INDvBAN | அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா... தொடரைவிட்டு வெளியேறியது வங்கதேசம்

ICC World Cup 2019 | India vs Bangladesh | வங்கதேச அணியில் ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய சஹிப் உல் ஹசன் அரைசதம் கடந்தார்

Web Desk | news18
Updated: July 2, 2019, 11:09 PM IST
INDvBAN | அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா... தொடரைவிட்டு வெளியேறியது வங்கதேசம்
INDvBAN
Web Desk | news18
Updated: July 2, 2019, 11:09 PM IST
வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

உலகக் கோப்பை தொடரின் 40-வது லீக் போட்டியில் இந்தியா - வங்கதேச அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா களமிறங்கினர். இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் டக் அவுட்டாகி ஏமாற்றிய ராகுல் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.


உலகக் கோப்பை தொடரில் தனது 5-வது சதத்தை பதிவு செய்த ரோஹித் சர்மா 92 பந்துகளில் 104 ரன்கள் விளாசி அவுட்டானார். கே.எல்.ராகுல் 92 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து அவுட்டாகி வெளியேற அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி 26 ரன்னில் அவுட்டானார். நடப்பு உலககோப்பை தொடரில் அரைசதம் அடிக்காமல் விராட் கோலி அவுட்டாவது இதுவே முதன்முறை.

விராட் அவுட்டானதை தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா வந்த வேகத்தில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். உலகக் கோப்பை தொடரில் முதன் முறையாக களமிறங்கிய தினேஷ் கார்த்தி 8 ரன்களில் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.

தோனி வழக்கமான ஆட்டத்தையே இந்தப் போட்டியிலும் வெளிப்படுத்தினார். பந்துக்குப் பந்து சிங்கிள் ஆடிய அவர் கடைசியாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்றபோது அவுட்டானார்.

Loading...

தோனி 33 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். இறுதியாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவி்ல் 9 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்தது.

அரையிறுதி சுற்று வாய்ப்பை தக்கவைத்து கொள்ள வங்கதேசக்கு இன்றைய போட்டி முக்கியமானது என்பதால் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் களமிறங்கினர். தொடக்க வீரர்களான இக்பால், சௌமியா சர்கார் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

தமீம் இக்பால் 22 ரன்கள் எடுத்திருந்த போது ஷமி வீசிய பந்தில் போல்டாகி வெளியேறினார். அவரை தொடர்ந்து வங்கதேச அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர் சஹீப் உல் ஹசன் களமிறங்கினார்.

சௌமியா சர்கார் 22, ரஹீம் 24, லிட்டன் தாஸ் 22, உசேன் 3 ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய சஹிப் உல் ஹசன் அரைசதம் கடந்தார்.

சஹிப் உல் ஹசன் களத்தில் சிறப்பாக விளையாடி கொண்டிருந்ததால் வங்கதேச ரசிகர்கள் போட்டியின் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்துவார் என பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில் 66 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

அவரை தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணி பேட்ஸ்மேன்கள் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 286 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தனர். இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு 2வது அணியாக முன்னேறியது.
First published: July 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...