தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் என்பவர் மரக்கடையும், 31 வயதான அவரது மகன் பென்னிக்ஸ் அருகில் செல்போன் கடை நடத்தி வந்தார்.
கடந்த 19 ஆம் தேதி இரவு ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடையை திறந்து வைத்திருந்ததாக ஜெயராஜை ரோந்து சென்ற காவலர்கள் முத்துராஜ், முருகன் இருவரும் திட்டியுள்ளனர். இதனால் போலீசாருக்கும் ஜெயராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது; இதை பார்த்த மகன் பென்னிக்ஸ் போலீசாரிடம் சமாதனம்பேச முயன்றுள்ளார்
தந்தை மகனுக்கும், போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்படுகிறது; இது தொடர்பாக 19 தேதி இரவே இருவரும் மீதும் சாத்தான் குளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அரசு உத்தரவை மீறுதல், அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 20 ஆம் தேதி விசாரணைக்கு வரவழைத்துள்ளனர்.
முதலில் ஜெயராஜ் சென்றுள்ளார், மீண்டும் அங்கு கைகலப்பு நடந்துள்ளது; பென்னிக்ஸ் சென்று சமாதாப்படுத்தியுள்ளார். ஆனால், போலீசார் இருவரையும் காவல்நிலையத்திற்குள் வைத்து கடுமையாக தாக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது
21 தேதி அதிகாலை 2.30 மணிக்கு, இருவரையும் நீதிபதியிடம் வீடியோ அழைப்பு மூலம் ஆஜர் படுத்தி, கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்துள்ளனர். இருவரையும் சிறைக்குள் அனுமதிக்கப்பட்ட போது உடலில் காயங்கள் இருந்ததை சிறைத்துறை அதிகாரி உறுதிபடுத்தியுள்ளார்
படிக்க
சிறையில் தந்தை, மகன் மரணம் - சந்தேகத்தை எழுப்பும் போலீஸ் FIR
படிக்க
சென்னையில் அக்டோபரில் உச்சம் தொடும் கொரோனா - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
திங்கள் காலை 11 மணிவாக்கில், தந்தை ஜெயராஜ் தனக்கு உடல் சோர்வாக இருப்பதாக சிறைத்துறை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். 22 ஆம் தேதி காலை, அரசு மருத்துவர் வெங்கடேஷை வரவழைத்து இருவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. மாத்திரை கொடுத்த மருத்துவர், மேலதிக சிகிச்சை தேவைப்பட்டால், மருத்துவமனைக்கு அழைத்துவருமாறு கூறியுள்ளார்.
22 ஆம் தேதி மாலை 7 மணி வாக்கில் அதிக வியர்வையும், படபடப்பாக இருப்பதாகவும் பென்னிக்ஸ் கூறி அரை மயக்க நிலையில் சாய்ந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறை காவலர்கள், சிறைச்சாலைக்கு பின்புறமுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டது. 8.20 மணிக்கு நெஞ்சு வலி ஏற்படுவதாக கதறிய பென்னிக்ஸ் திடீரென சிகிச்சை பலனளிக்காமல் பென்னிக்ஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இதையெடுத்து கிழக்கு காவல் நிலைய போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தனது மகன் அறியாத தந்தை ஜெயராஜூக்கு, அன்று இரவே 10.45 மணிக்கு தந்தை ஜெயராஜூக்கு காய்ச்சல் அதிகமானதால், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். காலையில் கொரோனா தொற்று உள்ளதான என பரிசோதனை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்ய நிலையில், அதிகாலை 5.30 மணிக்கு மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டார்.
செவ்வாய் அதிகாலை 5.50 மணிக்கு ஜெயராஜும் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இதில் அதிர்ச்சி என்னவென்றால், மகன் உயிரிழந்தது தெரியாமல் தந்தையும் உயிரிழந்ததுதான். இவரது உடலும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இருவரது மரணம் தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கினர். இருவரின் உயிரிழப்புக்கு சாத்தான்குளம் போலீசார் தான் காரணம் என்றும், விசாரணையின் போது கடுமையாக தாக்கியதால்தான் உயிரிழந்ததாக குடும்பத்தினரும் மற்றும் வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இவர்களின் மரணத்திற்கு காரணமாக இருந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் அரசு மருத்துவமனை முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களது கோரிக்கை நிறைவேற்றப்பட்ட பின்னரே இருவரது உடலும் அடக்கம் செய்யப்படும் என உறவினர்கள், சாத்தான்குளம் பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிர்ச்சி என்னவென்றால், தந்தையும் மகனும் போலீசாருக்கு நடவடிக்கைக்கு எதிராக தரையில் உருண்டனர். அதில் அவர்களுக்கு ஊமை காயம் ஏற்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் போலீசார் குறிப்பிட்டுள்ளனர். இதுபோல பல ஜோடிக்கப்பட்ட அம்சங்களை போலீசார் இந்த வழக்கில் சேர்த்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
தந்தை, மகன் உயிரிழப்பில் நீடிக்கும் மர்மத்தால், சாத்தான் குளம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனால் அந்த பகுதியில் போலீசார் குவித்துள்ளனர்.
இதனிடையே, தந்தை, மகன் இருவரும் சிறையில் உயிரிழந்த சம்பவத்தில் சாத்தான் குளம் காவல் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர் தூத்துக்குடி ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்பாலகோபாலன் உத்தரவிட்டுள்ளார்.
உதவி ஆய்வாளர் உள்ளிட்ட இருவரை சஸ்பெண்ட் செய்த தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த அத்தனை காவலர்களையும் கூண்டோடு இடமாற்றம் செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.
நீதிமன்ற காவலில் இருந்த தந்தை, மகன் இருவரின் மரணம் குறித்து மாஜிஸ்ரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. கோவில்பட்டி நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் இருவரும் அடைக்கப்பட்டிருந்த கிளைச் சிறை உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்திவருகிறார்.
சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் காவல்துறை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும் என வணிகர் சங்கங்களின் தலைவர் வெள்ளையன் அறிவித்திருந்த நிலையில் பாளையங்கோட்டை பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. பாளையங்கோட்டை மகாத்மா காந்தி மார்க்கெட் காய்கறி பலசரக்கு கடைகள் முழுமையாக மூட ப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டன.
இந்த நிலையில், இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, பிற்பகலில் டி.ஜி.பி மற்றும் தூத்துக்குடி எஸ்.பி, காணொலி காட்சி மூலமாக ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.