பிரதமர்- முதல்வர் சந்திப்பில் பாஜக எம்எல்ஏக்களுக்கு என்ன வேலை: மம்தா பரபரப்பு குற்றச்சாட்டு!

மம்தா பானர்ஜி

பிரதமரை 30 நிமிடங்கள் காக்க வைத்ததாக கூறப்படும் நிலையில், உண்மையில் தான்தான் 20 நிமிடங்கள் காத்திருந்ததாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி புறக்கணித்ததாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பான விளக்கத்தையும் பரபரப்பு குற்றச்சாட்டுகளையும் மம்தா தெரிவித்துள்ளார். 

  யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மாநிலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று பார்வையிட்டார்.  இதன் பின்னர் பிரதமர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு மம்தா பானர்ஜி 30 நிமிடங்கள் தாமதமாக வந்ததாகவும், கூட்டத்தில் பங்கேற்காமல் புயல் சேதம் குறித்த அறிக்கையை மட்டும் பிரதமரிடம் அளித்துவிட்டு அவர் சென்றுவிட்டதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து பாஜக தரப்பில் மம்தா மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

  இந்த சம்பவம் குறித்து மம்தா பானர்ஜி காணொலி காட்சி வாயிலாக இன்று விளக்கமளித்துள்ளார்.  அதில் தன்னை இப்படி  அவமானப்படுத்த வேண்டாம்  என்றும் தேர்தலில்  மிகப்பெரிய வெற்றியை தங்கள் கட்சி பெற்றதால் தான் பிரதமர் இவ்வாறு நடந்துகொள்கிறார் என்றும் விமர்சித்துள்ளார்.  தினந்தோறும் தங்களோடு சண்டையிடுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

  மேலும், “ பிரதமரை 30 நிமிடங்கள் காக்க வைத்ததாக கூறுகின்றனர். உண்மையில் நான் தான் 20 நிமிடங்கள் காத்திருந்தேன். பிரதமரை சந்திக்க சென்றபோது அவர் வேறு கூட்டத்தில் இருப்பதாகவும், ஒரு மணி நேரத்துக்கு யாரும் பிரதமரை சந்திக்க முடியாது என்று தெரிவித்தனர்.  கான்ஃபரன்ஸ் அறைக்கு சந்திப்பு மாற்றப்பட்டதால் அங்கு சென்று நானும் தலைமை செயலாளரும் பிரதமரை சந்தித்தோம்.

  மேலும் படிக்க.. பிரதமரை 30 நிமிடங்கள் காக்க வைத்தாரா மம்தா?..

  அப்போது, ஆளுநர், மத்திய அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுடம் (பாஜக எம்.எல்.ஏ.க்களுடன்) பிரதமர் ஆலோசித்துக் கொண்டிருந்தார்.  கடந்த முறை குஜராத்தில் புயல் சேதங்கள் குறித்து ஆராய அங்கு சென்று பிரதமர் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை கூட்டத்திற்கு அழைத்திருந்தாரா? பிரதமர் - முதல்வர் இடையிலான சந்திப்பாக அது நடந்திருக்க வேண்டும். கூட்டத்தில் அங்கம் வகிக்க உரிமையில்லாத அரசியல் கட்சிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் நான் எப்படி பங்கேற்க முடியும் ” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

  இதையடுத்தே பிரதமரிடம் புயல் சேதம் குறித்த அறிக்கையை அளித்துவிட்டு புறப்பட்டு சென்றதாகவும்  , செல்லும் முன்பு பிரதமரிடம் மூன்று முறை அனுமதி கோரியதாகவும் தெரிவித்துள்ளார்.

  ’பிரதமரின் காலில் விழ தயாராக உள்ளேன், அவர் தனது அகங்காரத்தை கைவிட வேண்டும்’ என்று தெரிவித்துள்ள மம்தா , தலைமை செயலாளரின் பணி மாறுதல் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும் நாட்டில் உள்ள அரசு  அதிகாரிகளுக்கு இது அவமானது என்று கூறியுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: