ஹோம் /நியூஸ் /Breaking and Live Updates /

அங்கே தேசிய விருது.. இங்கு ஃப்ளாப்.! மலையாள படத்தை பங்கம் செய்த பி.வாசு - கார்த்திக் கூட்டணி!

அங்கே தேசிய விருது.. இங்கு ஃப்ளாப்.! மலையாள படத்தை பங்கம் செய்த பி.வாசு - கார்த்திக் கூட்டணி!

பி.வாசு-கார்த்திக் கூட்டணி

பி.வாசு-கார்த்திக் கூட்டணி

தெனாலி, வானவில், ப்ரியமானவளே, கண்ணுக்கு கண்ணாக ஆகிய படங்களுடன்  தீபாவளியை முன்னிட்டு 2000, அக்டோபர் 26 சீனு வெளியானது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

1992 இல் பி.வாசு இயக்கத்தில் கார்த்திக் இது நம்ம பூமி படத்தில் நடித்தார். குஷ்பு ஜோடி, முக்கிய கதாபாத்திரத்தில் ராதாரவி. இளையராஜா இசையில் பாடல்கள் ஹிட்டாயின. என்றாலும் படம் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியை பெறவில்லை. அதேபோல் வெளியே சொல்ல முடியாத தோல்வியுமில்லை.

இது நம்ம பூமி வெளியாகி எட்டு வருடங்கள் கடந்த பிறகு 2000 இல் மீண்டும் பி.வாசு இயக்கத்தில் சீனு என்ற படத்தில் கார்த்திக் நடித்தார். தெனாலி, வானவில், ப்ரியமானவளே, கண்ணுக்கு கண்ணாக ஆகிய படங்களுடன்  தீபாவளியை முன்னிட்டு 2000, அக்டோபர் 26 சீனு வெளியானது.

தீபாவளி அன்று படம் பார்த்த ரசிகர்கள் திணறிப் போனார்கள். யாருக்காக, எதற்காக இந்தப் படத்தை பி.வாசு எடுத்தார் என்று ஒருவருக்கும் புரியவில்லை. தமிழ் சினிமாவில் கர்நாடக சங்கீதத்தை, பாடறியேன் படிப்பறியேன் என்று கொஞ்சம் இறங்கி செய்தால்தான் ரசிப்பார்கள். இல்லை தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி என்று ஓங்கி அடிக்க வேண்டும். அவர்களிடம் போய் சாஸ்திரிய சங்கீதம்,

அதனை பாடுகிற சாத்வீக குடும்பம் என்று கதைவிட்டால் தீபாவளி உக்கிரத்துடன் படம் பார்க்க வருகிற ரசிகன் எப்படி சகிப்பான். படம் அட்டர் ப்ளாப்பானது. இந்த சீனு படத்தின் கதைக்குப் பின்னால் இன்னொரு கதை உள்ளது. அது ஒரு வெற்றியின் கதை.

1991 ஆரம்பத்தில் சிபி மலையில் இயக்கத்தில் மோகன்லால் ஒரு படம் நடிப்பதாக உறுதியாகி லோகிததாஸ் திரைக்கதையில் ஸ்கிரிப்டும் தயாரானது. நெடுமுடிவேணு, ஊர்வசி, கீதா என்று உடன் நடிப்பவர்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இசை ரவீந்திரன் மாஸ்டர்.

படப்பிடிப்புக்கு சில தினங்கள் முன்பு ஒரு படம் வெளியானது. அதன் கதை, அச்சு அசலாக சிபி மலையில் எடுப்பதாக இருந்த கதையை கொண்டிருந்தது. மொத்த யூனிட்டும் அதிர்ந்து போனது. படப்பிடிப்புக்கு இன்னும் சில தினங்களே உள்ளன. ஏற்கனவே எழுதி வைத்த கதையை படமாக்க முடியாது. என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டிருக்காமல் அனைவரும் சேர்ந்து ஒரு புதிய கதையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Read More: சென்னை விமான நிலையத்தில் அஜித்... வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!

அப்படி ஒரு சில தினங்களில் அவர்கள் உருவாக்கிய கதை சிபி மலையில் இயக்கத்தில் பரதம் என்ற பெயரில் வெளியானது. கர்நாடக சங்கீதத்தில் பிரசிதப் பெற்றவர் கல்லூர் ராமநாதன். அவரது தம்பி கல்கல்லூர் கோபிநாதனும் சிறந்த பாடகர். அண்ணன்தான் அவருக்கு குரு. அண்ணனிடம் உள்ள ஒரே கெட்டப் பழக்கம் மது அருந்துவது.

இதனால், ஒருமுறை அண்ணனுக்குப் பதில் தம்பி பாட வேண்டியதாகிறது. அதன் பிறகு அண்ணனை தவிர்த்து தம்பியை ஒப்பந்தம் செய்ய ஆரம்பிக்கின்றனர். தம்பி மறுக்கிறான். அண்ணனுக்கு தம்பி மீது குரோதம் வளர்கிறது.

தியாகராஜர் ஆராதனையில் பாட விழாக்குழு தம்பியை தேர்வு செய்ய அண்ணனின் ஈகோ உச்சத்துக்கு செல்கிறது.

தனது தவறை உணர்ந்து கொள்ளும் அண்ணன் தம்பியை பாடும்படி பணிக்கிறான். தம்பி பாடுகையில் அண்ணன் நிறை போதையில் வந்து வாழ்த்திவிட்டு இருட்டில் கரைந்து போகிறார். அதன் பிறகு அவரிடமிருந்து தகவல் ஏதுமில்லை. காசிக்கு போவதாக வரும் கடிதம் அந்த குடும்பத்துக்கு ஆறுதல் அளிக்கிறது. இந்நிலையில் அவர்கள் குடும்பத்தில் தங்கைக்கு திருமணம் ஏற்பாடாகிறது. அண்ணன் இல்லாமலே திருமணம் நடக்கயிருக்கிறது.

அதற்கு முந்தைய தினம் வரும் அழைப்பின் பேரில் மார்ச்சுவரியில் சென்று பார்க்கையில் அண்ணன் விபத்தில் இறந்து அங்கே சடலமாக படுத்திருக்கிறார். இதனை சொன்னால் திருமணம் தடைபடும் என்ற நிலையில் அண்ணன் இறந்ததை மறைத்து தம்பி திருமணத்தை நடத்தி வைக்கிறான். உண்மை தெரிய வருகையில் குடும்பத்தில் புயலடித்து, அண்ணியின் புரிந்துணர்வால் குடும்பத்தில் மறுபடி நிம்மதி பிறக்கிறது.

இதில் அண்ணனாக நெடுமுடி வேணுவும், தம்பியாக மோகன்லாலும், அண்ணியாக கீதாவும், மோகன்லால் காதலிக்கும் பெண்ணாக ஊர்வசியும் நடித்திருந்தனர். மொத்தம் 8 பாடல்கள். அனைத்தையும் சாஸ்திரிய சங்கீதத்தில் இழைத்திருந்தார் ரவீந்திரன் மாஸ்டர். படம் வெளியாகி 125 தினங்கள் ஓடி மகத்தான வெற்றியை பெற்றது.

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மோகன்லாலும், சிறந்த பாடகருக்கான தேசிய விருதை ஜேசுதாஸும், ஸ்பெஷல் மென்ஷன் விருதை ரவீந்திரன் மாஸ்டரும் பெற்றனர். சாஸ்திரிய சங்கீதத்த ரசிக்கிற மனம் மலையாளிகளுக்கு உண்டு. ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, சித்திரம் போன்ற பல படங்களில் சாஸ்திரிய இசையும், பாடலும் நிறைந்திருக்கும். இரண்டுமே வெற்றி பெற்ற படங்கள். சித்திரம் ஒரு வருடம் ஓடியது.

மூன்று தேசிய விருதுகளை வென்ற பரதம் படத்தை பி.வாசு சீனு என்ற பெயரில் ரீமேக் செய்தார். இதில் அண்ணன் பி.வாசு, தம்பி கார்த்திக். சாஸ்தரிய சங்கீதம் என்று இவர்கள் இருவரும் இம்சை செய்ததில் ரசிகர்கள் பாதியிலேயே தியேட்டரைவிட்டு தெறித்து ஓடினார்கள்.

Read More: V என்றால் வெற்றி.. டப்பிங் முடிஞ்சுது.. வாரிசு அப்டேட் கொடுத்த நடிகர் ஸ்ரீமன்!

களத்தூர் கண்ணம்மா உள்பட பல நல்ல தமிழ்ப் படங்களை ரீமேக் என்ற பெயரில் மலையாளிகள் சிதைத்திருக்கிறார்கள். அதற்கெல்லாம் மரண அடி தருவது போல் பரதம் படத்தை பி.வாசு சீனு என்ற பெயரில் பங்கம் செய்து பழி தீர்த்தார். இந்த ரத்தப்படலம் நடந்து நேற்றுடன் 22 வருடங்கள் நிறைவு பெற்று இன்று 23 வது வருடம் தொடங்குகிறது.

Published by:Srilekha A
First published:

Tags: Kollywood, Tamil Cinema, Tamil cinema news