75 டெஸ்ட் போட்டிகளை இதுவரை ஆடியுள்ள ஆஸ்திரேலியாவின் நம்பர் 1 பேட்ஸ்மென் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் 61.33 என்ற நினைத்துப் பார்க்க முடியாத சராசரியை வைத்துள்ளார்.
26 சதங்களையும் 29 அரைசதங்களையும் எடுத்துள்ளார். இது மிகப்பிரமாதமான கன்வர்ஷன் விகிதம் என்பார்கள், அதாவது அரைசதங்களை சதமாக மாற்றும் கலையில் ஸ்டீவ் ஸ்மித் பிரமாதமான வீரர்.
ஆனால் அவர் ஒரு டெஸ்ட் தொடரில் 2 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பியதாக இதுவரை சரித்திரம் இல்லை. இந்தியாவுக்கு எதிரான தற்போதைய தொடரில் ஸ்மித் 0, 1 நாட் அவுட், 1, 8 என்று பயங்கரமாகச் சொதப்பி வருகிறார். இது அவரது வீழ்ச்சியின் தொடக்கமா என்ற கேள்வி எழுந்ததன் காரணம் அவரது பிரதான உத்தியே, அவரது பலமே பலவீனாமாக இந்திய பவுலர்களால் மாற்றப்பட்டுள்ளது.
ஒரு புறம் அஸ்வினின் ஜீனியஸ் அவரது இந்த பேட்டிங் சொதப்பல்களுக்குக் காரணம் என்றால் மறுபுறம் பும்ரா அவரது உத்தியையே சந்தேகத்திற்கிடமாகி விட்டார்.
அடிலெய்ட் டெஸ்ட்டில் அஸ்வினின் அண்டர்-கட்டர் பந்துக்கு ரஹானேவிடம் கேட்ச் ஆனார். இது ஒருமாதிரியான சைடு ஸ்பின் பந்தின் தையலில் பட்டுத் திரும்பாமல் பந்தின் கீழ்ப்பகுதியில் பட்டு சறுக்கிக் கொண்டு நேராகச் செல்லும், இந்தப்பந்து திரும்பும் என்று அவர் நினைத்துத்தான் ஆடினார், ஆனால் அது நேராகச் செல்லும் வழியில் ஸ்மித் மட்டையின் விளிம்பைத் தொட்டுச் சென்றது.
அடிலெய்ட் சொதப்பல் மெல்போர்னிலும் அவரது மனதை இறங்கும்போதே பதற்றத்தில் தள்ளியது, இம்முறை ரஹானே 10வது ஓவரிலேயே அஸ்வினைக் கொண்டு வந்தார், பிட்சில் கொஞ்சம் ஈரப்பதம் இருக்க பந்து பிட்ச் ஆகி எழும்பித் திரும்பும் களமாக இருந்தது. இந்த முறை ரஹானே ஸ்மித் மட்டையைச் சுற்றி பீல்டர்களை நிற்க வைத்தார், ஷார்ட் லெக், பேக்வர்ட் ஷார்ட் லெக் என்று அவரை நெருக்கினார். இந்த முறை அடிலெய்ட் போல் அல்லாமல் பந்தை திருப்பினார் அஸ்வின் ஸ்மித் இயல்பாக அதை ஆடப்போக எட்ஜ் ஆகி கேட்ச் ஆனது. ஒருவிதத்தில் நிறுத்தி வைத்து எடுத்தது போல்தான்.
2வது இன்னிங்சில் பும்ராவின் அசாத்திய புத்திசாலித் தனம் மற்றும் துல்லியத்துக்கு இரையானார் ஸ்மித். அதாவது ஸ்மித் 12,000 ரன்களை அனைத்து வடிவத்திலும் எடுத்தது எப்படி எனில் கிரீசில் அப்படியே நகர்ந்து ஆஃப் சைடுக்கு வந்து விடுவார், லெக் ஸ்டம்ப் கிட்டத்தட்ட தெரியும். பவுலர்கள் நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு அவரது லெக் ஸ்டம்பைக் குறிவைத்து ஸ்மித்திடம் சாத்து வாங்குவதுதான் வழக்கம்.
மேலும் லெக் ஸ்டம்பிலேயே குறிவைத்து பவுலர்கள் வீசும் போது மீண்டும் அவர்களால் லைன் மற்றும் லெந்த்தை சரியான விதத்தில் கொண்டு வர முடியாமல் சொதப்பி ஸ்மித்திடம் வாங்கிக் கட்டிக் கொள்வார்கள். ஆனால் பும்ரா அன்று அவரது இந்த உத்தியையே சந்தேகிக்கும் விதமாக லெக் ஸ்டம்பில் வீசி பைல்களை கழற்றினார்.
ஸ்மித் ஒருமுறை ஆச்சரியத்துடன் பார்த்து விட்டுச் சென்றார். இந்த முறை பும்ரா குட் லெந்தில் சற்றே வேகம் குறைத்து வீசினார், ஸ்மித் பிளிக் சிக்கவில்லை. மிக முக்கியமான தருணம், அந்த விக்கெட்டும்தான் ஸ்மித்தின் வலுவான உத்தி கேள்விக்குட்படுத்தப்பட்ட விதத்திலும்தான் முக்கியமான தருணம்.
ஸ்மித்தின் இத்தனை கால பலத்தையே ஆட்டம் காணச் செய்து அவரது அடித்தளத்தையே பும்ரா, அஸ்வின் அசைத்து விட்டனர், நொறுக்கி விட்டனர். இனி ஸ்மித் என்ன செய்வார் என்பதைப் பார்க்க ஆர்வமாகவே உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India vs Australia, Jasprit bumrah, Melbourne, R Ashwin, Steve Smith