நாளை லார்ட்ஸ் டெஸ்ட்: இந்திய அணியின் 11 வீரர்கள் யார்?

நாளை லார்ட்ஸ் டெஸ்ட்- இந்திய அணி

லார்ட்ஸில் நாளை, 12ம் தேதி தொடங்கும் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் 11 வீரர்கள் யாராக இருக்கலாம் என்று பார்ப்போம்.

  • Share this:
    லார்ட்ஸில் நாளை, 12ம் தேதி தொடங்கும் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் 11 வீரர்கள் யாராக இருக்கலாம் என்று பார்ப்போம்.

    நாட்டிங்காம் டெஸ்ட் போட்டியில் வருண பகவான் இங்கிலாந்துக்குச் சாதகமாக நடந்து கொள்ள டெஸ்ட் போட்டி டிரா ஆனது, எப்போதும் முதல் டெஸ்ட்டில் இந்திய அணியை வீழ்த்த முடியவில்லை எனில் இந்த இந்திய அணியை அதன் பிறகு வீழ்த்துவது கடினம் என்று கூறலாம்.

    முகமது ஷமி 3/28 என்று இங்கிலாந்து மிடில் ஆர்டரைக் காலி செய்தார்.


    ஒரே ஒரு இங்கிலாந்து தொடரில் மட்டும் தோனி கேப்டன்சியில் முதல் டெஸ்ட் லார்ட்சில் வென்று பிறகு தோனியின் தப்பும்தவறுமான கேப்டன்சியினால் தொடரை இழக்க நேரிட்டது, மற்றபடி இந்த இந்திய அணியில் பேட்ஸ்மென்கள் பார்முக்கு வரவே அதிக வாய்ப்புள்ளது.

    இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், பிராட் ஆடுவது சந்தேகம் என்பது இந்திய அணிக்கு சாதகம் என்றாலும் பிராடை என்ன செய்வது என்று விழிக்கும் இங்கிலாந்துக்கு சாகிப் மகமூத் என்ற பிரமாதமான பவுலரை களமிறக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. மார்க் உட் வரலாம், மொயின் அலியை கொண்டு வருவதைப் பார்த்தால் பிட்சில் ஸ்பின் போகப் போக எடுக்கும் வாய்ப்பு இருப்பதால் இந்தியாவில் அஸ்வின் இடம்பெறுவது உறுதி என்று தெரிகிறது.

    பும்ரா பந்து வீசும் காட்சி.


    ஷர்துல் தாக்கூர் காயமடைந்திருப்பதால் அவர்து இடத்துக்கு அஸ்வின் வர வாய்ப்புள்ளது, அதே போல் சிராஜுக்குப் பதில் இஷாந்த் சர்மா வரவும் வாய்ப்புள்ளது.

    பேட்டிங்கில் ராகுல், ரோகித் சர்மா நன்றாகவே ஆடுகின்றனர். பிரச்னைக்குரிய மூவர் கூட்டணி புஜாரா, கோலி, ரகானே ஆவார்கள், இதில் புஜாரா, கோலி எட்ஜ் ஆகி அவுட் ஆகினர், ஆனால் ரகானே ரன் அவுட் ஆனதால் அவர் பார்ம் அவுட் என்று கூற முடியாது.

    புஜாரா 9 இன்னிங்ஸ்களாக அரைசதமே அடிக்கவில்லை.

    52/1 என்று 4ம் நாள் ஆட்ட முடிவில் 5ம் நாள் வெற்றி கனவுடன் பெவிலியன் திரும்பும் ரோகித் சர்மா, புஜாரா


    புஜாராவுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். கோலி பார்முக்கு வர வாய்ப்புள்ளது ஏனெனில் லார்ட்ஸில் நிலைமை வறட்சியாகவே இருக்கும், பிட்சும் ஸ்பின் பவுலிங்குக்கு பெரிதும் உதவும், இங்கிலாந்தில் பொதுவாக ஸ்விங் ஆகும் அதில் மாற்றமில்லை.

    ஆனால் கோலி சூசகமாகத் தெரிவித்ததை வைத்துப் பார்க்கும் போது 4 வேகப்பந்து வீச்சு ஒரு ஸ்பின் என்றால் அஸ்வின் எப்படி வருவார் என்று தெரியவில்லை, ஒருவேளை ஜடேஜாவையே உட்கார வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஹனுமா விகாரிக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம் அப்படி விகாரி ஆடினால் அவர் ஆஃப் ஸ்பின்னும் வீசுவார் பேட்டிங்கிலும் ஆடுவார்.

    ரவிச்சந்திரன் அஸ்வின்


    எனவே இந்தியா என்ன செய்யப்போகிறது என்று தெளிவாகத் தெரியாவிட்டாலும் ஒரு சில மாற்றங்கள் தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.

    குறிப்பாக அஸ்வின் வருவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    இங்கிலாந்து பேட்டிங் ஜோ ரூட் நீங்கலாக ஒன்றும் சோபிக்கவில்லை. இதனால் பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி, உமேஷ் யாதவ், அஸ்வின் ஆடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    ஜடேஜா.


    இந்திய அணி இவ்வாறு இருக்கலாம்:

    ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், புஜாரா, விராட் கோலி, ரகானே, ரிஷப் பந்த், ஜடேஜா, அஸ்வின், ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா.

    என்று அமைய வாய்ப்புள்ளது. ஜடேஜா, அஸ்வின் இருக்கும் போது பேட்டிங்கும் பிரச்னையில்லை, கட்ந்த போட்டியில் பும்ரா, ஷமியும் பங்களிப்பு செய்தனர், இஷாந்த் சர்மா பிட்சில் நிற்கக் கூடியவர் தன் விக்கெட்டை விட்டெறியாதவர் எனவே இந்த பழைய காம்பினேஷனுக்கு கோலி திரும்புவார் என்று எதிர்பார்க்கலாம்.

    பிட்ச் டாஸ் வென்று முதலில் பேட் செய்யும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Muthukumar
    First published: