Explainer: ஒளியை ஏற்றுமா ஒலிம்பிக் சுடர்?

Explainer: ஒளியை ஏற்றுமா ஒலிம்பிக் சுடர்?

ஒளியை ஏற்றுமா ஒலிம்பிக் சுடர்? (படம்: வாஷிங்டன் போஸ்ட்)

வரும் 25 ஆம் தேதி புகுஷிமாவில் தொடங்கும் ஒலிம்பிக் சுடரின் தொடர் ஓட்டம் அடுத்த 121 நாட்களுக்கு ஜப்பான் முழுவதும் வலம் வர உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
வழக்கமாக ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பு நடக்கும் ஒலிம்பிக் சுடர் குறித்து அதிகம் பேசப்படாது அல்லது கவனம் பெறாது என்றாலும், டோக்கியோவில் விரைவில் நடக்க உள்ள 2021 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிக்கான சுடர் ஓட்டம் உலகின் பார்வையை தன்பக்கம் திருப்பியிருக்கிறது. காரணம் கொரொனா பெருந்தொற்றுக்கு இடையே இந்த சுடர் ஓட்டம் நடைபெற உள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவுக்கு அடிகோலும் இந்த ஒலிம்பிக் சுடர் ஓட்டம், ஜூலை 23 ஆம் தேதி தொடங்க உள்ள ஒலிம்பிக் போட்டிகள் நடப்பதை தீர்மானிக்க உள்ளது.

ஓலிம்பிக் சுடர் ஓட்டம்

வரும் 25 ஆம் தேதி புகுஷிமாவில் தொடங்கும் ஒலிம்பிக் சுடரின் தொடர் ஓட்டம் அடுத்த 121 நாட்களுக்கு ஜப்பான் முழுவதும் வலம் வர உள்ளது. சுமார் 47 மாகாணங்களில் பயணிக்கும் ஒலிம்பிக் சுடரை ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் ஏந்தி ஓட உள்ளனர். ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தை சாலைகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசிப்பது உண்டு. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக, இந்த ஆண்டு பார்வையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் கட்டாயம் முகக் கவசம் அணியவேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றுவதுடன், உரக்க கத்துவதை தவிர்க்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒலிம்பிக் சுடர் ஏந்தி ஓடும் நிகழ்வை அமைதியான முறையில் உற்சாகப்படுத்தும்படியும் மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தில் ஏதேனும் பிரச்சனைகள் வந்தால், ஒருவேளை கொரோனா பாதிப்பு அதிகரித்தால் அல்லது ஏதேனும் தவிர்க்க முடியாத தாமதங்கள் ஏற்பட்டால், ஒலிம்பிக் போட்டி நடத்துவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இது குறித்து பேசிய ஒலிம்பிக் போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவதற்காக, அனைத்து குழுக்களையும் ஒருங்கிணைக்கும் குழுவின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள ஓசிரி மூட்டோ (Toshiro Muto), ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தை வெற்றிகரமாகவும், பிரச்சனைகள் இல்லாமல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கவனமாக செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. நவீன ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிய 1896 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை முதன்முறையாக ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது இதுதான் முதன்முறை. கடும் நெருக்கடியான சூழலில் இந்த ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னோட்டமாக இந்த ஒலிம்பிக் சுடர் தொடர் ஓட்டம் பார்க்கப்படுகிறது.

ஒளியை ஏற்றுமா ஒலிம்பிக் சுடர்?

ஒலிம்பிக் சுடரின் மையக்கருத்தாக HOPE LIGHTS OUR WAY என்ற சொற்றொடர் தேர்தெடுக்கப்பட்டுள்ளது. அதாவது, நம் வழியில் ஒளிவீசும் என நம்பிக்கை கொள்வோம் என்ற பொருளை கொண்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டாளர்கள், ஒலிம்பிக் சுடரின் வெளிச்சம் உலகை ஆட்டிப்படைக்கும் பெரும் தொற்றுகளில் இருந்து நம்மை விடுவிக்கும் என நம்பிக்கை கொள்வோம் எனத் தெரிவித்துள்ளனர். இதனிடையே, ஒலிம்பிக் போட்டியை ஜப்பானில் நடத்துவது குறித்து நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் சுமார் 80 விழுக்காட்டினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். போட்டியை தள்ளிவைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என பெரும்பாலான மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு முக்கிய காரணம், வெளிநாட்டு பார்வையாளர்கள் வந்தால் கொரோனா பரவும் என்ற அபாயம் மக்களிடையே இருப்பதாக கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டுள்ள ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டாளர்கள் உள்ளூர் பார்வையாளர்களை மட்டும் போட்டியை பார்க்க அனுமதிப்பது என முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை சுமார் 15 பில்லியன்களுக்கு மேல் ஒலிம்பிக் போட்டி ஏற்பாடுகளுக்கு செலவாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளுக்கு செலவு செய்யப்பட்ட தொகையை விட இது அதிகம் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

Also read... காலரா முதல் கொரோனா வைரஸ் வரை - தொற்றுநோய்களின் வரலாறு பற்றி இந்தியர்கள் மறந்தது ஏன்?

புத்துணர்ச்சி பெற்ற புகுஷிமா

ஜப்பான் நாட்டின் தென் கிழக்கில் அமைந்துள்ள புகுஷிமா சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் சுமார் 18 ஆயிரம் பேர் உயிரை பறிகொடுத்தனர். லட்சகணக்கானோர் வாழ்விடங்களை இழந்து பரிதவித்தனர். இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிக்காக அந்த நகரம் முழுவதும் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. பெரும் துயரில் இருந்த அப்பகுதி மக்களுக்கு, ஒலிம்பிக் சுடர் ஓட்டம் அங்கு நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த துயரில் இருந்து மீண்டுவருவதற்கு இது ஒரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

சுடரை ஏந்தும் முதல் நபர்

வியாழக்கிழமை நடைபெறும் விழாவில் நோரியோ சாசாகி (Norio Sasaki) முதல் நபராக ஒலிம்பிக் சுடரை ஏந்த உள்ளார். 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை பெண்கள் கால்பந்து போட்டியில் ஜப்பான் அணியை சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்த அவருக்கு இந்த கவுரம் கொடுக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் 15 பேர் கொண்ட குழு ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்லவுள்ளது. இந்த தொடர் ஓட்டத்தில் 2011 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற அணியின் கேப்டனாக இருந்த ஹோமாரா சாவா (Homare Sawa) பங்கேற்கிறார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: