கொலையில் முடிந்த வாக்குவாதம்... மதுபோதையில் பைனான்சியர் கல்லால் அடித்து கொலை

காண்கிரீட் கல்லை கொண்டு செந்திலை கொலை செய்துள்ளதாக கைது செய்யப்பட்டுள்ள இருவரும் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

  • Share this:
சென்னை தி.நகர் கிருஷ்ணசாமி தெருவில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு காயங்களுடன் கிடப்பதாக பாண்டிபஜார் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட  உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது அவர் பெயர் செந்தில் என்பதும், அவர் தேனாம்பேட்டை தாமஸ் சாலை பகுதியை சேர்ந்த ஃபைனான்சியர் என்பதும் தெரியவந்துள்ளது.  மேலும், அவர் பெயிண்டிங் கான்ட்ராக்டராக இருந்துள்ளார். கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் செந்திலை கொலை செய்த தேனாம்பேட்டையைச் சேர்ந்த அசோகன், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோரை பாண்டிபஜார் போலீசார் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் கொலை செய்யப்பட்ட செந்தில் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு, அடிதடி வழக்கு போன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும், அதேபோல கொலை செய்த சொரி சுரேஷின் மீது கொலை வழக்கு, கட்ட பஞ்சாயத்து, ஆள்கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட செந்திலுக்கும், கொலை செய்த சொறி சுரேஷுக்கும் இடையே அப்பகுதியில் யார் கெத்து என போட்டி இருந்து வந்துள்ளது. இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு அசோகன் மற்றும் சொறி சுரேஷ் ஆகிய இருவரும் கிருஷ்ணசாமி தெருவில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்ததாகவும் அப்போது அங்கு மதுபோதையில் வந்த செந்தில் தான் செல்லும் இடங்களில் எல்லாம் நீங்கள் இருவரும் ஏன் இருக்கிறீர்கள் என்று கேட்டதாகவும் அதற்கு சொரி சுரேஷ் ரோடு என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா என்ன கேட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதில் கோபமடைந்த செந்தில், சொரி சுரேஷ் கன்னத்தில் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் சொறி சுரேஷும் அவரது நண்பரான அசோகனும் செந்திலை அடித்து துரத்திக்கொண்டு ஓடியுள்ளனர். அப்போது செந்தில் கால் தவறி கீழே விழ அருகிலிருந்த காண்கிரீட் கல்லை கொண்டு செந்திலை கொலை செய்துள்ளதாக கைது செய்யப்பட்டுள்ள இருவரும் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

செந்திலை கொலை செய்ததற்கு இந்தப் பிரச்சினை மட்டும்தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பாண்டி பஜார் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vijay R
First published: