சுவர் ஏறிக்குதித்து ஓடிய காவலர்... அசராத பெண் காவலர்...! சாத்தான்குளம் காவல் நிலையத்தில் என்னதான் நடந்தது?

சிசிடிவி காட்சிகள் அழிப்பு.. சாட்சியம் கொடுத்த பெண் காவலருக்கு மிரட்டல்.. விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை.. நீதிபதிக்கு அவமதிப்பு.. சாத்தான் குளம் காவல்நிலையம் தமிழ்நாட்டில்தானே இருக்கிறது? என்று கேள்வி எழுகிறது என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.. அப்படி, என்னதான் நடந்தது சாத்தான்குளம் காவல்நிலையத்தில்?

  • Share this:
சாத்தான்குளம் காவலர்களால், சித்திரவதைக்குள்ளான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரின் கொடூர மரணம், தமிழக காவல்துறையையே புரட்டிப்போட்டுள்ளது.

தந்தை மகனின் மரணம் குறித்து, விசாரிக்கும்படி, கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவின்படி, விசாரணையை தொடங்கி மாஜிஸ்திரேட் பாரதிதாசன், சம்பவம் நடந்த சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு 28 ஆம் தேதி சென்றுள்ளார். சாத்தான்குளம் காவல்நிலையத்திற்குள் அவர் எதிர்கொண்டவை நாட்டையே உலுக்கியுள்ளது.


காவல்நிலையத்தில் இருந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், டி.எஸ்.பி பிரதாபன் வரவேற்காமல், மிரட்டுவது போன்ற உடல்மொழியை வெளிப்படுத்தியதாக தனது அறிக்கையில் சொல்லியுள்ளார் மாஜிஸ்திரேட் பாரதிதாசன்.

உரிய நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா பதிவுகளை மாஜிஸ்திரேட் ஆய்வு செய்துள்ளார்.

அப்போது, சிசிடிவி காட்சிகள் தினசரி அழியும் படி செட்டிங் செய்யப்பட்டிருந்ததும், சம்பவம் நடந்த 19 ஆம் தேதி பதிவான காட்சிகள் தொடங்கி, எல்லாமும் முற்றிலும் அழிக்கப்பட்டிருந்தாகவும் மாஜிஸ்திரேட்டின் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.முக்கிய சாட்சியமாக இருக்கும் பெண் காவலர் ரேவதியின் வாக்குமூலத்தை பதிவு செய்யவிடாமல் போலீசார் திட்டமிட்டு தொல்லை கொடுத்தாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




படிக்க: டிக்டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்குத் தடை - என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும்?

படிக்க: இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு - மனிதர்கள் மீது சோதனை








விசாரணையை சீர்குலைக்கும் நோக்கில், காவலர்கள் அங்கு அசாதாரண சூழலை ஏற்படுத்தினார்கள் என்று தனது அறிக்கையில் மாஜிஸ்திரேட் கூறியுள்ளார்.

சாட்சியத்தின் படி, கைதிகள் இருவரையும் காவல்நிலையத்தில் இருந்த காவலர்கள் விடிய விடிய லத்தியால் அடித்தது தெரியவந்துள்ளது என்கிறது அவரது அறிக்கை. அப்படி அடித்ததில், லத்தி, டேபிள் ஆகியவற்றில் ரத்தக்கறை படிந்துள்ளது என்கிறது மாஜிஸ்திரேட்டின் அறிக்கை.

லத்திகளை ஒப்படைக்குமாறு கேட்டும், பதில் அளிக்காமல் காவலர்கள் இருந்ததாகவும், கட்டாயப்படுத்தியதால்தான் லத்தியை அங்கிருந்தவர்கள் கொடுத்தாகவும் பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார்.

அந்த சமயத்தில்தான், அங்கிருந்த காவலர் மகாராஜன், மாஜிஸ்திரேட்டை முதுகிற்கு பின்னால், அவமானகரமான வார்த்தைக்கூறியதாகவும் நீதிபதி கூறியுள்ளார். சில காவலர்கள் ஒருமையில் பேசியவாறு நின்றனர். அதனால், அவர்கள் மீது கை வைத்து தள்ளி, அழைத்துச்செல்ல வேண்டியிருந்ததாக கூறியுள்ளார்.

லத்தியை கேட்டபோது, அங்கிருந்த காவலர் சுவர் எகிறி குதித்து தப்பி ஓடியதாகவும் விசாரணை மாஜிஸ்திரேட் குறிப்பிட்டுள்ளார்.  நடந்தவற்றை போலீசார் பலரும் தங்களது செல்போனில் அனுமதியின்றி பதிவு செய்ததுடன், நீதிமன்ற பணியாளர்களை மிரட்டியதாகவும் மாஜிஸ்திரேட் கூறியுள்ளார்.

மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் இந்த அறிக்கையின் படி, போலீசாரின் மீது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளது.

நீதிமன்றத்தில் தீர்ப்பில், போலீசாருக்கு எதிராக சாட்சியம் சொன்ன பெண் காவலர் ரேவதிக்கும், அவரது குடும்பத்தாருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், உரிய பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

மேற்ச்சொன்ன சம்பவத்தால், சுதந்திர இந்தியாவில் இதுவரை நடந்திராத வகையில், சாத்தான் குளம் காவல்நிலையத்தை வருவாய்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்லையில், மீண்டும் சாத்தான்குளம் காவல்நிலையம் சென்ற மாஜிஸ்திரேட் பாரதிதாசன், பெண் காவலர் உள்ளிட்டோரிடம் புதிதாக வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.

அத்துடன், சித்திரவதையில் படுகாயமுற்ற தந்தை, மகனையும் ஆய்வு செய்து, சிறையில் அடைக்கலாம் என "பிட்" சான்றிதழ் கொடுத்த சாத்தான்குளம் GH பொறுப்பாளர் தலைமை மருத்துவர் ஆத்தி குமாரிடம் நீதிபதி பாரதிதாசன் விசாரணை நடத்தினார்.

தந்தையும் மகனும் மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில், மறுநாள் முதல் அவர்களுக்கு தகுதிச்சான்றிதழ் வழங்கிய அரசு மருத்துவர் வினிலா 4 நாட்கள் மருத்துவ விடுப்பில் சென்றார்.

விடுப்பு முடிந்து இன்று அவர் பணியில் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால்,தற்போது அவர் மேலும் 15 நாட்கள் விடுப்பில் சென்றது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

எப்படி தாக்கிய போலீசாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதோ, அதேபோல், காயங்களுடன் இருந்தவர்களை சிறையில் அடைக்க காரணமாக இருந்த மருத்துவர் மீதும், மாஸ்திரேட் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதில் இன்னோர் அதிர்ச்சி என்னவென்றால், இந்த விவகாரத்தை சிபிஐக்கு மாற்றியதிலும் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சாத்தான்குளம் காவல்நிலையத்தை சுற்றி வசிக்கும் பலரும், இருவரின் மரணம் குறித்தும் நடக்கும் விசாரணை பற்றி அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இந்த வழக்கில், தொடக்கம் முதலே, பல தரப்பிலும் தாமதம் நிலவுவதாக அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மூத்த காவல்துறை அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவின்படி, சிபிஐ விசாராணைக்கு முன்பு, தற்காலிகமாக இந்த விவாகரத்தில் தமிழக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

தந்தை மகனின் உடலில் காயங்கள் இருந்துள்ளதை உறுதி செய்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட காவலர்களின் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

நெல்லை சிபிசிஐடி டி.எஸ்.பி அணில்குமார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரிப்பாரா? சம்பந்தப்பட்ட காவலர்கள் கைது செய்யப்படுவார்கள்? பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா? என பல கேள்விகள் எழுகின்றன.
First published: July 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading