எந்த நாளாவது அவரது டயலாக்கை கேட்காமல், மீம் பார்க்காமல் முடிகிறதா என்ன? - காமெடி பொக்கிஷம் வடிவேலுவின் பிறந்தநாள் இன்று..

எந்த நாளாவது அவரது டயலாக்கை கேட்காமல், மீம் பார்க்காமல் முடிகிறதா என்ன? - காமெடி பொக்கிஷம் வடிவேலுவின் பிறந்தநாள் இன்று..

வடிவேலு

நகைச்சுவை நட்சத்திரமாக நடித்தாலும் நாயகனுக்கு நிகரான புகழை பெறும் வடிவேலு இம்சை அரசன் 23ம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா அழகப்பன், எலி என சில திரைப்படங்களில் நாயகனாக நடித்து ரசிகர்களை குணப்படுத்தினார்.

 • Share this:
  தமிழ் சினிமாவின் காமெடி பொக்கிஷம் என கொண்டாடப்படும் நடிகர் வடிவேலு இன்றுடன் தனது அறுபதாவது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

  தமிழர்களின் எல்லா உணர்வுகளுக்குமான நகைச்சுவைகளை வாரி கொடுத்தவர் நடிகர் வடிவேலு. எத்தனை கடினமான சூழல்களையும் ஒரு புன்னகையுடன் கடந்து செல்லும் வகையில் வடிவேலுவின் நகைச்சுவைகள் ஒரு நாளில் நீக்கமற நிறைந்து விடுகிறது. அன்றாடம் நடைபெறும் அரசியல் நிகழ்வுகளையும் வடிவேலுவின் நகைச்சுவைகளுடன் ஒப்பிட்டு மீம்களை பறக்க விடுகின்றனர் நெட்டிசன்கள். தமிழில் ஒரு பாடல் வெற்றி பெற்றுவிட்டால் அந்த பாடலில் வடிவேலுவை பொருத்தி ரசிகர்கள் காட்டும் எடிட்டிங் வித்தை பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

  எல்லா சூழலுக்கும் எல்லா உணர்வுகளுக்கும் நகைச்சுவையை வாரி வழங்கிய வடிவேலு வாழ்க்கையின் முதல் பகுதியில் மிக கடினமான நாட்களை கடந்தவர். புகைப்படத்திற்கு பிரேம் போடும் வேலை செய்துவந்த வடிவேலு 1988ஆம் ஆண்டு சினிமாவில் நடிக்கும் கனவை வளர்த்துக் கொண்டார். 1991 ஆம் ஆண்டு வெளிவந்த என் ராசாவின் மனசிலே திரைப்படம் வடிவேலு நகைச்சுவை நடிகனாக ஒரு அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்தது.

  தொடர்ந்து கவுண்டமணி செந்தில் என அன்றைய தேதியில் முன்னணி காமெடியன்களாக விளங்கியவர்களுடன் இணைந்து பயணித்த வடிவேலுக்கு ஒரு தனி நகைச்சுவை நடிகனாக வடிவேலுவுக்கு அடையாளத்தை வழங்கிய திரைப்படம் காதலன்.

  காதலன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழில் முன்னணி காமெடி நடிகனாக உருவான வடிவேலு தன்னுடைய வசீகரக் குரலால் பாடி அவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.  தன் குரலும், பழைய பாடல்களை அசாத்தியமாக பாடும் திறனும் இவருடைய நகைச்சுவை காட்சிகளிலும் அவ்வப்போது வெளிப்பட்டது. பிரபலமான பல பாடல்களையும் இவரது குரலில் விளையாட்டாக பாடி அதையும் பிரபலம் அடையச் செய்தார் வடிவேலு.

  பாரதி கண்ணம்மா திரைப்படத்தில் பார்த்திபனுடன் ஜோடி சேர்ந்த வடிவேலு தனக்கான காமெடி டிராக்கை உருவாக்கிக்கொண்டார். செந்தில் கவுண்டமணி போல ஒரு இரட்டையராக பார்த்திபன் வடிவேலு கூட்டணி வெற்றிக்கொடி கட்டு, குண்டக்க மண்டக்க என பல திரைப்படங்களிலும் இணைந்து வயிறு குலுங்க சிரிக்க வைத்தனர்.

  காமெடி நடிகனாக வலம் வந்தாலும் வடிவேலுவின் நடிப்பு திறமை பல திரைப்படங்களிலும் அபாரமாக வெளிப்பட்டது. தேவர்மகன், சங்கமம் உள்ளிட்ட திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் மட்டுமின்றி உருக்கமான காட்சிகளிலும் நடித்து பலரையும் அழைத்து தன்னுடைய நடிப்புத் திறனை நிரூபிக்கிறார் வடிவேலு.

  ஒரே மாதிரியான நகைச்சுவை காட்சிகளில் நடித்து வருகிறார் வடிவேலு என்ற விமர்சனம் கிளம்பியபோது, வின்னர் திரைப்படத்தில் தனக்கான புது டிராக்கை பிடித்தார். அசால்ட்டான உடல் மொழியோடு வடிவேல் நடித்த கைப்புள்ள கதாபாத்திரம் ரசிகர்களின் மனங்களில் பதிந்து போக, அதே பாணியில் கிரி, நகரம் என வரிசையாக திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். செட்டப் செல்லப்பா, நாய் சேகர், தீப்பொறி திருமுகம் என இவர் நடித்த கதாபாத்திரங்களின் பெயர்களை சொன்னால் திரைப்படங்களை சொல்லுமளவிற்கு வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்த்து மனனம் செய்தனர் ரசிகர்கள்.

  மேலும் படிக்க: மம்முட்டிக்கு சொந்தமான ‘369’ எண் கொண்ட கார்கள் - இணையத்தில் வைரல்!

  வடிவேலு பேசும் நகைச்சுவை பஞ்ச் வசனங்கள் ரஜினிகாந்த் பேசும் பஞ்ச் வசனங்களுக்கு நிகராக வரவேற்ப்பை பெரும் சூழலில் சந்திரமுகி வெற்றி விழாவில் நடிகர் வடிவேலுவின் தேதி களுக்காக தான் காத்திருந்ததாக சொல்லி வடிவேலுவை மேலும் பெருமைப்படுத்தினார் ரஜினிகாந்த்.

  ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நட்சத்திரமாக நடித்தாலும் நாயகனுக்கு நிகரான புகழை பெறும் வடிவேலு இம்சை அரசன் 23ம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா அழகப்பன், எலி என சில திரைப்படங்களில் நாயகனாக நடித்து ரசிகர்களை குணப்படுத்தினார். 2011-ஆம் ஆண்டு அரசியல் காரணங்களுக்காக நடிப்பதில் இருந்து ஒதுங்கிக் கொண்ட வடிவேலு, காவலன், மெர்சல் உள்ளிட்டு வெகு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தார். அண்மைக்காலமாக பல திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டு தயாரிப்பாளருடன் ஏற்பட்ட முரண்பாடு, தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள தடை உத்தரவு என பல சர்ச்சைகளிலும் சிக்கி நடிப்பதில் இருந்து விலகி உள்ள வடிவேலு மீண்டும் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை மீண்டும் சிரிக்க வைக்க வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
  Published by:Gunavathy
  First published: