜகவில் இணைய வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

முக்கியத் தலைவர்கள், எம்.பிக்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என பலரும் பாஜகவில் இணைந்து வருவது மமதா பானர்ஜிக்கு மேலும் நெருக்கடியை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: