வசந்தபாலன் - அர்ஜூன் தாஸ் இணையும் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது

நடிகர் அர்ஜுன் தாஸ்

இயக்குநர் வசந்தபாலன் தன் நண்பர்களுடன் துவங்கிய அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் முதல் படத்தின் ஷுட்டிங் தொடங்கியது

  • Share this:
இயக்குநர் ஷங்கருடன் துணை, இணை இயக்குநராக பணியாற்றி ஆல்பம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தொடர்ந்து வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள தேசிய விருது பெற்ற இயக்குநரான வசந்தபாலன், கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை இயக்கியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவராவார்.

தற்போது அவர், தான் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய ஜி.வி.பிரகாஷ் நடித்து, இசையமைக்கும் ‘ஜெயில்’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றன. இவற்றில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை அதிதி ராவ் ஆகியோர் இணைந்து பாடிய ‘காத்தோடு காத்தானேன்...’ பாடல் 14 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

தற்போது, விருதுநகரில் காமராஜர் படித்த நூறு ஆண்டுகளைக் கடந்த பெருமைமிகு பள்ளியான க்ஷத்திரிய வித்யாசாலாவில் தன்னுடன் பயின்ற மூன்று நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் என்னும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை இயக்குநர் வசந்தபாலன் தொடங்கியுள்ளார்.



அந்நிறுவனத்தின் முதல் படத்தை வசந்தபாலனே இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அர்ஜுன் தாஸ் கதைநாயகனாகவும், துஷாரா விஜயன் நாயகியாகவும், சிங்கம்புலி, பரணி மற்றும் ஷா ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர்.

வெயில், ஜெயில் ஆகிய படங்களுக்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் இத்திரைப்படத்தின் இசைக்காக வசந்தபாலனுடன் இணைகிறார். எட்வின் சாக்கே ஒளிப்பதிவை கவனிக்க, கலை இயக்குநராக சுரேஷ் கல்லேரி பணியாற்றுகிறார். எம்.ரவிக்குமார் படத்தொகுப்பை கையாள்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தனது முந்தைய படங்களைப் போலவே, புதிய படமும் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அழுத்தமாகவும், அதே சமயம் ஜனரஞ்சகமாகவும் இருக்கும் என்று இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: