தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளி ஆகிய இடங்களில் கடந்த 30 ஆண்டுகளாக அசோகன் என்ற பெயரில் தங்க நகை கடைகள் செயல்பட்டு வந்தன.இங்கு நகைகளுக்கு வட்டி இல்லா கடன், சிறுசேமிப்பு திட்டம், சிறுசேமிப்பு மூலம் வீட்டு மனை பட்டா. நகைகள் வாங்க விற்க என பல்வேறு திட்டங்களை கூறி பொதுமக்களிடம் விளம்பரப்படுத்தப்பட்டது. நகைக்கடை உரிமையாளர் சுந்தர பாண்டியன் மார்க்கெட்டில் யாரும் தர முடியாத குறைந்த விலைக்கு தங்க நகை தருவதாகவும், விற்கப்படும் தங்க நகைக்கு கேட்கும் தொகையைத் தருவதாகவும் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்தார்.
வங்கியில் ஏலத்திற்கு சென்ற நகைகளை மீட்டுத் தருவதாகவும், சிறு சிறு நகைகளை புதிதாக மாற்றித் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி வலை விரித்தார் இதனை நம்பிய ஆயிரக்கணக்கான மக்கள் நகைக்கடையில் தங்கள் நகைகளை அடகு வைத்ததுடன், சேமிப்புத் திட்டங்களில் பணத்தையும் முதலீடு செய்துள்ளனர். அண்ணன் இருக்கிறேன்.. அண்ணங்கிட்ட வாங்க.. அண்ணனைக் கூப்பிடுங்க என அன்போடு பேசி பொதுமக்களிடமிருந்து சுமார் 50 கோடி ரூபாய் வரை சுருட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி முதல் அசோகன் தங்க நகைக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. கடைகளில் இருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் மாயமாகியிருந்தது கண்டு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பொதுமக்கள் ஆங்கங்கே காவல் நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் சுமார் 700 புகார்கள் இதுவரை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது பணத்தை பெற்று தரக் கோரி தஞ்சை அண்ணா சிலை அருகே உள்ள அசோகன் தங்க நகை கடை முன் குவிந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விசாரணையில், தங்க நகை கடையில் மிகப்பெரிய லாபம் வந்ததால், அதனை உரிமையாளர் சுந்தரபாண்டியன் பல்வேறு துறைகளில் முதலீடு செய்தது தெரியவந்தது.
குறிப்பாக மீன் - இறால் ஆகியவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது. நட்சத்திர உணவகங்கள், ரியல் எஸ்டேட், பள்ளிக்கூடம் என பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளார். கொரோனா காலத்தில் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதால், அதனை சரி செய்வதற்கு முதலீடு செய்தவர்களின் பணத்தினை பயன்படுத்தி கொண்டுள்ளார்.
இதனால் கடந்த ஆறு மாத காலத்திற்கு முன்பிருந்தே கடையை மூடுவதற்கான திட்டத்தை செயல்படுத்தியுள்ளார் சுந்தரபாண்டியன்.கடையில் உள்ள அனைத்து பொருட்களையும் கொஞ்சம் கொஞ்சமாக அப்புறப்படுத்தியுள்ளார். கடையை முழுமையாக மூடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது சொத்து ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் அப்புறப்படுத்தியுள்ளார்.
தனது சொந்த காரில் எடுத்து சென்றால் பிடிபட்டு விடுவோம் என்று தனது நெருங்கிய நண்பரின் காரில் ஆவணங்களையும், நகைகளையும் சென்னைக்கு எடுத்துச் சென்றுள்ளார். காவல் துறையினரிடம் இது குறித்து கேட்ட போது, பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் அதிகளவில் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில் 50 கோடி ரூபாய் வரை மோசடி நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். பொதுமக்களின் நகை பணத்துடன் 6 மாதங்களாக திட்டமிட்டு எஸ்கேப் ஆனவர் லண்டனில் செட்டில் ஆக உள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்குள் போலீசார் நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தருவார்கள் என எதிர்பார்த்து பொதுமக்கள் காத்திருக்கின்றனர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Thanjavur