முகப்பு /செய்தி /Breaking and Live Updates / சிங்கப் பெண்களே.. மகளிர் தின விழாவில் உற்சாகப்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்

சிங்கப் பெண்களே.. மகளிர் தின விழாவில் உற்சாகப்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

இந்த நாட்டினுடைய வளர்ச்சி என்பது மகளிர் கையில்தான் இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, மேயர்களாக, அமைச்சர்களாக, அதிகாரிகளாக பெண்கள் எந்த அளவிற்கு வந்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கின்ற நேரத்தில் இன்றைக்கு நாம் கொண்டாடிக் கொண்டிருக்கக்கூடிய இந்த மகளிர் தின விழாவை பூரிப்போடு கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

மகளிரை வாழ்த்துகிறோம் என்று சொன்னால், இந்த நாட்டினுடைய வளர்ச்சி என்பது மகளிர் கையில்தான் இருக்கிறது. அதனால் மகளிரை வாழ்த்துவதன் மூலமாக இந்த நாட்டை நாம் வாழ்த்திக் கொண்டிருக்கிறோம்.

“மங்கையராகப் பிறப்பதற்கே - நல்ல

மாதவஞ் செய்திட வேண்டும் அம்மா”

என்றார் கவிமணி தேசிக விநாயகம் அவர்கள்.

‘அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்' - என்றார் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள்.

பெண்ணாக பிறப்பது மட்டுமே பெருமைக்குரியது அல்ல. அத்தகைய பெண் ஒரு சமூகத்தை வழிநடத்துபவராக உயர்ந்து நிற்பதையே நாமும் விரும்புகிறோம். ஏன் இந்த நாடும் விரும்பிக் கொண்டிருக்கிறது. அத்தகைய பெண்களைத்தான் அழகிய தமிழ்நாட்டின் கண்கள் என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சொல்லியிருக்கிறார். அத்தகைய பெண்களை உருவாக்க ஊக்கம் தரும் நாள்தான் இந்த மகளிர் நாள்.

பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது. சிறுத்தையே வெளியில் வா - என்று அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பெண்ணினத்திற்கும் அறைகூவல் விடுத்தது திராவிட இயக்கம். மாநாடு நடத்தினால் பெண்கள் அதிகமாக பங்கெடுக்க வேண்டும் என்று தந்தை பெரியார் அழைத்தார்கள். போராட்டம் நடந்தால் தனது மனைவி நாகம்மையாரையும் - தங்கை கண்ணம்மாவையும் அழைத்துச் சென்றார் பெரியார்.

'நாட்டில் நடக்கும் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை நிறுத்துவது என் கையில் இல்லை, தமிழ்நாட்டில் இருக்கும் இரண்டு பெண்களின் கையில் தான் இருக்கிறது" என்று 1922-ஆம் ஆண்டு அண்ணல் காந்தியடிகள் சொல்லக் காரணமானவர்கள் நாகம்மையாரும், கண்ணம்மாளும். இத்தகைய வீறுகொண்ட பெண்களைப் பார்த்துத்தான் ஏராளமான பெண்கள் அரசியலுக்குள் நுழைந்தார்கள்.

இன்னும் சொன்னால், தந்தை பெரியாருக்கு 'பெரியார்' என்ற பட்டத்தைத் தந்தது யார் என்று கேட்டீர்களென்றால், பெண்கள்தான். வடசென்னை பகுதியில் இருக்கின்ற ஒற்றைவாடி கலையரங்கத்தில் தான் அந்த விழாவை நடத்தி பெண்கள் தான் தந்தை பெரியாருக்கு 'பெரியார்' என்ற அந்தப் பட்டத்தை கொடுத்தார்கள். அது வரையில் ஈ.வெ. ராமசாமி நாயக்கர்தான் என்று சொன்னார்கள். 1938-ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் அது வழங்கப்பட்டது.

அதனுடைய 50-ஆம் ஆண்டில்தான், பெரியாருடைய கனவை நனவாக்கக்கூடிய வகையிலே பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை 1989-ஆம் ஆண்டு கருணாநிதி வழங்கினார் என்பதை நான் இங்கே நினைவுபடுத்துகிறேன்’ என்று தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, அவ்வையார் விருதை நீலகிரியை சேர்ந்த கமலம் சின்னசாமிக்கும், சிறந்த பெண் குழந்தை விருதை சேலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி இளம்பிறைக்கும் வழங்கினார். சிறப்பாக செயல்பட்ட திருவள்ளூர், நாகை, நாமக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு பதக்கங்கள் வழங்கினார். கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

சிங்கப் பெண்களே என கூறி மாணவிகளை உற்சாகப்படுத்தியதுடன், வடமாநில பெண் ஒருவர் அடைக்கலம் தேடி தமிழ்நாடு வரும் பாதுகாப்பு உள்ளது என சுட்டிக்காட்டினார். தொடர்ந்து, சென்னை அண்ணா சாலையில் உள்ள காவல் நிலையத்தில் பெண் காவலர்களை சந்தித்து மகளிர் தின வாழ்த்துக் கூறினார்.

First published:

Tags: CM MK Stalin, International Women's Day