Latest Tamil News : திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்

Today News Tamil - Live Updates:கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

 • News18 Tamil
 • | July 11, 2021, 15:53 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED A YEAR AGO

  AUTO-REFRESH

  HIGHLIGHTS

  15:57 (IST)

  தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

  இது தொடர்பாக வானிலை மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தேனி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று இடி-மின்னலுடன் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் மற்றும் வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு பகுதியில் 10 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அந்தமான், தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

  15:57 (IST)

  கொரோனா ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து புதுச்சேரி கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர்.

  கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை, படிப்படியாக புதுச்சேரி அரசு தளர்த்தி வருகிறது. இதனால் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் வாரம்தோறும் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் வாரத்தின் இறுதி நாளான இன்று சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் புதுவைக்கு வருகை புரிந்துள்ளனர். 70 நாட்களுக்கு பிறகு கடற்கரை சாலைகளில் மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலர் அங்கு கூடி மகிழ்ந்தனர்.

  15:56 (IST)

  மேகதாதுவில் கர்நாடக அரசு அணைகட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது

  மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு அணை கட்டப்பட்டால் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் வரத்து குறையும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் அணை திட்டத்தை தமிழக அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. இது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சரை, தமிழ்நாடு நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று எதிர்ப்பை பதிவு செய்தார். எனினும் கர்நாடக அரசு முயற்சிகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டி விவாதிக்க உள்ளார். நாமக்கல் கவிஞர் மாளிகையில் காலை 10.30மணிக்கு நடக்கும் இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட 13 கட்சி பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட எதிர்ப்பு தெரிவிப்பது, சட்ட ரீதியிலான முயற்சிகளை முன்னெடுப்பது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

  15:55 (IST)

  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்தை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து பேசினார்.

  சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை, தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் வரவேற்றார். பின்னர் விஜயகாந்தை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இந்த சந்திப்பின் போது, தேமுதிக பொருளாளர் பிரேமலதா, விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் உள்ளிடோர் உடன் இருந்தனர். அப்போது, கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, 10 லட்சம் ரூபாய்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் விஜயகாந்த் வழங்கினார்.

  15:51 (IST)

  அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் ஆகியோர் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

  2011 ஆண்டு ஜெயலலிதாவின் அமைச்சரவையில் வருவாய் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தவர் தோப்பு வெங்கடாசலம். 2016-ல், பெருந்துறை தொகுதியில் வெற்றி பெற்ற அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை. அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அவருக்கு சீட் வழங்கப்படாததால் அதிருப்தியில் சுயேச்சையாக பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில், இன்று தனது ஆதரவாளர்கள் 300-க்கும் மேற்பட்டோருடன், அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஈரோடு மாவட்டத்தை திமுகவின் எஃகு கோட்டையாக மாற்ற பாடுபடுவேன் என சூளுரைத்தார்.

  15:41 (IST)

  பள்ளி சிறுவர்களுக்கு வழங்கும் சத்துணவு முட்டைகள், அழுகிய நிலையில் வருவதாக காரைக்குடி சத்துணவு மைய ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, மாதத்திற்கு 10 முட்டைகளுடன் சத்துணவு வழங்கப்படுகிறது. தற்போதுள்ள கொரோனா சூழலால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் அல்லது பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து சத்துணவு வழங்கப்படுகிறது. இந்நிலையில் காரைக்குடி அருகே பெரியகோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் மாதத்திற்குரிய சத்துணவு முட்டைகளை ஒப்பந்ததாரர்கள் விநியோகிக்கவில்லை என்று புகார் எழுந்தது. இதனைதொடர்ந்து சனிக்கிழமை அன்று முட்டைகள் பள்ளிக்கு அனுப்பப்பட்டன. ஆனால் அவற்றில் பெரும்பாலான முட்டைகள், அழுகியும்,உடைந்த நிலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு 10 முட்டைகள் வழங்கப்பட வேண்டிய இடத்தில் 7 முட்டைகள் மட்டுமே வழங்கி வருவதாக சத்துணவு ஊழியர்கள் வேதனை தெரிவித்தனர்.

  15:40 (IST)

  திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், கடந்த திங்கட்கிழமை முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் விடுமுறை தினமான இன்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சிறப்பு தரிசன வரிசைகளிலும் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், ஏராளமானோர் முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா விதிகளை பின்பற்றி சாமி தரிசனத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரைக்கு செல்லும் பாதைகளில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமராக்கள் பொருத்தி காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  15:37 (IST)

  தமிழ்நாட்டில் ஜிகா வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

  சென்னை கிண்டியில் "ஓடலாம் நோயின்றி வாழலாம்" என்ற பெயரில் அமைச்சர் மா.சுப்ரமணியன் தலைமையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. கிண்டி லேபர் காலனியில் தொடங்கிய மாரத்தான் ஓட்டத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன் உட்பட ஏராளமானோர் பங்கேற்று, மெரினா கடற்கரை வரை 21 கிலோ மீட்டர் தூரம் ஓடினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பாதிப்பிற்கு பிறகு நாள்தோறும் 10 கிலோ மீட்டர் ஓடுவதாகவும் தன்னை போலவே மற்றவர்களுக்கு தினமும் ஓட்டப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார். தமிழகத்திற்கு நேற்று 5 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளதாக கூறிய அவர், இன்று மேலும் 3 லட்சம் தடுப்பூசிகள் வரும் என தெரிவித்தார்.

  15:36 (IST)

  சென்னையில் மீண்டும் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

  சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று முதல் மீண்டும் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு பதினொன்றறை கோடி தடுப்பூசிகள் தேவைப்படுவதாகவும் ஆனால் மத்திய தொகுப்பில் இருந்து இதுவரை ஒரு கோடியே 60 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

  13:58 (IST)

  ஓபிஎஸ் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் தான்; எடப்பாடி சர்வாதிகாரியாக இருக்கிறார்; அதிமுக முன்னாள் எம்.பி சுந்தரம

  அதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டது, ஓபிஎஸ் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் தான், பதவி கிடைத்தால் போதும் என நினைக்கிறார்
  எடப்பாடி சர்வாதிகாரியாக இருக்கிறார் என அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி சுந்தரம் தெரிவித்துள்ளார்.