Home » News » Live-updates » DMK LEADER MK STALIN COVID 19 STATEMENT VJR

அரசியல் லாபத்திற்காக கோடி கணக்கான மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம் - மு.க.ஸ்டாலின் அறிக்கை

”மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கி, உதவிகள் செய்து, மத்திய அரசிடம் வாதாடுவதற்குப் பேர் அரசியல் அல்ல”

அரசியல் லாபத்திற்காக கோடி கணக்கான மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம் - மு.க.ஸ்டாலின் அறிக்கை
மு.க.ஸ்டாலின்
  • Share this:
அரசியல் சுயநலத்துக்காகவும், லாபத்திற்காகவும் கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு தயவுசெய்து விளையாடிவிட வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரிய வர்க்க பேதக் கண்டுபிடிப்பை வெளியிட்டு நகைச்சுவை பரிமாறுவதை நிறுத்திவிட்டு, கொரோனா தொற்றை உண்மையில் தடுத்த நிறுத்தப் பாருங்கள். வெறும் கையைத் தட்டி, விளக்கேற்றி, மணி அடித்து, கொரோனாவை விரட்டி விடலாம் என்று மத்திய அரசு நினைக்கிறது. பேட்டி கொடுத்தே, அதில் தவறான செய்திகளைப் பேசி அரசியல் செய்தே, கொரோனாவை ஒழித்துவிடலாம் என்று மாநில அரசு நினைக்கிறது. இவை இரண்டுக்கும் மத்தியில்தான் மக்களின் வாழ்க்கை ஊசலாடிக்கொண்டு இருக்கிறது.

தொடர்ந்து துறைச் செயலாளர், துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், அது போதாதென்று மற்றொரு அமைச்சர் ஆகியோரின் கொரோனா குறித்த பேட்டிகளுக்குப் பிறகு, அடுத்து “கிளைமேக்ஸ்” காட்சி போல, நேற்றைய தினம் (16.4.2020), தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், கொரோனாவை ஒழித்துவிட்டதாக தனக்குத் தானே முதுகில் தட்டி முறுவலித்துக் கொள்கிறார்.


'இன்னும் இரண்டு மூன்று நாளில் கொரோனாவே இருக்காது' என்று ஆரூடம் சொல்லி இருக்கிறார். இதற்கு இவர் காட்டிய புள்ளிவிவரத்தைப் பார்க்கும் போது, இவர் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றித் திசைதிருப்புகிறாரா, அல்லது தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறாரா எனத் தெரியவில்லை.

'நேற்றைய தினம் 36 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள், இன்றைய தினம் 25 பேர்தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அப்படியானால் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகத்தானே அர்த்தம்" என்று கேட்கும் அவரைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. அவரே சொல்கிறார்; இதுவரை 17 ஆயிரத்து 835 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, அதில் 1383 பேரின் முடிவுகள் வரவில்லை என்கிறார்.சுமார் 18 ஆயிரம் என்பது தமிழ்நாட்டு மக்கள் தொகையில் எத்தனை சதவிகிதம் என்பதை அவருக்கு அருகில் விவரம் தெரிந்தவர்கள் இருந்தால் சொல்ல வேண்டும்.

மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கி, உதவிகள் செய்து, மத்திய அரசிடம் வாதாடுவதற்குப் பேர் அரசியல் அல்ல; அக்கறை. குறை சொல்வதற்காகவே, தி.மு.க.,வை நடத்துவதாகச் சொல்லி இருக்கிறார் முதல்வர். 'காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பதைப் போல', நாங்கள் சொல்லும் ஆலோசனைகள் கூட அவருக்குக் குறைகளாகத் தெரிகின்றன. நாங்கள் இன்னும் குறைகள் சொல்ல ஆரம்பிக்கவில்லை.கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையிலிருந்த தாமதம், மெத்தனம், அலட்சியம், அரசு நிர்வாகத்தின் மீதான புகார்கள், ஜனவரி இறுதியிலிருந்து சுகாதாரத் துறை கொள்முதல்களில் அரங்கேறிய மர்மங்கள், மத்திய அரசிடம் எதையும் வாதாடிப் பெற முடியாமல் போவதற்கான உண்மையான காரணங்கள், பலவீனங்கள்,கொரோனாவை வைத்து ஆளும் அமைச்சரவைக்குள் நடக்கும் கீழ்மையான அரசியல் எதிர்வினைகள், அவை குறித்தெல்லாம் நாங்கள் இன்னும் பேசவில்லை; எப்போதும் பேசத்தயார்!

மீண்டும் முதலமைச்சருக்குச் சொல்வது, அரசியல் செய்யும் நேரம் இதுவல்ல! நோயை மறைக்காதீர்கள்; பொய்க்கணக்குக்கான தவறான புள்ளிவிவரங்களை அள்ளிவீசாதீர்கள். பரிசோதனைகளை அதிகப்படுத்துங்கள். உபகரணங்கள், கருவிகளை உடனடியாக வாங்குங்கள். பிழையான, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் தராதீர்கள். எப்படியாவது மக்களைக் காப்பாற்றுங்கள்.

நோயை மறைப்பது என்பது உங்களை ஏமாற்றிக் கொள்வது மட்டுமல்ல; நாட்டு மக்களை ஏமாற்றுவதுமாகும். உங்களது அரசியல் சுயநலத்துக்காகவும், லாபத்திற்காகவும் கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு தயவுசெய்து விளையாடிவிட வேண்டாம் என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொள்கிறேன்.

'கொரோனா என்பது பணக்கார வியாதி, ஏழைகளுக்கு வராது' என்ற அரிய வர்க்க பேதக் கண்டுபிடிப்பை வெளியிட்டு நகைச்சுவை பரிமாறுவதை நிறுத்திவிட்டு, கொரோனா தொற்றை உண்மையில் தடுத்த நிறுத்தப் பாருங்கள்!

என்னுடைய இந்த விளக்கத்தைக் கண்டு பதறாமல், 'பார் இதற்கும் பதிலளிக்கிறேன் பேர்வழி' என்று, இருக்கும் நேரத்தையும் வீணாக்காமல்; கொரோனா தடுப்பு- உபகரணங்கள் கொள்முதல் - பரவலான பரிசோதனை - பாங்கான சிகிச்சை - சிறந்த நிவாரணம் - சீரான மறுவாழ்வு ஆகிய ஆக்கபூர்வமான அணுகுமுறைகளைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து, செம்மையாகச் செயலாற்றி, தமிழ் மக்களைப் பாதுகாத்திட வேண்டும் என்று மிகுந்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்றுள்ளார்.First published: April 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading