வீட்டுக்கு ஒரு கார்... ஹெலிகாப்டர்... இல்லத்தரசிகளுக்கு ரோபோ.. தொகுதியில் ஒரு பனிமலை - வைரலாகும் மதுரை சுயேட்சை வேட்பாளரின் வாக்குறுதிகள்

துலாம் சரவணன்

தேர்தல் செலவுகளுக்கு கூட 20,000 ரூபாய் தவணைக்கு கடன் வாங்கி உள்ளேன். அதில் தான் 10 ஆயிரம் ரூபாய் வேட்புமனுவிற்கு டெபாசிட் காட்டியுள்ளேன்.

  • Share this:
கடன் வாங்கி தேர்தலில் போட்டியிடும் மதுரையைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் ஒருவர் அரசியல் கட்சிகளும், வாக்காளர்களும் அதிர்ச்சிக்கு உள்ளாகும் வகையிலான பல திட்டங்களை அறிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் இவருடைய தேர்தல்அறிக்கை வைரலாக பரவி வருகிறது.

மதுரை தெற்கு தொகுதியில் அ.தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.சரவணனும், தி.மு.க கூட்டணி சார்பில் ம.தி.மு.கவின் பூமிநாதன் ஆகியோரும் களம் காண்கின்றனர். இவர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடுகிறார் 34 வயது சரவணன்.

மதுரை அனுப்பானடியில் வசித்து வருகிறார். 10ஆம் வகுப்பு வரை படித்தவர், மார்க்கெட்டிங், உள்ளூர் செய்தித்தாள் நிருபர் என பல தொழில்களை செய்தவர். தற்போது, இவர் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை தான் அரசியல் வட்டாரத்தில் நகைச்சுவையாக அமைந்துள்ளது.

தொகுதி மக்கள் அனைவருக்கும் ஐபோன், நீச்சல் குள வசதியுடன் 3 மாடி வீடு, வீட்டிற்கு தலா ஒரு கார், ஒரு ஹெலிகாப்டர், ஒரு படகு வழங்கப்படும் என்றும், 100 நாள் பயணமாக நிலவுக்கு சுற்றுலா, தொகுதி சில்லென இருக்க 300 அடி உயரத்தில் செயற்கை பனிமலை, தொகுதியில் விண்வெளி ஆராய்ச்சி மையம், ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதுதவிர, பெண்களின் திருமணத்திற்கு 100 சவரன் நகை, இல்லத்தரசிகளுக்கு வீட்டு வேலை செய்ய ரோபோ வழங்கப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சமூக வலைதளங்களில் இந்த தேர்தல் அறிக்கை வைரலாக பரவிவரும் நிலையில், இப்படி ஒரு தேர்தல் அறிக்கையை கொடுத்த அந்த மகாமனிதரை நேரில் சந்தித்து, நீங்கள் எதற்காக தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்? என்று கேட்டோம்.
அதற்கு, "தேர்தலில் எப்படி போட்டியிடுவது என்பது பலருக்கும் தெரியவில்லை. எனவே, எப்படி போட்டியிடுவது என்பதை தெரிந்து கொள்ளவே சுயேட்சையாக போட்டியிடுகிறேன். இதை மற்ற இளைஞர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். அதுவே, அரசியல்வாதிகளுக்கு பயத்தை அளிக்கும். அந்த பயமே நேர்மையான அரசியலுக்கு வழி வகுக்கும்.

தேர்தல் செலவுகளுக்கு கூட 20,000 ரூபாய் தவணைக்கு கடன் வாங்கி உள்ளேன். அதில் தான் 10 ஆயிரம் ரூபாய் வேட்புமனுவிற்கு டெபாசிட் காட்டியுள்ளேன். அன்றாடம் எவ்வளவோ பணம் செலவு செய்கிறோம். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை 10 ஆயிரம் ரூபாய் செலவு செய்தால் போதும். அரசியல் குறித்த புரிதல் ஏற்பட்டு விடும். தெற்கு தொகுதியில் மட்டும் 2,30,000 வாக்குகள் உள்ளன. அப்படி, இளைஞர்கள் 5,000 பேர் போட்டியிட்டு, தலா 50 வாக்குகள் பெற்றால் கூட போதும். இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் போட்டியிடாது. அவர்களுக்கு மக்கள் மேல் பயம் ஏற்படும். அந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே தேர்தலில் போட்டியிடுகிறேன்" என்றார்.

சாத்தியமே இல்லாத திட்டங்களை அறிவித்ததன் நோக்கம் என்ன? என்று கேட்டதற்கு,
"கடந்த 50 ஆண்டுகளாக அரசியல் கட்சிகள் பல இலவச திட்டங்களை அறிவித்து, ஆட்சியில் அமர்ந்து உள்ளார்கள். ஆனால், மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகத்தில் எந்த அரசியல் கட்சியும் செய்யாத அறிவிப்பை செய்துள்ளேன். வழக்கமான தேர்தல் அறிவிப்புகளாக இருந்தால் மக்கள் திரும்பி பார்க்க மாட்டார்கள். கடல் உருவாக்குவேன், விண்வெளி ஆராய்ச்சி மையம் கொண்டு வருவேன் என்று சொன்னால் மக்கள் திரும்பி பார்ப்பார்கள் என செய்தேன்" என்றவர்.

"நம்முடைய முன்னோர்கள், ஞானிகள் பூமியில் இருந்தே விண்வெளியை ஆராய்ச்சி செய்துள்ளார்கள். அதுபோல, விண்வெளிக்கு செல்வதும் சாத்தியமே. என்ன, கொஞ்சம் செலவாகும் அவ்வளவு தான். மற்றபடி முடியாதது என்பதே இல்லை" என்றார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ramprasath H
First published: