நள்ளிரவில் பற்றி எரிந்த ராட்சத கிரேன்.. உயிர்தப்ப குதித்த க்ளீனர் தலையில் அடிப்பட்டு உயிரிழப்பு

தீப்பற்றி எரிந்த கிரேன்

வாகனத்தின் மேல் பகுதியில் அமர்ந்திருந்த கிளீனர் சமீம் அஹமத் தீப்பற்றி எரிவதை பார்த்து ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்துவிட்டு வாகனத்தில் இருந்து கீழே குதித்துள்ளார்.

  • Share this:
கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்.  இவர் தொழிற்சாலைகளில் உயரமான இடங்களில் பணிகள் மேற்கொள்ள பயன்படுத்தப்படும் 14 சக்கரங்கள் கொண்ட ரூபாய் 8 கோடி மதிப்பிலான ராட்சத கிரேன் வாகனத்தை வாடகைக்கு அனுப்பி வைத்து வருகிறார். அதன்படி அந்த வாகனம் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே இயங்கும் தனியார் தொழிற்சாலைக்கு வந்தது. இந்த வாகனத்தை, தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் பத்ரிநாத் என்பவர் ஓட்டி வந்தார். கிளீனர்களாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த் டெல்லியை சேர்ந்த சமீம் அகமத் ஆகிய இருவரும் இருந்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் நேற்று பணிகளை முடித்துவிட்டு நள்ளிரவு  12.30 மணி அளவில் வாழப்பாடியில் இருந்து சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மதுரை நோக்கி புறப்பட்டுள்ளனர். வாகனம் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது வாகனம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த கருமாபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது  எதிர்பாராதவிதமாக வாகனத்தில்  திடீரென தீப்பற்றி எரிந்தது.

அப்போது வாகனத்தின் மேல் பகுதியில் அமர்ந்திருந்த கிளீனர் சமீம் அஹமத் தீப்பற்றி எரிவதை பார்த்து ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்துவிட்டு வாகனத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே சமீம் அஹமத் பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே கிரேனில் தீ மளமளவென பற்றி எரியத் தொடங்கியது இதனை அடுத்து ஓட்டுனர் மற்றும் மற்றொரு கிளீனர் வாகனத்தில் இருந்து இறங்கி தப்பினர் .

இதுகுறித்து காரிப்பட்டி காவல்துறையினர் மற்றும் வாழப்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து காரிப்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்து குறித்து காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

போலீசார் நடத்திய விசாரணையில், கிரேன் இயக்குவதற்காக பயன்படுத்தப்படும் ஆயில் டேங்கில் ஏற்பட்ட கசிவினால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால், ஆயில் நிரம்பிய டேங்கிற்குள் தீ பரவ வில்லை, இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

 
Published by:Ramprasath H
First published: