அதிரடி வெற்றி மூலம் 8 புள்ளிகள் 0.363 என்ற நெட் ரன் ரேட்டுடன் 4ம் இடத்தில் கொல்கத்தா மற்ற அணிகளை அச்சுறுத்துமாறு முன்னேற, ராஜஸ்தான் ராயல்ஸ் 5ம் இடத்தில் இருக்க முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் 6ம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. 156 ரன்கள் வெற்றி இலக்கை அனாயசமாக 15 ஓவர்களில் விரட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தான்னா பயம் வரணும்..
கொல்கத்தா அணியின் இந்த புதிய ஆக்ரோஷ அதிரடி அவதாரத்தில் ஷுப்மன் கில், ’பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல’ ரக ரஜினி ரசிக அதிரடி வெங்கடேஷ் அய்யர் தொடக்க அதிரடியைப் பார்க்கும் போது 1994-96 ரணதுங்கா தலைமை இலங்கை அணியில் ஜெயசூரியா-கலுவிதரானா ஆடுவது போல் இருந்தது. குறிப்பாக 3ம் நிலையில் ராகுல் திரிபாதி அடித்த அடி அப்போதைய இலங்கை அணியின் அரவிந்த டி சில்வாவை நினைவூட்டியது. பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லமின் ஸ்பிரிட் கொல்கத்தா அணி மேல் இறங்கியுள்ளது போல் தெரிகிறது.
அன்று ஆர்சிபியை ஊதிய போதும் புதிய அணுகுமுறை வெளிப்பட்டது, ஆனால் ஆர்சிபி சொதப்பலால் அது சரியாக எடுபடவில்லை, ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியை புரட்டி எடுத்ததும் புரிந்தது கொல்கத்தா எடுத்திருப்பது புதிய அவதாரம், மற்ற அணிகள் பயப்பட வேண்டும் என்று ஆடுவதும் தெரிகிறது. அதுவும் ஷுப்மன் கில் முதல் ஓவரை ட்ரெண்ட் போல்ட் வீச 2வது பந்தை 2 அடி மேலேறி வந்து டீப் ஸ்கொயர்லெக் மேல் அடித்த சிக்ஸ் உண்மையில் மெக்கல்லம் ரகம், கலுவிதரானா ரகம், சச்சின் டெண்டுல்கர் ரகம்.
இவர் சிக்ஸ் அடித்தது போதாதென்று வெங்கடேஷ் அய்யர் அதே ஓவரில் போல்ட்டை இன்னொரு புல் ஷாட் ஆடி சிக்ஸ் அடித்ததும் சரி! மும்பைக்கு படையல் காத்திருக்கிறது என்று புரிந்தது. சரி போல்ட்டாவது வேகம் குறைவு ஆடம் மில்னே அதிவேக பவுலர், அவர் வீசுகிறார் மீண்டும் வெங்கடேஷ் அய்யர் புல் ஷாட்டில் மில்னெவையும் சிக்ஸ் விளாச அடுத்த பந்தை பேக்ஃபுட் பஞ்ச் ஆடி ஆஃப் திசையில் பவுண்டரிக்கு விரட்டியது அற்புதம். மீண்டும் கடைசி பந்தை அரைகுறையாக அடிக்காமல் ஒரே சுற்று சுற்ற எட்ஜ் ஆனாலும் பவுண்டரிக்கு தெறிக்க 2 ஒவர்களில் 30 ரன்கள்.
இந்தப் பக்கம் பும்ராவைக் கொண்டு வந்தால் கில் முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பினார். அய்யர் வந்து பும்ராவை நேராக ஒரு வெளு வெளுக்க பவுண்டரி. பும்ராவுக்குமே இதே கதியா என்று ஆச்சரியப்படும் நேரத்த்தில்தான் பும்ரா வீசிய ஃபுல் லெந்த் ஆஃப் கட்டரை அரைகுறையாக ஆடி மட்டையில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு வெளியேறினார் ஷுப்மன் கில்.
சரி ஷுப்மன் கில்லைத் தூக்கி விட்டோம் இனி கொஞ்சம் இளைப்பாறலாம் என்றால் ராகுல் திரிபாதி இறங்கினார். வந்தவுடனேயே போல்ட்டை ஸ்லாஷ் செய்து பவுண்டரிக்கு அனுப்பினார். மில்னேவை பெடல் ஷாட் அடித்து பவுண்டரிக்கு விரட்டினார். பவர் ப்ளே முடிவில் 63/1. வேடிக்கை என்னவெனில் பவர் ப்ளே கள கட்டுப்பாடுகள் முடிந்து பீல்ட் பரவலாக்கப்பட்ட பிறகும் திரிபாதி, வெங்கடேஷ் ஓயவில்லை. வெங்கடேஷ் அய்யர் 25 பந்துகளில் அரைசதம் கண்டார். பும்ரா பந்தை பைன் லெக்கில் தூக்கி விட முயன்ற திரிபாதியின் ஷாட் எட்ஜ் எடுத்து தேர்ட் மேனில் சிக்ஸ் ஆக திரிபாதி 29 பந்துகளில் அரைசதம் கண்டார்.
ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.
அய்யர் 30 பந்துகளில் பும்ராவின் ஸ்லோயர் ஒன்னில் பவுல்டு ஆனாலும் பயனில்லை ஏனெனில் ஸ்கோர் 12வது ஓவரில்128 ரன்கள் என்று மும்பையை நோக்கி உறுமியது. ராகுல் சாகரை திரிபாதி ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். மோர்கன் சாகரை இன்னொரு சிக்ஸ் அடித்து பும்ராவின் 3வது விக்கெட்டாக வெளியேறினார். கடைசியில் ரோகித் சர்மாவே கையை சுற்ற நிதிஷ் ராணா ரிவர்ஸ் ஸ்வீப் பவுண்டரியில் வெற்றி ரன்னை எடுத்தார். மொத்தத்தில் கொல்கத்தான்னா பயம்னு எல்லாரும் சொல்ற மாதிரி ஒரு புது அவதாரம் எடுத்துள்ளது அந்த அணி.
முன்னதாக பவுலிங்கில் வருண் சக்ரவர்த்தி 0/22, லாக்கி பெர்கூசன் 2/27, சுனில் நரைன் 1/20, பிரசித் கிருஷ்ணா 2/43 என்று அசத்த மும்பை இந்தியன்ஸ் 89/1-லிருந்து 155க்கு மட்டுப்படுத்தப்பட்டது, ஆட்ட நாயகன் சுனில் நரைன்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IPL 2021, News On Instagram, Rohit sharma