காவல் நிலையத்தில் வைத்து புதுமண ஜோடியை தாக்கி பெண் கடத்தல்...!

  • News18
  • Last Updated: December 29, 2019, 1:01 PM IST
  • Share this:
திருமணம் ஆன காதல் ஜோடியை காவல்நிலையத்தில் வைத்தே உறவினர்கள் தாக்கி, பெண்ணை கடத்திச் சென்ற சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே துவரங்காடு பகுதியை சேர்ந்தவர் தாசம்மாள். இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவரது இரண்டாவது மகன் 28 வயதான பியூட்டலின். இவரும் வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்த சரண்யா என்ற பெண்ணும் மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

காதலர்கள் இருவரும் வேறு வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் இருவரின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். எதிர்ப்பையும் மீறி கடந்த 23-ம் தேதி பியூட்டலின் தனது உறவினர்கள் முன்னிலையில் சரண்யாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.


இதனையடுத்து தனது மகளை காணவில்லை என்று சரண்யாவின் குடும்பத்தார் வெள்ளிச்சந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இவர்களைத் தேடி பியூட்டலின் வீட்டிற்கு வந்த வெள்ளிச்சந்தை காவல் நிலைய போலீசார், விசாரணைக்கு திருமணமான காதல் ஜோடியை அழைத்து வரும்படி கூறிச் சென்று விட்டனர்.

காவல்துறையினரின் விசாரணைக்காக 25 -ம் தேதி பியூட்டலின் அவரது மனைவி சரண்யா மற்றும் உறவினர்களுடன் வெள்ளிச்சந்தை காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்

அப்போது காவல் நிலையத்திற்கு வெளியே பதுங்கியிருந்த பெண்ணின் உறவினர்கள் இவர்களை சூழ்ந்துகொண்டு பியூட்டலினை சரமாரியாக தாக்கியதோடு சரண்யாவை அருகிலிருந்த காரில் ஏற்றிக் கொண்டு சென்றதாக தெரிகிறது.இதில் காயமடைந்த பியூட்டலின் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

தனது மருமகளை அவரது உறவினர்கள் ஆணவக் கொலை செய்ய வாய்ப்புள்ளதாக பியூட்டலின் தாயார் தாசம்மாள் அச்சம் தெரிவித்து குமரி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

 

விசாரணைக்காக காவல்நிலையம் வந்த திருமணமான காதல்ஜோடியை காவல் நிலையத்தில் வைத்தே தாக்கி புது மணப்பெண் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
First published: December 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்