இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட மோதல்... ராக்கெட் தாக்குதலில் 70 பேர் பலி

ராக்கெட் தாக்குதல்

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனிய போராட்டக் குழுவிற்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தாக்குதல்களை உடனடியாக நிறுத்தும்படி ஐ.நா வலியுறுத்தியுள்ளது.

 • Share this:
  இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள ஜெருசலம் நகரில் அல் - அக்சா மசூதியில் ரம்ஜான் மாத தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை இஸ்ரேல் ராணுவத்தினர் விரட்டியடித்தனர். இதற்கு பதிலடியாக காசாவில் உள்ள பாலஸ்தீனிய ஆயுதக் குழுவான ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.

  அதைத்தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் ராணுவமும் குண்டு மழை பொழிந்து வருகிறது. புதன்கிழமையன்று காசா பகுதியில் உள்ள இரண்டு கோபுரங்களை இஸ்ரேல் ராணுவம் தகர்த்துள்ளது. மேலும் இடைவிடாமல் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டதால் காசாவில் காணும் இடமெல்லாம் புகைமண்டலமாக காட்சியளித்தது.

  இதையடுத்து, இஸ்ரேலின் டெல் அவீவ் நகரை நோக்கி ஆயிரக்கணக்கான வான்வழி தாக்குதல்களை ஹமாஸ் அமைப்பினர் நடத்தினர். இந்த தாக்குதலில் இஸ்ரேலின் லாட்(lod) பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் கார் உருக்குலைந்தது. இதில், 16 வயது சிறுமி அவரது தந்தை ஆகியோர் உயிரிழந்தனர்.

  இதேபோன்று தெற்கு இஸ்ரேலில் ஒருவர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதில், ஆஷ்கேலோன் நகரில் பணிபுரிந்து வந்த கேரளாவின் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த செளமியா சந்தோஷ் என்பவரும் ஒருவர். தாக்குதல் நடந்த சமயத்தில் கேரளாவில் உள்ள தனது கணவர் சந்தோஷ் உடன் சௌமியா வீடியோ கால் மூலம் பேசிக்கொண்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  டெல் அவிவ் நகரை நோக்கி வந்த பெரும்பாலான ராக்கெட்டுகளை நடு வானில் மறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. காசாவில் 13 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்திருப்பதாக அந்த பிராந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. மேலும், 400 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர்.

  இதனிடையே, காசா பகுதியில் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தளபதி உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், காசா மீதான தாக்குதல் தொடரும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

  2014ம் ஆண்டுக்கு பிறகு காசா பகுதியில் இரு தரப்பினரும் மாறி மாறி வான்வழி தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், இருதரப்பும் உடனடியாக தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா அவை பொதுசெயலாளர் அண்டோனியோ குட்டெரஸ் வலியுறுத்தியுள்ளார்.

   
  Published by:Vijay R
  First published: