• HOME
  • »
  • NEWS
  • »
  • live-updates
  • »
  • Lords test India win|ஆண்டர்சனுக்காக பழிதீர்க்கப் போய் பல்பு வாங்கிய இங்கிலாந்து: இந்திய ஆக்ரோஷத்துக்கு சரணடைந்து படுதோல்வி

Lords test India win|ஆண்டர்சனுக்காக பழிதீர்க்கப் போய் பல்பு வாங்கிய இங்கிலாந்து: இந்திய ஆக்ரோஷத்துக்கு சரணடைந்து படுதோல்வி

வெற்றிக்குஷியில் இந்தியா. அபார லார்ட்ஸ் வெற்றி.

வெற்றிக்குஷியில் இந்தியா. அபார லார்ட்ஸ் வெற்றி.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மறக்க முடியாத ஒரு வெற்றியை பெற்றது.

  • Share this:
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மறக்க முடியாத ஒரு வெற்றியை பெற்றது. ரிஷப் பந்த், இஷாந்த் சர்மா ஆட்டமிழந்தவுடன் ஆட்டம் திரும்பியது, ஷமியின் அரைசதம் பும்ராவுடனான 89 ரன்கள் கூட்டணி அதன் பிறகான பயங்கர வேகப்பந்து வீச்சு ஆகியவற்றினால் இங்கிலாந்தை 51 ஓவர்களில் மடித்து 151 ரன்கள் வித்தியாச அபார வெற்றியை ஈட்டியது இந்திய அணி.

கடைசி விக்கெட்டை காலி செய்த சிராஜ், கொண்டாட்டத்தில் இந்தியா


இங்கிலாந்து அணியில் 5 பேர் டக் அடித்தனர். இதில் மார்க் உட் நாட் அவுட். அதிகபட்சமாக ஜோ ரூட் மட்டுமே 33 ரன்கள் எடுத்தார். ஆனால் இவரும் பும்ராவின் அசாத்தியமான பந்து வீச்சுக்கு கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறிய பிறகு பட்லர் (25), மொயின் அலி(13) கொஞ்ச நேரம் தடுத்துப் பார்த்தனர். ஆனால்  சிராஜ் வந்தார் மொயின் அலி, சாம் கரண் ஆகியோரை அடுத்தடுத்து காலி செய்தார், பிறகு இதே சிராஜ் மீண்டும் கடைசியில் பட்லர், ஜேம்ஸ் ஆண்டர்சனை ஒரே ஓவரில் காலி செய்ய இந்திய அணி பயங்கர கொண்டாட்டத்தில் மூழ்கியது.

ஆண்டர்சனுக்காக பழிதீர்க்க நினைத்து பொய்த்துப் போன பவுன்சர் உத்தியில் மேட்சைக் கோட்டை விட்ட இங்கிலாந்து:

நேற்று காலை இங்கிலாந்து அணி ரிஷப் பந்த் என்ன செய்வாரோ என்ற அச்சத்தில் தொடங்கியது அவரும் ஆண்டர்சனை இறங்கி வந்து ஒரு பவுண்டரி விளாசி தன் நோக்கத்தை வெளிப்படுத்தினார், ஆனால் ஆலி ராபின்சன் பந்தில் எட்ஜ் ஆகி வெளியேறினார். இஷாந்த் சர்மா 16 ரன்கள் பங்களிப்புக்குப் பிறகு ஆலி ராபின்சனிடம் எல்.பி.ஆனார்.

இங்கிலாந்தின் பவுன்சர்களை ஊதித்தள்ளிய இந்திய வீரர்கள் ஷமி, பும்ரா


அதன் பிறகுதான் இங்கிலாந்து கோட்டை விட்டது. 209/8 என்ற நிலையில் 4ம் நாள் ஆட்டத்தில் ஆண்டர்சனுக்கு பும்ரா 10 பந்துகள் வீசிய ஓவரில் முழுக்க ஷார்ட் பிட்ச் பவுன்சர்களாக வீசி அவரைக் காயப்படுத்தும் திட்டத்துடன் ஒரு பழைய மாடலைக் கடைப்பிடித்து வீசிய அநாகரிகத்துக்குப் பதில் மேட்சை வெற்றி பெற வேண்டிய இங்கிலாந்து பழிதீர்ப்பு பவுன்சர் பந்து வீச்சில் இறங்கியது. இந்த இடத்தில் மேட்சைக் கோட்டை விட்டது.

அன்று டாஸ் வென்று முதலில் பேட் செய்யாமல் பவுலிங் எடுத்த போதே ஜோ ரூட் தங்கள் அணியின் பலவீனமான பேட்டிங்கினால்தான் அவர் பவுலிங் எடுத்தா என்பதை கோலி குறித்துக் கொண்டார். நாமும் எழுதினோம் டாஸில் வென்று மேட்சைக் கோட்டை விட்ட ஜோ ரூட் என்று. ஆனால் கடைசி நாளில் ஆண்டர்சனுக்கு பும்ராவின் பவுன்சர் மழைக்கு பழித்தீர்க்க பும்ராவை எப்படியாவது அடித்து காயப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்து வீசியதில் இங்கிலாந்து தோல்வி அடைந்தது,

2 அசத்தல் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இஷாந்த்சர்மா.


இருமுறை பும்ரா ஹெல்மெட்டில் வாங்கினார், கன்கஷன் டெஸ்ட் செய்யப்பட்டது, ஆனால் அது அவரது உறுதியை மேலும் வலுப்படுத்தியது, பின்னால் நின்று கொண்டிருந்த பட்லர் வேறு ஸ்லெட்ஜிங் செய்து வெறுப்பேற்றுவதற்கு பதிலாக ஷமியையும் பும்ராவையும் உசுப்பேற்று வலுப்படுத்தி விட்டார்.

அந்தக் கட்டத்தில் இங்கிலாந்து பந்து வீச்சு ஸ்டம்புகளுக்கு வீசாமல் ஷார்ட் பிட்சாக வீசி விரயம் செய்ததோடு மேட்சையே கோட்டை விட்டது. ஆண்டர்சன் தனக்கு நடந்ததற்கு அவர் மட்டும் பழிதீர்ப்பில் இறங்கியிருந்தால் பரவாயில்லை, அணியின் பவுலிங் கேப்டனாக அனைவரையும் பவுன்சர் வீசச் செய்து மேட்சை இழக்கப் பெரும் காரணமானார் ஆண்டர்சன், மைண்ட் கேமில் இங்கிலாந்து ஷமி, பும்ராவின் ஆக்ரோஷத்துக்கு முன் சரண் அடைந்ததோடு, இதெல்லாம் தேவையில்லாத பழிதீர்ப்பு வேலை என்பதை இந்தியா வெற்றி பெற்று நிரூபித்தது.

கோலி-ஆண்டர்சன்.


அன்று ஆண்டர்சனுக்கு அடி கொடுத்து காயப்படுத்த நினைத்தது உண்மைதான், ஆனால் அதற்காக அன்றைய தினம் முடிந்தவுடனேயே பும்ரா மன்னிப்புக் கோரினார், ஆனால் ஆண்டர்சன் தனக்காக இங்கிலாந்தை தோற்கடித்து விட்டார் நேற்று. பவுன்சர் மேல் பவுன்சராக வீசி இங்கிலாந்து பவுலர்கள் களைப்படைந்தனர். பும்ரா, ஷமி அசைந்து கொடுக்கவில்லை. மாறாக இங்கிலாந்து கவனம்தான் சிதறியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஷமி 70 பந்துகளில் 6 பவுண்டரி 1 மிகப்பெரிய சிக்ஸ், அந்த சிக்ஸில்தான் அரைசதம் கடந்தார், 56 நாட் அவுட். பும்ரா 34 நாட் அவுட். இருவரும் 20 ஓவர்களில் 89 ரன்கள் விளாசினர். 298/8 என்ற நிலையில் கோலி டிக்ளேர் செய்தார். இங்கிலாந்து வெற்றி பெற சாத்தியமே இல்லை என்று ஆனது.

பும்ரா பந்து வீசும் காட்சி.


அதன் பிறகு நடந்தது இங்கிலாந்து பேட்டிங்குக்கு செய்யப்பட்ட இறுதிச் சடங்கு. 80களின் மே.இ.தீவுகளின் ஆக்ரோஷ பவுலிங்குடன் வக்கார் யூனிஸ், வாசிம் அக்ரம், ஷோயப் அக்தர் ஆகியோரது துல்லியமும் சேர இங்கிலாந்து பேட்டிங் நிலைகுலைந்தது.

ரோரி பர்ன்ஸுக்கு ஆக்ரோஷமாக ஒரு பந்தை பும்ரா வீச லீடிங் எட்ஜில் சிராஜ் கேட்ச் எடுக்க பர்ன்ஸ் டக் அவுட். அடுத்த ஓவரில் டாம் சிப்லிக்கு ஷமி வீசியது அபாரமான ஒரு அவுட்ஸ்விங்கர் லேசான எட்ஜில் காலியானார். இவரும் டக்.

லார்ட்ஸில் தோனி தலைமையில் வென்ற போது பவுன்சர் மழையில் 7 விக்கெட்டுகளைச் சாய்த்த இஷாந்த் சர்மா ஹசீப் ஹமீதை இன்ஸ்விங்கரில் எல்.பி.செய்தார்

ஜானி பேர்ஸ்டோ கடும் பிரஷரில் ஆடினார், 24 பந்துகளில் 2 ரன்களையே அவர் எடுத்தார், இஷாந்த் சர்மா இவரையும் எல்.பி. செய்தார், ரிவியூவில் அவுட் கொடுக்கப்பட்டது. இங்கிலாந்து 67/4 என்று டீ டைம் போது தோல்வி முகம் காட்டியது.

பட்லருக்கு முக்கியமான கேட்சை விட்ட கோலி, காப்பாற்றிய சிராஜ்:

தேநீர் இடைவேளைக்குப் பிறகு இங்கிலாந்தின் ஆபத்பாந்தவன் ஜோ ரூட், பும்ராவின் அபாரமான இண்டக்கிங் அவுட்ஸ்விங்கரில் காலியானார். ரூட் காலியான பிறகு பட்லருக்கு கோலி கேட்சை விட்டார், பேட்டிங்கும் வரவில்லை பீல்டிங்கிலும் இப்படிச் செய்து கேட்சை விட்டு மேட்சையும் விட்டாரோ என்று நினைக்க வைத்தது.ஆனால் அங்குதான் சிராஜ் மிகச்சிறப்பாக வந்து மொயின் அலியையும் சாம்கரணையும் அடுத்தடுத்து வீழ்த்தினார், பிறகு இங்கிலாந்து டிரா செய்ய வாய்ப்பு இருக்கும் என்று நினைத்த போது பட்லரையும் காலி செய்தார். ஆலி ராபின்சன் 9 ரன்களில் பும்ராவிடம் எல்.பி.ஆனார். கடைசியில் ஆண்டர்சனை சிராஜ் பவுல்டு செய்தார்.

இங்கிலாந்து 120 ரன்களுக்குச் சுருண்டது. இந்த டெஸ்ட் போட்டியில் சிராஜ் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா 3 விக்கெட்டுகளையும் ஷமி 1 விக்கெட்டையும் இஷாந்த் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற மறக்க முடியாத வெற்றியை ஈட்டியது இந்திய அணி. ஆட்ட நாயகனாக கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: